×

அனுமதியின்றி எந்த கட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு கூடாது தேர்தல் அலுவலர் உத்தரவு

வேலூர், மார்ச் 19: மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி எந்த கட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்யக்கூடாது என கேபிள் டிவி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அனைத்து கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024க்கான கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து தற்போது நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே ஊடகங்களில் அனுமதியின்றி கட்சி சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்கள் எதுவும் ஒளிபரப்பக்கூடாது.

மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள எம்சிஎம்சி குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மட்டும் ஒளிபரப்ப வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை குழுவின் ஒப்புதல் ஏதுமின்றி ஒளிபரப்புதல் கூடாது. தேர்தல் காலங்களில் ஏதேனும் ஒரு வேட்பாளர், கட்சி அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு பற்றிய அறிக்கைகளை மிகைப்படுத்தி காட்டக்கூடாது. உண்மையாக நடைபெற்ற பிரசாரத்தை ஒளிபரப்பும்போது ஏதேனும் ஒரு வேட்பாளர், கட்சி சார்பாக சிலவற்றை புறக்கணிக்கவோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது. ஒரு பிரிவினருக்கு எதிராக பிரிவினையை தூண்டும் வகையில் ஒளிபரப்ப கூடாது. கட்சி சம்பந்தமான பொதுக்கூட்டங்கள். ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளை அனுமதியின்றி ஒளிபரப்ப கூடாது. விதிமுறைபடி பொதுதேர்தல் முடியும் வரை மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அனுமதியின்றி எந்த கட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு கூடாது தேர்தல் அலுவலர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore ,District Election Officer ,Parliamentary General Elections ,Dinakaran ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...