×

ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை விரட்டியடித்தவர் ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு தாக்கு

திருமலை: ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை முதல்வர் ஜெகன்மோகன் விரட்டியடித்துவிட்டதாக தேர்தல் பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு விமர்சித்தார். ஆந்திர மாநிலம் சிலக்கலூர்பேட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, ஜனசேனா கட்சிதலைவர் நடிகர் பவன்கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:மாநில எதிர்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

மக்களின் இதயத்துடிப்பை பலப்படுத்த 3 கட்சிகளும் இணைந்துள்ளன. 3 கட்சி கொடிகள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரது நோக்கமும் ஒன்றுதான். கட்சிகளின் நலன், மேம்பாடு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பையே விரும்புகின்றன. பிரதமர் மோடி ஒரு நபர் அல்ல, நாட்டை உலகளாவிய குருவாக மாற்றும் சக்தி அவருக்கு உண்டு. உலகம் போற்றும் சிறந்த தலைவர் மோடி. வறுமையை ஒழிப்பதற்கான மோடியின் முயற்சிகள் அவரது லட்சியங்களுடன் நாம் இணைய வேண்டும். ஆந்திர மாநிலம் பிரச்னைகளின் வட்டத்தில் சிக்கி உள்ளது.

நாட்டிலேயே சிறந்த தலைநகராக அமராவதி கட்டுவதற்கு அடித்தளமிட்டிருந்தேன். ஆனால் அதன்பின்னர் வந்த ஜெகன்மோகன் அரசு, 3 வார்த்தைகளால் மாநிலத்தை சீரழித்து விட்டார். ஆந்திராவில் பலர் கலப்பட மதுவை உட்கொண்டு பலியாகி உள்ளனர். மாநிலத்திற்கு வந்த முதலீடுகளை ஜெகன்மோகன் விரட்டியடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள், வளர்ச்சி என எதுவுமே இல்லை. மக்கள் மனதில் நிம்மதியும் இல்லை. மாநிலத்தின் பொற்காலத்தை ஜெகன்மோகன் இருட்டடிப்பு செய்துவிட்டார். இதுவரை இல்லாத வகையில் சட்ட விரோத வழக்குகளை பதிவு செய்து அரசியலை மாசுபடுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை விரட்டியடித்தவர் ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு தாக்கு appeared first on Dinakaran.

Tags : Jaganmohan ,Andhra ,Chandrababu Naidu ,Tirumala ,Chief Minister ,Andhra Pradesh ,National Democratic Alliance ,Chilakalurpet, Andhra Pradesh ,Modi ,Telugu Desam Party ,Chandrababu Naidu Thakku ,
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...