×

பூமியை தாங்கி காத்தருளும் பூமீசுவரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பஞ்சபூதங்களில் அதிக பயனாவதும், மக்களைத் தாங்கி நிற்பதும் பூமியாகும். பூமிவடிவாக விளங்கும் சிவபெருமான், “பாரபூதன்’’ என்றழைக்கப்படுகிறார். அவனுடைய தேவி தாரிகா. இவர்கள் அருளால் மண் மீது பலகோடி உயிர்கள் தோன்றி வாழ்ந்து மறைகின்றன. இவர்களுடைய மகள் பூமிதேவி எனப்படுகிறாள். அந்த பூமிதேவி, தான் செழிக்கவும், கோடான கோடி உயிர்கள் நலம் பெற்று வாழவும், எப்பொழுதும் சிவபூசை செய்கின்றாள். அவளால் வழிபடப்பட்ட இறைவன் “பூமீசுவரர்’’ என்று அழைக்கப்படுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் பூமீசுவரர் எனும் பெயரில் சிவாலயங்கள் உள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

மரக்காணம் பூமீசுவரர்

சென்னை – பாண்டிச்சேரி கீழ்க் கடலோரச் சாலையில் சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கும் ஊர் மரக்காணம். கல்வெட்டுக்களில் மணல் கானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில், சோழர்கள் காலத்திய கற்கோயிலாகும். பெருமான் பூமீசுவரர் அம்பிகை கிரிஜாம்பிகை. கடலோரத்து மணல் வெளியிடையே சிறு சோலை சூழ்ந்த வளமான நீர் ஊற்றுக்களுடன் கூடிய ஊரானது கானம் எனப்படும்.

இவ்விடம் அத்தகைய சோலை சூழ்ந்த இடமாக இருந்ததால், இவ்வூர் மணற்கானம் எனப்பட்டது. அதனிடையே சோழ மன்னனுக்குப் பெருமான் தோன்றிக் காட்சியளித்தார் என்றும், அவன் பெரிய கற்கோயிலை அவருக்கு அமைத்தான் என்றும் கூறுகின்றனர். இத்தலத்துக்கு வடக்கேயுள்ள திருவிடந்தை வராகப் பெருமானிடம் உபதேசம் பெற்ற பூமிதேவி இங்கு வந்து சிவபூசை செய்து பேறுபெற்றாள் என்பர்.

நல்லம் கோனேரி ராஜபுரம்

கும்பகோணம் – வடமட்டம் பாதையில் உள்ள கோனேரி ராஜபுரம் பிரிவிலிருந்து உள்ளே 3 கி.மீ. சென்றால், கோனேரி ராஜபுரத்தை அடையலாம். தேவாரத்துள் நல்லம் என்று குறிக்கப்படும் இத்தலம், இந்நாளில் கோனேரி ராஜபுரம் என்றழைக்கப்படுகிறது. இறைவன் பூமீசுவரர், அம்பிகை பூமிதேவி, வராகரிடம் உபதேசம் பெற்று அசுரரால் தீண்டப்பட்ட பாவம் நீங்க பூசித்த தலம். தீர்த்தம் பூமிதீர்த்தம். பூமிதேவி மகிழும் வண்ணம் பெருமான் நடனக் காட்சியளித்தார். அது பூமிதாண்டவம் எனப்படுகிறது. பெருமான், பூமிதேவிக்கு உமாமகேஸ்வரராகக்
காட்சியளித்தார் என்று புராணம் கூறுகிறது.

மணச்சநல்லூர் பூமீசுவரர்

திருச்சிக்கு அருகிலுள்ள தலம் இறைவர், பூமீசுவரர். யமனுக்கு அருள்புரிந்த திருப்பைஞ்ஞீலி அருகில் உள்ளது. பூமிதேவி தவம் செய்து, அருள் பெற்ற தலம். யமன் இல்லாததால் பூமிக்கு பாரம் அதிகமாகியது. அதனால், யமனை உயிர்ப்பித்து அருளும்படி, பூமிதேவி தவம் செய்த தலம். திருவாவடு துறை ஆதீனத்தால் பரிபாலிக்கப்படுகிறது.

வீரவராக நல்லூர்

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் – திருநெல்வேலி சாலையில் வீரவநல்லூர் உள்ளது. இத்தலம் ஆதியில் புன்னை வனமாக இருந்தது. ஒரு சமயம் பூமியின் பாரம் அதிகரித்ததால் பூமிதேவி வருத்தமுற்றாள். அவள் சிவபெருமானைச் சரணடைந்து, பூபாரத்தைக் குறைக்க வேண்டுமென்று விண்ணப்பித்தாள். பெருமான் புன்னை வனம் சென்று வழிபடுமாறு கூறினார். அவள் வழிபட்டதால் பெருமான் பூமீசுவரர் என்று அழைக்கப்பட்டார்.

மீண்டும் ஒருமுறை பூமிதேவி தன்னைக் கடலுக்கு அடியிலிருந்து மீட்டு வந்த வீரவராகப் பெருமானுடன் வழிபட்டாள். அவர் பெயரால் இத்தலம் வீரவராக நல்லூர் என்று அழைக்கப்பட்டு, இப்போது வீரவநல்லூர் என வழங்குகிறது. அம்பிகையின் பெயர் பூமியின் மீது பெரும் வளத்தைக்குறிக்கும் பச்சை வண்ணத்தோடு தொடர்புபடுத்தி மரகதவல்லி என வழங்குகிறது. தீர்த்தம் சிவகங்கை இது பூமியால் தோண்டப்பட்டு இறைவன் திருமுடியிலுள்ள கங்கையில் நிறைக்கப்பட்டது.

திருச்சுழியல்

அருப்புக் கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சுழியில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பூமியை அழிக்கப் பொங்கி வந்த வெள்ளத்தைப் பெருமான் ஒரு பிலத்துள் செல்லுமாறு கூற, அது சுழித்து உட்சென்று அடங்கியதால் இத்தலம் திருச்சுழியல் என்றும், பெருமான் பிரளய விடங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு பூமிதேவி வழிபட்டு பெருமானின் மணக்கோலத்தைக் கண்டாள். பெருமான் பூமீசுவரர், சோமாஸ்கந்தர் பிரளயவிடங்கர். அம்பிகை துணைமாலை நாயகி. தீர்த்தம் பூமிதீர்த்தம், கௌவைக் கடல் என்பதாகும்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post பூமியை தாங்கி காத்தருளும் பூமீசுவரர் appeared first on Dinakaran.

Tags : Bhumeeswarar ,earth ,Kumkum Anmigam ,Panchabhutas ,Lord Shiva ,Bharaboothan ,Tarika ,Bhumi Devi ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!