×

ரோஜா இதழில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

நன்றி குங்குமம் தோழி

பூக்கள் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ரோஜா பூக்கள் தான். ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய பூ. இது பூக்களின் அரசி மட்டுமில்லாமல்
காதலின் சின்னமாகவும் விளங்குகிறது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது ரோஜா பூக்கள்தான். ரோஜா பூக்கள் அழகுக்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. ரோஜா இதழ்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. ரோஜா பூக்கள் குளிர்ச்சித் தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது. உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர் உகந்தது.

மூல வியாதிக்கு மருந்து: ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.வயிற்றுப்போக்கு நிற்க: வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி 1 கைப்பிடி அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நீங்கிவிடும்.

கர்ப்பப்பை வலுப்பெற: பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்தாக பயன்படுகிறது. ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.

ரத்தம் சுத்தமாக இருக்க: ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

செரிமான பிரச்னை நீங்க: ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து குடித்து வர செரிமான பிரச்னை விரைவில் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க: மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை 1/2 டம்ளர், மாலை 1/2 டம்ளர் என்ற அளவிற்கு குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை எளிதில் நீங்கும்.

உடல் எடை குறைய: ரோஜா இதழ்களை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும்.

– பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post ரோஜா இதழில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்