×

கோழிக்கடை ஊழியர் கொலை விவகாரம்: கேரள தடயவியல் நிபுணர்கள், போலீசார் குமரியில் ஆய்வு

நித்திரவிளை, மார்ச் 17: கோழிக்கடை ஊழியர் கொலை தொடர்பாக கேரள தடயவியல் நிபுணர்கள், போலீசார் குமரியில் விசாரணை நடத்தினர். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை ஏ.கே.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அசீம் (29). கோழிக்கடை ஊழியர். கடந்த 14ம் தேதி இரவு கொல்லங்கோடு அருகே சங்குருட்டி செறுகோடு பகுதியில் உள்ள கள்ளக்காதலி ஜெனிபா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த கள்ளக்காதலியின் கணவன் சமீர் என்பவர், தலையில் உலக்கையால் அடித்ததில், முகமது அசீம் நினைவிழந்தார். இதையடுத்து சமீர் மற்றும் ஜெனீபா சேர்ந்து, முகம்மது அசீமை பைக்கில் ஏற்றி கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான அம்பிலிக்கோணத்தில் சாலையோரம் வீசி விட்டு சென்றனர். இதை கவனித்த அந்த பகுதியில் உள்ள ஒரு நபர் பொழியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் முகமது அசீமை மீட்டு, 108 ஆம்புலன்சில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அசீம் உயிரிழந்தார். இது சம்பந்தமாக பொழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெனிபா மற்றும் சமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உலக்கையை கைபற்றவும், உலக்கையில் படிந்திருந்த ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுக்கவும், நேற்று மாலை பொழியூர் இன்ஸ்பெக்டர் தீபு மற்றும் கேரள தடயவியல் நிபுணர்கள், ஜெனிபா வீட்டில் வந்து விசாரணை நடத்தி சென்றனர்.

The post கோழிக்கடை ஊழியர் கொலை விவகாரம்: கேரள தடயவியல் நிபுணர்கள், போலீசார் குமரியில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kumari Nithravilai ,forensic ,Kumari ,Vallavlai ,AKG ,Kollangode ,Mohammad Azeem ,Nagar ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...