×

ஏழைகளின் தாய்

இந்தியாவில் ஏழை மக்களுக்கு சேவை செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அன்னை தெரசா. தனக்காக யாரிடமும் கை நீட்டியது இல்லை. ஆனால், ஏழைகளுக்காக நிதி உதவிகளை பெற்று தந்து இருக்கிறார். இந்தியாவில் தன்னுடைய சேவையை ஆரம்பித்த நாட்களில், தெருத் தெருவாய் சென்று தன் சேவை மையங்களுக்கு நிதி உதவி கேட்பது, அவருடைய வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு கடைக்காரரிடம் நிதியுதவி கேட்டு நின்றிருந்தார். அந்தக் கடைக்காரர், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தார். இவர் மேலும் உறுதியுடன், கடைக்காரரிடம் எதையாவது வாங்கிவிடவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நிதி உதவி கேட்டார். கடைக்காரர் கோபமாக, அன்னை தெரசாவை பார்த்துவிட்டு, அவர் நீட்டிய கையில் எச்சிலை துப்பினார்.

அப்போதும் மனம் தளராத அன்னை தெரசா, ‘‘நீங்கள் கொடுத்ததை எனக்காக வைத்துக் கொள்கிறேன், என் விடுதியில் உள்ள அனாதைக்குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டு வெட்கமடைந்த கடைக்காரர், ‘‘இப்படி ஒரு சகிப்புத்தன்மை உள்ள பெண்ணை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்’’ என்றுகூறி தன்னிடத்தில் இருந்த அனைத்து பணத்தையும் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக கொடுத்து உதவினார். அன்புக்குரியவர்களே, தன்னலமின்றி சேவை செய்த அன்னை தெரசாவின் வாழ்வு நம்மை மெய்சிலிர்க்க செய்கிறதல்லவா? தன்னலம் போன்று பிறநலனில் அக்கறை காட்டுவதே திருமறை உணர்த்தும் செய்தியாகவுள்ளது.

திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கொடுக்கும் பரிசுத் தொகைகூட வைப்புநிதியை போன்ற எதிர்ப்பார்ப்புகள், ஏற்படுத்திவிட்டது. ஆகவேதான் ‘‘உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன?’’ (லூக்.6:33) என்று திருமறை கேள்வியெழுப்புகிறது. நவீன உலகில் பிரதிபலன் பாராது உதவும் நல் இதயங்களே தேசத்தின் காயங்களுக்கு நல்மருந்தாக அமையும். நற்செயலை செய்ய பல தடைகளும், அவமானங்களும் வரலாம். ஆயினும், ‘‘நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்றகாலத்தில் (நன்மைகளை) அறுப்போம்.’’ (கலா.6:9) –

தொகுப்பு: அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post ஏழைகளின் தாய் appeared first on Dinakaran.

Tags : Mother Teresa ,India ,Dinakaran ,
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு