×

அவமானங்களை உதறிடு! ஆரவாரமின்றி நிமிர்ந்திடு!!

ஒரு விவசாயியின் கழுதை பாழடைந்த கிணற்றில் விழுந்துவிட்டது. அந்த கிணற்றாலும் யாருக்கும் நன்மையில்லை. அந்த கழுதையாலும் பிரயோஜனம் இல்லை. ஆகவே, அந்த கிணற்றை கழுதையுடன் வைத்து மூடிட முடிவெடுத்து, ஊராரை உதவிக்கு அழைத்தான். ஊர் ஜனங்களும் கையில் கற்களோடும் குப்பைகளோடும் வந்து கிணற்றில் எறிய ஆரம்பித்தனர். கழுதை எவ்வளவோ கத்தியது. ஜனங்களின் ஆர்வத்தையும் ஆக்ரோஷத்தையும் பார்த்து இனி இவர்களை தடுக்க முடியாது, எது நடந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்னும் மனநிலைக்கு வந்தது. ஜனங்கள் உற்சாகமாக எறிந்துகொண்டு இருந்தார்கள். கழுதை தன் மேல் விழுந்த குப்பைகளையும் மண்ணையும் உதறிவிட்டு அவைகளை தனக்கு படிக்கட்டுகளாக மாற்றும் நோக்கில் நின்றது.

அதற்குப் பிறகு கழுதை மேலே பார்க்கவும் இல்லை கத்தவும் இல்லை. அது செய்ததெல்லாம் தன் மேல் விழுந்த குப்பைகளை மிதித்து நின்றது. சற்று நேரம் ஆகஆக, என்ன ஆச்சரியம்! குப்பைகள் உயரஉயர கழுதையும் மேலே வந்து துள்ளிக் குதித்து ஓடியது.

அன்புக்குரியவர்களே, வாழ்வில் சந்திக்கும் இடர்ப்பாடுகளையும், அவமானங்களையும், எதிர்மறைப் பேச்சுக்களையும் பொருட்டாக எண்ணுவதினாலேயே பலரால் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. இன்னும் சிலர் இதனை விதியென நம்பி தாழ்வு மனநிலையிலும், தற்கொலை மனநிலையிலும் தள்ளப்படுவதை காண்கிறோம். பிரச்னைகளுக்கு தீர்வு இல்லையா? அல்லது தீர்வை நோக்கி நாம் நகர வில்லையா என்பதை சிந்தித்துப் பாருங்கள். எல்லா பிரச்னைகளுக்கும் நிச்சயம் தீர்வுண்டு. தோல்விகளையும் அவமானங்களையும் படிக்கட்டுகளாக மாற்றியவர்களே உலகில் சாதனையாளர்களாக வலம் வந்துள்ளனர். புனிதத் திருமறையில் யோசேப்பு என்னும் இளஞரை அவனது சகோதரர்களே பொறாமையினால் குழியில் தள்ளினர். அத்தகைய யோசேப்பைதான் தேவன் எகிப்து நாட்டில் தன் குடும்பத்திற்கு படியளக்கும் தலைவனாக உயர்த்தினார்.

ஆம், ‘‘கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்’’. (சங்.138:6) மேலும், ‘‘அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்’’. (சங்.113:7,8) ஆகவே, நம் வாழ்வில் ஏற்படும் தீமையிலும், ஒரு தெய்வீக நோக்கம் இருக்கலாம். நம் தேவன் தீமையை நன்மையாக மாற்றுகிறவர். தீமைகளையும், தீமையானவர்களையும் உதறிடுங்கள்! துணிச்சலுடன் நிமிர்ந்திடுங்கள்!!.

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post அவமானங்களை உதறிடு! ஆரவாரமின்றி நிமிர்ந்திடு!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…