×

மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கி ஆணை!

சென்னை: 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை ரூபாய் 148.54 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4.53 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் உயிர் நீர் இயக்கத்தில் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள 125.24 இலட்சம் வீடுகளில் இதுவரை 101.95 இலட்சம் வீடுகளுக்கு (81.41%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், உயிர் நீர் இயக்கத்தின் கீழ் 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பயன்பாட்டில் உள்ள 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நீடித்த நிலைத் தன்மையுடைய நீராதாரத்தைக் கொண்டுள்ள கிராமங்களில் ஒற்றைக் கிராமத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ரூ.18,228.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் 70 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் முழு திறனுடன் நீண்ட காலம் செயல்பட இவற்றை நிரந்தரமாக மறுசீரமைப்பு செய்தல் அவசியமாகும். எனவே பொது மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் போதுமான குடிநீர் வழங்க ஏதுவாக மிக்ஜாம் புயல், பெருவெள்ளம் மற்றும் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிரந்தரமாக மறுசீரமைக்க ரூபாய் 148.54 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

 

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கி ஆணை! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chief Minister of ,Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu ,Mijam storm ,southern ,Mijam ,Dinakaran ,
× RELATED கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்...