×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.

என் வயது 42. நான் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்கிறேன். ஆனால், அடிவயிற்றில் தொப்பை சற்று உள்ளது. சமீபமாக தினமும் காலையில் எழுந்ததும் இடுப்பும் முதுகும் வலிக்கின்றன. தினமும் காலையில் சிறிது நேரம் முதுகெலும்பு இறுக்கமானது போல் உணர்கிறேன்.
இதற்குத் தீர்வு என்ன?
– ராமலக்‌ஷ்மி, திண்டுக்கல்.

இயல்பாகவே நாற்பது வயதுக்கு மேல் சிலருக்குப் பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது, காலையில் எழுந்ததும் மெலிதான முதுகெலும்பு வலியும், முதுகெலும்பு இறுக்கமானது போன்ற உணர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போதுமான அளவு ஓய்வு எடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். மேலும், தசைப்பிடிப்பு, வைட்டமின் டி குறைபாடு, முன்கூட்டியே ஏற்படும் மெனோபாஸ் (Early menopause) சர்க்கரை நோய், ஸ்பான்டிலைட்டிஸ் (Spondylitis) எனும் முதுகெலும்பு பிரச்னை போன்றவற்றின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும்.

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையளவு சரியாக இருந்தாலும், உங்களுக்குத் தொப்பை இருக்கிறது என்கிறீர்கள். இதுவும்கூட ஒரு காரணமாய் இருக்கலாம். காலையில் எழும்போது எல்லா தசைகளும் தளர்ந்து இருக்கும். முதுகெலும்பை வயிற்றுப்பகுதியின் தசைகளும் முதுகின் தசைகளும் சேர்ந்தே தாங்குகின்றன. தொப்பையில் அதிகத் தசைகள் இருப்பதால், உங்கள் உடலின் நிலை மாறுபட்டு, முதுகெலும்பு முன்பக்கமாக அழுத்தம் பெற வாய்ப்புள்ளது. அப்போது தொப்பையால் அதிக அழுத்தம் தரப்படும். இதுவும் காலையில் முதுகு வலி ஏற்படுவதற்கும் முதுகுத்தண்டு இறுக்கமானதாக தோன்றுவதற்கும் காரணம். இதுவே, முதுகு மற்றும் இடுப்புவலிக்குக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

வாரத்துக்கு நான்கைந்து நாட்களுக்காவது தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது, முதுகுத்தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் செய்வது, தொப்பை குறைப்புக்கான பயிற்சிகள் செய்வது, தொப்பையைக் குறைப்பதற்கான டயட்டில் ஈடுபடுவது போன்றவற்றின் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு எலும்பு தேய்தல் போன்ற வேறு ஏதேனும் தீவிரமான பிரச்சனை உள்ளதா என்று டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

எனக்கு 53 வயதாகிறது. மெனோபாஸ் தொடங்கிவிட்டது. உடல் எப்போதும் மிகவும் சோர்வாக உள்ளது. நான் சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாமா? எனில், எந்தெந்த சப்ளிமெண்ட்கள்
எனக்குத் தேவை?
– ஒரு வாசகி, விருத்தாசலம்.

மெனோபாஸ் என்பது பெண்களின் மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் ஒரு காலகட்டம். இது, பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 50 வயதினில் ஏற்படும். இந்த மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்குப் பலவிதமான மன மற்றும் உடல் சார்ந்த மாற்றங்கள் நிகழும். உடலில் ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படும். அது சார்ந்த அறிகுறிகள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் வெளியேற்றத்தால் மன அழுத்தம், சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை, அதிக அளவிலான வியர்வை போன்றவை ஏற்படும். இந்தத் தருணங்களில் குடும்பத்தினரின் ஆதரவும் மற்றும் அவர்களின் ஒத்துழைப்புமே சிறந்த மருந்தாகும்.

மருத்துவர் பரிந்துரையின்படி தினமும் வைட்டமின்-இ 400 எடுத்துக்கொள்வது நல்லது. வைட்டமின்-டி மற்றும் கால்சியம் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது. கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் ஹார்மோன் மாற்றுசிகிச்சை செய்யப்படுகிறது. இவர்களுக்கு தினமும் ப்ரிமரின் (PREMARIN) 0.625mg அல்லது 1.25mgs போன்ற ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் மேட்ராக்ஸிப்ரோகெஸ்ட்ரோன் (MEDROXYPROGESTRONE) ஒவ்வொரு சுழற்சியின் கடைசி 10 நாட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் கடும் பாதிப்பு உடையவர்களுக்குத்தான். உங்கள் வீட்டருகே உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

என் வயது 35. நான் கடந்த பதினைந்து வருடங்களாக ஓட்டுநராக இருக்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக என் முழங்கைப் பகுதியில் வலி ஏற்படுகிறது. வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டால் சிறிது நேரம் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் வலிக்கிறது. எதனால் இப்படி வலி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?
– ராஜதுரை, மேட்டுப்பாளையம்.

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை ‘டென்னிஸ் எல்போ’ (Tennis elbow) என்பார்கள். டென்னிஸ் எல்போ பிரச்னை பெரும்பாலும் கையை அதிகம் பயன்படுத்தும் தொழில் செய்பவர்களுக்கு வரும். டாக்டர்கள் இதை, லேட்டரல் எபிகண்டிலிடிஸ் (lateral epicondylitis) என்பார்கள். போதுமான ஓய்வும் ஸ்ட்ரெச்சிங் போன்ற தசையை நெகிழ்த்தும் பயிற்சிகளும் இன்றி, தொடர்ந்து கைகளுக்கு வேலை தருவதால் முழங்கைப் பகுதியில் உள்ள தசைகள் பாதிப்படைகின்றன.

சிலருக்கு, இந்த வலி முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பரவும். வலி மாத்திரைகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எலும்பு மூட்டு நிபுணரை அணுகி பரிசோதிப்பது நல்லது. டென்னிஸ் எல்போ பிரச்னை தொடக்க நிலையில் இருந்தால் மாத்திரை, மருந்துகள் பிஸியோதெரப்பி, போதுமான ஓய்வின் மூலமே குணப்படுத்திவிட முடியும். தீவிரமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Prof. ,Muthiah ,Chennai ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்