×

பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

 

அவிநாசி, மார்ச்16: அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவிநாசி பேரூராட்சியில் கடந்த நான்கு மாதமாக சிறுமுகை பகுதியிலிருந்து வரும் பவானி ஆற்று குடிநீர் சுவையின்றி பொது மக்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவுகள் அதிகமாக உள்ளதாக,பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்தது.

இதன் அடிப்படையில், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் மாதிரிகள் பரிசோதனைகளை கோயம்புத்தூர் பொது சுகாதார துறை மற்றும் குடிநீர் வாரியம் மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், தண்ணீரில் கலந்துள்ள மொத்த திடப்பொருள்களின் அளவு அதிகபட்சமாக உள்ளதன் காரணமாக குடிநீரின் நிலை மற்றும் சுவை மாறியுள்ளது எனவும்,இந்த குறைபாடு ஆற்றின் தண்ணீர் வரத்தின் போது, மண்ணின் தன்மையினை பொருத்து சுவை மாறுபடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மழையின்மையின் காரணமாக பில்லூர் அணையின் நீர் வரத்து குறைந்து வருவதால், சிறுமுகை பவானி ஆற்றில் தண்ணீர்வரத்து சுத்தமாக இல்லை என்பதாலும், அணையில் இருப்பில் உள்ள தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. எந்தக்காரணம் கொண்டும், ஆழ்துளை கிணற்று நீரை குடிநீருடன் கலந்து விநியோகம் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற முற்றிலும் தவறான செய்தியை நம்பாதீர்கள்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வுக்கூட்டத்திலும், மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வுக்கூட்டங்களில் பேரூராட்சியின் குடிநீரின் நிலை மற்றும் சுவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்படாக, பொது மக்களின் கோரிக்கையான காலையில் 2 மணி நேரம் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில், பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் வரும் கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

The post பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Avinasi Municipality ,President ,Thanalakshmi ,Bhavani river ,Sirumugai ,
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு