×

ஓங்காரமாகி நின்ற பராம்பிகை

ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா

நாம் தொடர்ச்சியாக லலிதா சஹஸ்ரநாமத்தின் பொருளை பார்த்துக் கொண்டே வருகின்றோம். வாக்பவ கூடம் என்கிற தொகுப்பில் அம்பிகையின் முகத்தைப் பற்றிய நாமங்களை பார்த்தோம். இதற்குப் பிறகு மத்ய கூடம். கழுத்துப் பகுதியிலிருந்து இடுப்புப் பகுதி வரையிலான வர்ணனை. அதற்கு பிறகு இருப்பது காமராஜ கூடம். இப்போது இரண்டாவதாக இருக்கக்கூடிய மத்யம கூடத்திலுள்ள நிறைவுப் பகுதியிலுள்ள, இந்த நாமத்தைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

கடைசி சில நாமங்கள் முழுக்கவே அம்பிகையின் ஸ்தனங்கள்பற்றி (திருமார்புகள்) பார்த்தோம், பிறகு நாபிக்கும் ஸ்தனங்களுக்கும் இருக்கும் தொடர்பும் அதனுடைய தத்துவ தரிசனத்தையும் கண்டோம். அதாவது காமகலா தியானம் பற்றியும் பார்த்தோம். இப்போது இந்த நாமமும் அதற்கு தொடர்புடையதுதான்.
ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா… இதற்கு முந்தைய நாமத்தில் அம்பிகையின் இடைப்பகுதி நம்மால் காணமுடியாத அளவுக்கு சூட்சுமமானது என்று பார்த்தோம். அதாவது இடை என்பது நுண்மையாக இருக்க வேண்டும் என்பது சாமுத்ரிகா லட்சணம். இந்த இடைப்பகுதி சிறுத்து நுண்ணியதாக இருக்கிறது. ஆனால், ஸ்தன பாரமானது பெருத்திருக்கிறது.

அபிராமி அந்தாதியில்…
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
அபிராமி அந்தாதியில் இந்தப் பாட்டு காமகலா தியானமாகும்.

அபிராமி இந்த உலகுக்குத் தாய். அவளுக்குத்தான் எத்தனை குழந்தைகள். எத்தனை யுகங்களாய் உணவளித்து வருகிறாள். அபிராமி பட்டர் அவளின் மார்புகளை பார்க்கிறார். கருணை அவருக்குத் தெரிகிறது. அவளை அவர்
தாயாகப் பார்க்கிறார். இங்கு இடுப்பை சொல்லும்போது சின்னஞ் சிறிய என்கிறார். ஸ்தனங்களை சொல்லும்போது பென்னம் பெரிய என்கிறார்.

இங்கு லலிதா சஹஸ்ரநாமத்தில், ஸ்தனங்கள் பாரமாக இருக்கின்றன. அந்த பாரத்தை இந்த நுண்ணிய இடையினால் தாங்க முடியவில்லை. சரி, அடுத்ததாக இங்கு இன்னொரு சூட்சும விஷயத்தையும் இந்த நாமம் காட்டுகின்றது. உயர்ந்த நிலையில் அதாவது சாமுத்ரிகா லட்சணத்திலுள்ள பெண்ணைப்பற்றி பேசுகின்றது. இன்னும் சொல்லப்போனால் பெரும் புண்ணியத்தோடும் சகல சௌபாக்கியத்தோடும் பிறக்கும் பெண்களின் இடைப்பகுதியில் மூன்று ரேகை ஓடுமாம்.

மூன்று மடிப்புகள் இருக்குமாம். கழுத்திலும் அதேபோல் மூன்று ரேகைகள் இருக்குமாம். இதெல்லாம் சாமுத்ரிகா லட்சணத்தில் வரக்கூடியதாகும். ஆனால், இங்கு யாரைப்பற்றி வர்ணிக்கின்றோம் எனில், சகல சௌபாக்கியத்தையும் உடையவள். சர்வ மங்கள மாங்கல்யே என்று அம்பிகையை வர்ணிக்கின்றோம். அம்பிகையைப் பார்த்துத்தான் நமக்கு சாமுத்ரிகா லட்சணத்தை அமைத்திருக்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது அம்பிகையின் இந்த மூன்று கோடுகள், மடிப்புகள், ரேகைகள் தெரிகின்றது.

இதைத்தான் வசின்யாதி வாக் தேவதைகள் வித்தியாசமான ஒரு கோணத்தில் நமக்குச் சொல்கிறார்கள். அதாவது, இந்த ஸ்தனங்கள் பாரமாக இருக்கின்றன. இந்த இடையானது சிறுத்து நுண்ணியதாக இருக்கிறது. இந்த ஸ்தனத்தினுடைய பாரங்களை இந்த இடையினால் தாங்க முடியுமோ முடியாதோ… அந்த இடையானது ஒடிந்து விடுமோ என்று நினைத்து… இந்த இடை எனும் கொடிக்கு எது அடிப்படை எனில் ஆகாசம். இந்த கொடிக்கு இடைதான் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், இந்தஸ்தனத்தினுடைய பாரத்தினால் இந்தக் கொடியிடையானது ஒடிந்து விடுமோ என்று சொல்லி, ஒரு கயிறை வைத்து மூன்று இழைகளாக கட்டுவதுபோல அம்பிகையின் இடை ஸ்தன பாரங்களால் ஒடிந்து விடுமோ என்று மூன்று ரேகைகளால் சுற்றப்பட்டதுபோல் இருக்கிறதாம், அந்த மூன்று மடிப்புகளும்.

ஏற்கனவே, இடைப்பகுதியானது மத்தியப்பகுதியானது சிறுத்து இருக்கக் கூடியது. அது ஸ்தன பாரங்களால் தாங்குமோ தாங்காதோ என்று மூன்று ரேகைகளால் கோடுகளால் சுற்றப்பட்டிருக்கிறது. இப்போது மேலே பார்த்தது நேரடியான அர்த்தம். பொதுப் பொருள். இப்போது இதனுடைய தத்துவார்த்தம் அல்லது அத்யாத்மிகமான பொருள் என்ன என்பதையும் பார்ப்போம்.

இதற்கு முந்தைய நாமத்தில் ஸ்தனங்கள் என்பது பர ஞானம், அபர ஞானம் என்று பார்த்தோம். அது சரி, இந்த பர ஞானம் அபர ஞானத்திற்கு எது மூலமெனில் அம்பிகையினுடைய கருணை என்று பார்த்தோம். அந்த கருணையே நாபியிலிருந்து புறப்படுவதாகவும் அறிந்தோம். அந்தக் கருணை என்கிற நாபியிலிருந்து கொடி எழுந்து ஸ்தனங்கள் வரையிலும் பரவி, பர ஞானம், அபர ஞானமாக வருகின்றது. எப்போது ஒரு சாதகன் மீது அம்பிகையின் கருணை வேலை செய்யும் போது பர ஞானம், அபர ஞானம் சித்திக்கின்றது. அப்படி சித்திக்கும்போது… இப்படி அவருக்கு பர ஞானம், அபர ஞானம் சித்தித்துவிட்டால் கூட அதைத்தாங்கக்கூடிய அளவுக்கு இந்த ஜீவனுக்கு எப்படி பக்குவம் வருகிறதெனில், அம்பிகை தன்னுடைய கருணையால் எப்படி பக்குவப்படுத்துகிறாள் எனில், தர்மத்தின் மூலம் பக்குவப்படுத்துகின்றாள். அந்த தர்மம்தான் இதற்கு முந்தைய நாமத்தில் மத்யமாவாக வருகின்றது. இடைப்பகுதி என்பது தர்மம். தன்னுடைய கருணையால் அந்த தர்மத்தில் நிற்க வைத்து அந்த தர்மத்தின் மூலம் ஸ்திதப் பிரக்ஞனாக்கி பக்குவப்படுத்துகிறாள்.

இப்போது ஒரு சாதகன் அல்லது ஜீவன் இந்த தர்மத்தில் சரியாக நிற்க வேண்டும். கருணை சித்தித்து அந்த தர்ம வழியில் காண்பித்து கொடுத்தாகி விட்டது. ஞானமும் சித்தித்து விட்டது. இந்த ஞானத்தின் பாரம் தாங்காமல் அந்த தர்மம் ஒடிந்துவிடக் கூடாது. அவன் தர்மத்திலிருந்து விலகி விடக் கூடாது. ஏனெனில், அப்படி உயர்ந்த் நிலையில் இருப்பவர்கள் மக்களின் மீது, ஜீவன்களின் மீது கருணை கொண்டு வந்து தர்மத்தை போதிக்க வேண்டும். தான் அடைந்த நிலையை ஏதேனும் ஒரு தர்மத்தில் நின்று சொல்ல வேண்டும். இல்லையெனில் எப்படி அப்படியொரு நிலையை நோக்கி எல்லோரும் நகர முடியும்.

இப்போது இந்த தர்மத்தை காப்பாற்ற வேண்டி அந்த தர்மம் என்கிற இடையில் மூன்று சுற்று சுற்றுகிறார்கள். இந்த மூன்று சுற்று சுற்றிய இந்த ரேகைகள் என்ன என்று பார்த்தால், பிரணவத்தினுடைய அகார உகா மகாரம் என்கிற இந்த மூன்று ரேகைகள். அ உ ம அதாவது ஓம் என்பதே ஆகும். அம்பிகை இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் ஆதாரமான, நாத சொரூபத்தை தன்னுடைய பிரணவ மந்திரத்தை வைத்து ஜீவனை தர்மத்தோடு கட்டுகின்றாள். பிணைக்கின்றாள். அந்த ஞானத்தை தாங்கும்படிக்கு அவனை வைக்கின்றாள். இங்கு ஒரு கொடியைத்தான் சுற்றி வைத்து வளைக்கின்றாள். பிணைக்கின்றாள். கொடி ஒன்றுதான். ஒரேயொரு கொடி நமக்கு மூன்று வளைவுகளாக தெரிகின்றது.

ஓங்காரம் என்கிற ஒரே கொடி. ஆனால், அது மூன்று சுற்றாகத் தெரிகின்றது. அகாரம் உகாரம் மகாரம். ஒரே கொடியாக இருக்கும்போது அது சமஷ்டிப் பிரணவம். அதை வைத்து சுற்றும்போது அது மூன்றாக தெரிகின்றது. இப்படி மூன்றாகத் தெரிவதற்கு வியஷ்டிப் பிரணவம் என்று பெயர். இந்த ஓங்காரத்தில் இருந்துதான் அகார உகார மகாரம். இந்த அகார உகார மகாரத்திலிருந்து வருவதுதான் காயத்ரி மந்திரத்தின் முன்னால் வரக்கூடிய பூ, புவஹ, சுவஹ… இதிலிருந்துதான் ரிக், யஜூர், சாம வேதம். இந்த வேதங்களிலிருந்து பிரபஞ்சம் ஒவ்வொன்றாக விரிகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். எல்லாம் முடிந்து கடைசியில் காணப்படுபவன், காணப்படுவது, காண்பது… கடைசியில் திரிபுடி என்கிற வெளிப் பிரபஞ்சத்தில் மூன்றாக காட்டுகின்றது.

ஆனால், வெளியில் இப்படி மும்மூன்றாக தெரிவது அனைத்தும் ஒரே கொடியான ஓங்காரமாக உள்ளே உள்ளது. இப்படி வெளியில் பலவாக பிரிந்திருப்பதை உள்ளே எது கொண்டுபோகின்றது எனில் பிரணவமே ஆகும். இந்த பிரணவத்தில் அனைத்து மந்திரங்களும் இருப்பதால் அம்பிகையின் மந்திர சாஸ்திரம் அந்த ஒன்றே ஒன்றாக நிலைக்கு எடுத்துச் செல்கிறது. நாம் செய்யக்கூடிய மந்திர ஜபம். நாம ஜபம். அல்லது குரு நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மந்திரம். இதெல்லாமும்தான் நம்மை தர்மத்தோடு நிலைநிறுத்தி, அந்த தர்மம் ஒடிந்து விடாமல் அதே நேரத்தில் அந்த ஞானத்தின் வலிமையை தாங்கும்படி செய்கின்றது. பக்குவப்படுத்தி தாங்க வைக்கின்றது. இதற்கு மூலமாக இருக்கக் கூடியது பிரணவம்.

அம்பிகை மூன்றாக காண்பித்து கடைசியில் ஏக வஸ்து என்று உணர்த்துகின்றாள்.

உதாரணமாக, இப்படி மூன்று அதாவது திரிபுடி இல்லை என்று காண்பிப்பதற்காக வந்த அவதாரமே தத்தாத்ரேயர் ஆகும். தத்தாத்ரேயராக சுவாமி யாருக்கு வருகிறார் எனில் அனுசுயா தேவிக்கும் அத்ரி முனிவருக்கும் வந்து அவதரிக்கிறார். அத்ரி… த்ரி எங்கு இல்லையோ அவர் அத்ரி, த்ரி என்பது மூன்று என்கிற சமஸ்கிருத பதமாகும். திரிபுடி எங்கு இல்லையோ அவர் அத்ரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூவரும் எங்கு இல்லையோ அதாவது தனித்தனியாக இல்லையோ அவருக்குத்தான் தத்தாத்ரேயர்
அவதரிப்பார்.

அத்ரிக்கே தன்னை தத்தம் கொடுத்ததால் அவருக்கு தத்தாத்ரேயர் என்று பெயர்.

இதற்கான கோயிலை பார்ப்போமா…

‘ஓமாம்புலியூர்’ எனும் ஊராகும். சிதம்பரத்திலிருந்து 30.கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் அற்புதத் திருத்தலமாகும்.

‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்று முருகனைப் போற்றுகிறோம். ஆனால், அந்த அப்பனுக்கு பாடம் சொன்னவர் ஓர் அப்பன்தான். அந்த அப்பனின் திருப்பெயர் ‘துயர்தீர்த்த நாதர்’.

பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மதேவனை சிறையில் அடைத்த முருகப்பெருமான் சுவாமிமலையில் சிவபெருமானுக்கே ‘பிரணவ உபதேசம்’ செய்தார்.

உபதேசம் முடிந்தவுடன், ‘‘எனக்கே உபதேசம் செய்யும் அளவிற்கு, நீ யாரிடம் பிரணவ உபதேசம் பெற்றாய்?’’ என்று சிவபெருமான் கேட்க, ‘‘தங்களிடம்தான்’’ என்று பதிலளிக்கிறார் முருகப்பெருமான். இவர் இந்த உபதேசத்தை ‘ஓமாம்புலியூர்’ என்ற தலத்தில் ஒட்டுக்கேட்டு உணர்ந்து கொண்டார். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரால் வழிபடப்பெற்ற தலங்கள் ஐந்து. அவை பெரும்பற்றப் புலியூர் (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர், பெரும்புலியூர் மற்றும் ஓமாம்புலியூர் ஆகியன. இத்தலங்கள் புலிக்கால் முனிவர் பூசித்ததால் ‘புலியூர்’ என்ற காரணப் பெயர் பெற்றன. இவற்றுள் ஒன்றாக விளங்கும்.

கயிலைமலையில் அம்பிகை ஒருமுறை சிவபெருமானிடம் ‘பிரணவ உபதேசம்’ கேட்டுக்கொண்டிருந்தபோது அவளது கவனம் சிதறியது. அதையறிந்த சிவபெருமான் ‘மானுடப் பிறவியெடுத்து தவம் செய்து, பிறகு நம்மை வந்தடைவாய்’ என சாபம் வழங்குகிறார்.அப்போது அம்பிகை, இந்த ஓமாம்புலியூரில் மானுடப் பிறவியாகப் பிறக்கிறாள். அதனால் இவ்வூருக்கு ‘உமாபுலியூர்’ என்ற பெயரும் உண்டு. இங்கு தலவிருட்சமாக விளங்கும் இலந்தை மரத்தினடியில் தவம் செய்த அம்பிகைக்காக சிவபெருமான் மனமிரங்கி தட்சிணாமூர்த்தியாக பிரணவ உபதேசம் செய்கிறார். ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு உபதேசம் நிகழ்ந்ததால் இது ‘ஓம் ஆம்புலியூர்’ என்றும் அழைக்கப்படுவதாக பெரியோர் கூறுகின்றனர்.

இங்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் சிவபெருமான், வெளியிலிருந்த நந்திதேவரிடம் இடையூறு இல்லாமலிருக்க, ‘யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்’ என்று கட்டளையிட்டுவிட்டு உபதேசம் செய்கிறார். அப்போது அங்கு வந்த முருகப்பெருமானை நந்திதேவர் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் வண்டு வடிவம் எடுத்து, தீர்த்தம் வெளியேறும் கோமுகத்தின் வழியாகச் சென்று, அம்பாள் சூடியிருந்த மலரில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்துகொண்டார் முருகப் பெருமான்.அங்கு நடந்த உபதேசத்தை முருகனும் மறைமுகமாகக் கேட்டுக்கொண்டார். அதன் காரணமாகவே சுவாமிமலையில் சிவபெருமானுக்கு உபதேசிக்க முடிந்தது. இதனால் ‘சுப்பனுக்கே பாடம் சொன்னவர் அப்பன்தான்’
என்பது புலப்படுகிறது.

அம்பிகையுடன் சிவபெருமானும் தவக்கோலத்தில் இருப்பதால் இங்கு பள்ளியறை வழிபாடு கிடையாது. மேலும், உலகில் எங்குமே இல்லாத சிறப்பம்சமாக சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனியான கருவறையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். ஆலங்குடி உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் தட்சிணாமூர்த்தி தனியான சந்நதியில் இல்லாமல் சுற்றுப்புறத்தின் தென்பகுதியில் (கோஷ்டம்) பரிவார மூர்த்தியாகவே விளங்குவார்.

The post ஓங்காரமாகி நின்ற பராம்பிகை appeared first on Dinakaran.

Tags : Paramphigai ,Lalita Sahasranama ,Ambika ,Parambhikai ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி