×

கம்பர் – இராமாவதாரம்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

நூல் உருவான வரலாறு பகுதி 1

கன்னன் (கர்ணன்) பிறப்பேனும் பின்னால்
கண்ணனால் துலங்கியது! கம்பன் பிறப்போ…?
– என்று வேதனை கலந்த பழமொழி ஒன்று உண்டு.

18-ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை கம்பரைப் பற்றிய பல தகவல்கள் அடங்கிய நூல்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.உள்ள தகவல்களில் ஒரு சிலவற்றைப் பார்த்து, கம்ப ராமாயண நுணுக்கங்கள் சிலவற்றையும் பார்க்கலாம்! கம்பர் திருவழுந்தூர் எனும் ஊரில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்தபோதே, அவருடைய பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள். சிலர், கம்பரைத் தூக்கிக்கொண்டு போய், சடையப்ப வள்ளல் என்பவரிடம் சேர்த்தார்கள்.

பெரும் செல்வந்தரும், நற்குணங்கள் நிறைந்தவரும், வள்ளல் தன்மையில் தலை சிறந்தவருமான சடையப்ப வள்ளல், கம்பரை மிகுந்த ஆதரவோடு வளர்த்து வந்தார். கம்பர் பெரும் புலவராக ஆனார். பெரும் புலவராக ஆகியும், கம்பர் சற்றும் கர்வப்படவில்லை; தன்னை ஆதரித்து முன்னுக்குக் கொண்டுவந்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடவிரும்பினார். தன் விருப்பத்தைச் சடையப்பரிடம் சொல்லவும் செய்தார். கம்பரின் வேண்டுகோளை ஏற்கவில்லை சடையப்பர்; ‘‘நான் உழவுத்தொழில் செய்து ஏதோ ஒரு சிலருக்கு உதவி வருகிறேன். என்னைப் போய்ப் பாடுவதாவது!’’ என்று மறுத்துவிட்டார்.

கம்பர் விடவில்லை; வற்புறுத்தினார். கடைசியில் வேறு வழியில்லாமல், உழவுத் தொழிலைப் பற்றிப் பாடுவதற்கு அனுமதி அளித்தார், சடையப்பர். கம்பர் உடனே, ‘ஏர் எழுபது’ எனும் உயர்ந்ததான தமிழ் நூலைப் பாடினார். உழவுத் தொழிலின் மேன்மையை விளக்கும் அற்புதமான தமிழ் நூல் இது. தமிழ்ப் புலவர்களைப் பெருமளவில் ஆதரித்து உதவி செய்து உயர்த்தி, நாடெங்கும் அறிவு ஔி பரவச்செய்தார். ஒருநாள்… கம்பரும் – சடையப்பரும் காவிரியில் நீராடச் சென்றார்கள். அப்போது காவிரியை நோக்கி கம்பர்;

“மெய் கழுவி விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர் போதுங் காவிரியே! – பொய் கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் தன் புகழை
ஆர் போற்ற வல்லார் அறிந்து– எனப் பாடினார்.

‘‘ஓடிக்கொண்டிருக்கும் காவிரியே! மக்கள் உடல்கழுவ – நீராடுவதற்காக நீ ஓடுகிறாய். உணவுண்டு முடித்தவர்கள் கை கழுவ நீர் தருகிறாய். நீ என்னதான் செய்தாலும் நீக்க முடியாத பொய்யை நீக்குவதற்காகப் போரைச் செய்கிறார், சடையப்பர். புலவர்களுக்கெல்லாம் ஆதரவளித்து அவர்கள் மூலமாக அறிவுஔி பரவச்செய்து மக்களைக் காப்பாற்றுகிறார். அப்படிப்பட்ட சடையப்ப வள்ளலின் புகழை, யாரால் அறிந்து போற்றமுடியும்?’’ – என்பதே அப்பாடலின் கருத்து.

கம்பரின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவியது. அந்த நாளில், அரசுபுரிந்துகொண்டிருந்த சோழ மன்னர், கம்பரை வரவழைத்துத் தன் அவைக்களத்தில் தலைமைப் புலவராகப் பதவியில் அமர்த்தினார். கம்பரும், சோழமன்னருக்குப் பல விதங்களிலும் தமிழ்ச் சுவையை அறியச்செய்து மகிழ்வூட்டினார். அப்போது ஒரு சமயம் எதிர்பாராவிதமாகக் காவிரியாறு பெருக்கெடுத்துக் கரைப்புரண்டு பல ஊர்களையும் அழித்தது. ‘‘மக்கள் மட்டுமல்ல! சோழ மன்னரும்கூட, இன்னும் என்னென்னப் பேராபத்து விளையுமோ?’’ என்று பயந்தார். அப்போது
காவிரியை நோக்கி கம்பர்…

“கன்னி அழிந்தனள்; கங்கை திறம்பினள்;
பொன்னி கரையழிந்து போனாள் என்று – இந்நீர்
உரை கிடக்கலாமோ? உலகுடைய தாயே!
கரை கடக்கலாகாது காண்! என்று வேண்டிப் பாடினார்.

அதே விநாடியில், காவிரி அடங்கி இரு கரைகளுக்கும் இடையே கட்டுப் பட்டு ஓடத் தொடங்கியது. அனைவரும் வியந்தார்கள். கம்பரின் தெய்வ அருள் தன்மையும், பெரும் புலமையையும் கண்ட சடையப்பர், ‘‘கம்பா! வடமொழியில் உள்ள ராமாயணத்தை நீ தமிழில் காவியமாகப் பாடு!’’ என்றார். ‘‘சரி!’’ என்று ஒப்புக்கொண்டார், கம்பர்.நீண்ட நாட்களாயின. கம்பர் எந்தவிதமான உருவாக்க முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. அதைப் பார்த்த சடையப்பர், சோழ மன்னரிடம் போய் தன் எண்ணத்தைச் சொல்லி, ‘‘மன்னா! கம்பரை ராமாயண காவியம் எழுதுமாறு நீங்கள்தான் நிர்ப்பந்திக்க வேண்டும்!’’ என்றார்.

‘‘சரி! சடையப்பரே! நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார் மன்னர். அதற்காக உடனே கம்பரை அழைத்து காவியம் பாடச் சொல்லவில்லை; கம்பரை மட்டும் பாடச் சொன்னால் விரைவாக முடியாது என்று, கம்பர் – ஒட்டக்கூத்தர் இருவரையும் கூப்பிட்டு, ‘‘நீங்கள் இருவரும் தனித் தனியே ராமாயணத்தைத் தமிழில் பாடுங்கள்!’’ என உத்தரவிட்டார். ‘அப்படியே ஆகட்டும் மன்னா!’’ என்று இருவரும் அங்கிருந்து அகன்றார்கள். வீடு திரும்பிய ஒட்டக்கூத்தர், ராமாயணம் எழுதும் வேலையைத் தொடங்கினார். பால காண்டம் தொடங்கி யுத்த காண்டம், கடல்காண் படலம் வரை, மிக விரைவாகப் பாடினார். கம்பரோ, அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமலிருந்தார். சடையப்பருக்கு விவரம் தெரிந்தது. உடனே அவர் சோழ மன்னரிடம் சென்று, ‘‘மன்னா! கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் ராமாயணம் எழுதச் சொன்னீர்களே! எதுவரையில் முடிந்திருக்கிறது என்று கேட்டீர்களா?’’ எனக் கேட்டார்.

மன்னர் உடனே கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் வரவழைத்து, ‘‘ராமாயணத்தை எந்த அளவிற்குப் பாடியிருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டார். உடனே ஒட்டக்கூத்தர், ‘‘மன்னா! யுத்த காண்டத்தில், கடல் காண் படலம் வரை பாடியிருக்கிறேன்’’ என்று உள்ளதைச் சொன்னார். கம்பர் பக்கம் திரும்பினார் மன்னர். கலைமகள் அருளை முழுமையாகப் பெற்ற கம்பர் யோசிக்கவே இல்லை; ‘‘மன்னா! அதற்கு அடுத்ததான திருவணைப்படலம் வரை பாடியிருக் கிறேன்’’ என்று மளமளவெனப் பாடல்களைப் பாடிச் சொற்பொழிவும் செய்தார் கம்பர். சடையப்பர் அயர்ந்துபோனார். மன்னர், வியந்தார்.

கம்பர் சொன்ன பாடல்களில் ஒரு பாடலில், துளி என்பதற்குப் பதிலாக ‘துமி’ என்ற சொல் இடம் பெற்றிருந்தது. அதையறிந்த ஒட்டக்கூத்தர், ‘கம்பரே! நீங்கள் பாடிய பாடலில் துளி என்பதற்குப் பதிலாகத் ‘துமி’ என்று சொல்லியிருக்கிறீர்களே! இது எந்த நூலில் உள்ளது? ஆதாரம் என்ன?’’ எனக்கேட்டார்.‘‘இது நூல்களில் வழங்கப்படவில்லை. உலக வழக்கில், பேச்சு வழக்கில் வழங்கப்படுகிறது’’ என்றார் கம்பர். ஒட்டக்கூத்தர் அதை ஏற்கவில்லை; ‘‘அப்படியானால் அதை நிரூபிக்க வேண்டும்!’’ என்றார்.

‘‘நாளை அவ்வாறே நிரூபிக்கிறேன்’’ என்ற கம்பர், அவையைவிட்டு வெளியேறினார். போனவர், ‘‘இந்தத் தொல்லையில் இருந்து எப்படியாவது அடியேனை விடுவித்தருள வேண்டும்!’’ என்று கலைமகளை வேண்டித்துதித்து, அந்தாதி நூல் ஒன்று பாடினார். கலைமகள் காட்சி கொடுத்தாள்; ‘‘கம்பா! கவலைப்படாதே! அருகில் உள்ள இடைத்தெருவுக்கு நாளை காலையில் வா!’’ என்று சொல்லி மறைந்தாள். மறுநாள் காலையில் ஒட்டக்கூத்தரையும் சோழ மன்னரையும் அழைத்துக்கொண்டு, கலைமகள் குறிப்பிட்ட இடைத்தெருவுக்குப் போனார், கம்பர். அங்கே ஒரு வீட்டில் பெண் ஒருத்தி தயிர் கடைந்துகொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச் சில சிறுவர்கள் இருந்தார்கள். தீவிரமாகத் தயிர் கடைந்துக் கொண்டிருந்த பெண், ‘‘மோர்த் ‘துமி’ உங்கள் மீது
தெளிக்கும் சற்று தள்ளியே இருங்கள்!’’ என்றாள்.

கம்பர், ஒட்டக்கூத்தரைப் பார்த்து, ‘‘கேட்டீர்களா?’’ எனக் கேட்டார்.‘‘கேட்டேன். ஒப்புக்கொண்டேன்’’ என்றார் ஒட்டக்கூத்தர். இருந்தாலும் ஒட்டக் கூத்தருக்கு ஒரு சந்தேகம். அவருக்குச் சோழ நாட்டின் மூலை – முடுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆகவே, அவருக்குச் சந்தேகம் முளைத்தது; ‘‘இந்த வீட்டில் யாரும் குடி இல்லை என்பது, நன்றாகவே நமக்குத் தெரியும்.

இது காலி வீடுதான்! இப்போது வீட்டின் உள்ளே ஒரு பெண்மணியும் சில சிறுவர்களும் இருக்கிறார்கள் என்றால், சந்தேகமாக இருக்கிறது’’ என்று எண்ணியபடியே அந்த வீட்டிற்குள் நுழைந்தார். ஒட்டக்கூத்தர் உள்ளே நுழைந்த அதே வேளையில், காற்றில் மறையும் புகை போல அங்கிருந்த பெண் மணியும் சிறுவர்களும் அப்படியே காற்றில் மறைந்தார்கள். வந்தது கலைமகளும் வேதங்களும் என்பதைப் புரிந்துகொண்டார் ஒட்டக்கூத்தர்.

ஆனால், நடந்ததை உணர்ந்து கொண்ட கம்பரோ, வேறு விதமாகச் சிந்தித்தார். ‘‘ஆகா! நமக்காகக் கலைமகளே இவ்வாறு மனித வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்; நம்மைக் காப்பாற்றி இருக்கிறாள் என்றால்… அவள் தந்த கல்விச் செல்வத்தை, அவள் தாங்கிய மனித குலத்திற்குத் தராமல், வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறோமே!’’ என்று வருந்தினார். ராமாயணத்தை எழுதத் தீர்மானித்தார். தீர்மானம் செயலாக மாறியது. சென்னைக்கு அருகில் உள்ள திருவொற்றியூர் ஆலயத்தில் வட்டப்பாறையம்மன் சந்நதியில் வட்டப்பாறையம்மனை வேண்டி.

`ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
வெற்றி யூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை – பற்றியே
நந்தாது எழுதுதற்கு நள்ளிரவின் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி!’

கம்பரின் வேண்டுகோளை நிறைவேற்றினாள் அன்னை காளி. ராமருடைய வரலாற்றை `இராமாவதாரம்’ என்ற பெயரில் எழுதி முடித்தார் கம்பர். கம்பர் தன் காவியத்திற்கு வைத்த பெயர் இராமாவதாரம் என்பதே! கம்பரால் எழுதப்பட்டதால் ‘கம்ப இராமாயணம்’ என்று சொல்கிறோம் நாம். எழுதி முடித்த காவியத்தைத் தூக்கிக் கொண்டு, திருவரங்கம் சென்று, அங்கே அரங்கேற்றம் செய்தார் கம்பர்.

(தொடரும்..)

பி.என்.பிரசுராமன்

The post கம்பர் – இராமாவதாரம் appeared first on Dinakaran.

Tags : Ramavataram ,Kannan ,Karnan ,Kampan ,Gambar ,
× RELATED தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு