×

வாழ வழிகாட்டும் வள்ளுவம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சொர்க்கம் நரகம் பற்றிய சிந்தனைகள் இந்து மதத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. பாவம் செய்தவர்கள் நரகம் புகுவார்கள் என்றும் புண்ணியசாலிகள் சொர்க்கம் சென்று இன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும் வழிவழியாகச் சொல்லப்படுகிறது.தமிழ்மறை தந்த வள்ளுவப் பெருந்தகையும் நரகம் பற்றிப் பேசுகிறார். வள்ளுவர் பயன்படுத்தும் `அளறு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு நரகம் என்று பொருள்.

`உண்ணாமை உள்ளது உயிர் நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.’
(குறள் எண் 255)

உயிர்கள் உடம்போடு வாழும் நிலைமை, மாமிச உணவை உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது. ஊன் உண்டால் நரகம்தான் அவனை ஏற்றுக்கொள்ளும்.

`ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.’
(குறள் எண் 835)

ஏழு பிறவிகளிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரியதான நரகத்துன்பத்தைப் பேதை தன் ஒருபிறவியிலேயே தனக்குச் செய்துகொள்ள வல்லவனாவான்.

`வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.’
(குறள் எண் 919)

பொருள் தருவார் யாராயினும் அவர்களைத் தழுவும் பரத்தையரின் மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.புலால் உண்போர் நரகம் புகுவர் என்றும் பேதைகள் இந்தப் பிறவியிலேயே ஏழு பிறவிகளிலும் நரகம் புகுவதற்கு உரியவற்றைச் செய்துகொள்வர் என்றும் பொருட்பெண்டிர் மூலம் அனுபவிக்கும் இன்பம் நரகத்திற்கு நிகரானது என்றும் வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

ஒரு தனிநபர் செய்த பாவங்களின் கணக்குகள் யமனின் அவையில் அவனது செயலாளராக இருக்கும் சித்ரகுப்தனிடம் உள்ளன. சித்ரகுப்தன் ஒவ்வொருவர் செய்த பாவச் செயல்களின் பட்டியலைப் படித்து எமனிடம் எடுத்துக் கூறுகிறார். எமன் தனிநபர்களுக்கு அவரவரின் பாவங்களுக்கு ஏற்ப தகுந்த தண்டனைகளை அனுபவிக்க உத்தரவிடுகிறார்.

`கொதிக்கும் எண்ணெயில் தோய்த்தல், நெருப்பில் எரித்தல், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்திச் சித்ரவதை செய்தல்’ என இந்த தண்டனைகள் பலதரப் பட்டவை.
நரகத்தைப் பற்றியும் நரகத்தில் பாவம் செய்தவர்கள் பெறும் தண்டனைகளைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது கருட புராணம். இந்து சமயத்தின் பதினெட்டுப் புராணங்களில் இது பதினேழாவதாக அமைந்துள்ள புராணம்.

இந்தப் புராணத்தின் உத்தி வித்தியாசமானது. திருமாலும் அவரது வாகனமான கருடனும் ஒருவரோடொருவர் உரையாடும் பாணியில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த நூல் முழுவதும் கருடன் நிறையப் பேசுவதால், இந்த நூலுக்கே கருட புராணம் என்ற பெயர் வழங்கலாயிற்று.தாமிசிர நரகம், அநித்தாமிஸ்ர நரகம், ரெளரவ நரகம், மகாரெளரவ நரகம், கும்பிபாகம், காலகுத்திரம், அசிபத்திரம், அந்தகூபம், அக்னிகுண்டம், வஜ்ரகண்டகம், கிருமி போஜனம், வைதரணி என்றிப்படியான பலவகைப்பட்ட நரகவேதனைகள் பற்றி கருடபுராணம் விவரிக்கிறது. இறப்பு நடந்த வீடுகளில் கருட புராணத்தை வாசிக்கும் வழக்கமும் உண்டு.

மகாபாரதத்தில் தருமமே வடிவான யுதிஷ்டிரர் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் இருக்க நேர்ந்தது பற்றிய செய்தி வருகிறது.புஷ்பக விமானத்தில் ஏறிய தருமன் நேரடியாக சொர்க்கம் சென்றான். ஆனால் என்ன ஆச்சரியம். துரியோதனனும் பிற கெளரவர்களும் சொர்க்கத்தில் மிக ஆனந்தமாக இருந்தார்கள். தன் தம்பியரையும் மனைவி பாஞ்சாலியையும் தருமனின் விழிகள் அங்குமிங்கும் தேடின. ஆனால் அவர்கள் யாரும் அங்கே இல்லை.தன்னை சொர்க்கத்திற்கு அழைத்துவந்த தேவ தூதர்களைப் பார்த்து `என் தம்பியரும் மனைவியும் எங்கே? அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போக விரும்புகிறேன்’ என்றான் தருமன். அழைத்துச் சென்றார்கள் தூதுவர்கள்.

அங்கு ஒரே இருட்டு. ரத்தமும் மாமிசமும் சகதியாக இருந்தது. சகிக்க முடியாத நாற்றம். பல உடல் உறுப்புகள் கீழே கிடந்தன. அதுதான் நரகம்.தருமன் திகைத்தான். அப்போது அவன் தம்பியர் குரலும் பாஞ்சாலி குரலும் கேட்டன. `தருமரே! இங்கிருந்து போகாதீர்கள். நீங்கள் வந்ததால் எங்கள் வேதனை குறைந்தது. மேலும் சற்றுநேரம் நீங்கள் இங்கு நின்றால் எங்கள் வேதனை இன்னும் சிறிது குறையும்’ என அந்தக் குரல்கள் பரிதாபமாகக் கெஞ்சின.

தேவ தூதர்கள் தருமனை மறுபடி சொர்க்கத்திற்கு வருமாறு அழைத்தார்கள். அவன் செய்த புண்ணியங்களின் காரணமாக அங்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்கள்.தருமன் தன் தம்பியரும் மனைவியும் இருக்கும் இந்த நரகத்திலேயே தான் இருக்க விரும்புவதாகச் சொல்லி சொர்க்கம் வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டான்.ஒரு முகூர்த்த நேரம் கடந்தது. பின் அங்கே உள்ள காட்சிகள் தானாய் மறைந்தன. பொன்னொளி எங்கும் பரவியது. எமனும் இந்திரனும் காட்சி தந்தார்கள்.தருமனை சோதிக்கவே ஒரு முகூர்த்த நேரம் இந்த மாயா நரகம் தோன்றியதாகவும் அது மறைந்துவிட்டது என்றும் அவர்கள் அறிவித்தார்கள். பின் தம்பியரோடும் பாஞ்சாலியோடும் தருமன் சொர்க்கம் சென்றான் என்கிறது மகாபாரதக் கதை.

சங்க இலக்கியத்தில் சொர்க்கம் நரகம் என்ற கருத்து உண்டு. ஆனால் இந்தச் சொல்லாட்சி இல்லை. சொர்க்கத்தைச் சங்க நூல்கள் துறக்கம் எனக் குறிப்பிடுகின்றன. நரகத்தை நிரயம் என்ற சொல்லால் குறிக்கின்றன. சொர்க்க நரகக் கோட்பாடு சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது எனக் கொள்ளலாம்.திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து திருமந்திர உபதேசம் பெற வந்தவர் மகான் ராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பி, தன் இல்லத்தின் உள்ளிருந்து யார் எனக் கேட்க, `நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ எனச் சொல்ல, நம்பி, ‘‘நான் செத்தபின் வா!’’ என்றார். புரியாத ராமானுஜரும் திரும்பிச் சென்றார்.

தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பியின் பதில் அதே பதில்தான். அடுத்த முறை சென்ற ராமானுஜர் ‘‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். நான் என்னும் அகங்காரம் நீங்கிய அவர் பதிலைக் கேட்டு அவரை உள்ளே அழைத்தார் நம்பி, `ஓம் நமோ நாராயணாய’ என்ற உன்னத மந்திரத்தை உபதேசம் செய்தார்.அந்த மந்திரத்தை மாற்றுச் சாதியினருக்குச் சொல்லக்கூடாது என்றும் அவர் கட்டளையிட்டார். ஏன் என்று ராமானுஜர் வினவியபோது, `இதைச் சொன்னால் கேட்பவர் வைகுண்டம் செல்வர், சொல்லும் நீ நரகம் செல்வாய்’ என்றார் நம்பி.

அதைப் பொருட்படுத்தாத ராமானுஜர், திருக்கோஷ்டியூர் கோயில் மதில்மீது ஏறி நின்று அனைத்து சாதி மக்களையும் உரக்கக் கூவி அழைத்தார். ‘‘நான் உங்களுக்கு மிகப் புனிதமான ஒரு மந்திரத்தை உபதேசிக்க விருக்கிறேன்’’ என்று கூறி, `ஓம் நமோ நாராயணாய’ என்று அனைத்து மக்களுக்கும் அதை உபதேசித்தருளினார்.அப்போது அவரது குருவான திருக்கோஷ்டியூர் நம்பி, `ஏன் இதைச் செய்தாய்?’ எனச் சீறினார். ராமானுஜர் ‘‘இதைக் கேட்டு இவர்கள் அனைவரும் நாராயணன் திருவடிகளை அடைவாராயின் அது போதும் எனக்கு. இவர்கள் பொருட்டு நான் நரகம் செல்லவும் தயார். எண்ணற்றோர் சொர்க்கம் புகவேண்டி நான் ஒரே ஒருவன் நரகம் செல்வது தவறல்ல!’’ என்றார்.

மற்றவர்க்காக நரகம் புகவும் அஞ்சேன் எனச் சொன்ன ராமானுஜரின் உயர்ந்த கருணை உள்ளத்தைக் கண்டு நம்பி உருகி மனம் திருந்தியதாக வரலாறு சொல்கிறது.
அப்பரின் அழகிய தேவாரப் பாசுரம் ஒன்று சிவனடியார்கள் நரகத்தில் இடர்ப்பட மாட்டார்கள் எனத் தெளிவு படத் தெரிவிக்கிறது.

`நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே
குறுகினோமே.’
(அப்பர் தேவாரம்)

சங்கரனின் அடியவர்கள் சிவனை அன்றி யாருக்கும் சேவகம் செய்யமாட்டார்கள் என்றும், எமனுக்கும் அஞ்ச மாட்டார்கள் என்றும், நரகத்தில் துன்பப்பட மாட்டார்கள் என்றும் தன்மானத்தோடு உறுதி படக் கூறுகிறார் அப்பர் சுவாமிகள். வள்ளலார் மனுநீதிச் சோழன் கதையை `மனுமுறை கண்ட வாசகம்’ என நூலாக எழுதியுள்ளார். அதில் ஒருவனை நரகத்தில் ஆழ்த்தக் கூடிய பாவப் பட்டியல் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

‘‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள்பல சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!

ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருட்ச மழித்தேனோ!

பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

மேற்சொன்ன பாவங்கள் அனைத்தும் ஒருவனை நரகத்தில் ஆழ்த்தும் என்பதால் இந்தப் பாவங்களில் எதையும் நாம் செய்யாதிருக்க வேண்டும் என வள்ளலார் அறிவுறுத்துகிறார்.

நரகம் சொர்க்கம் பற்றிய சிந்தனைகள் இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் மட்டுமல்ல, திரைப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. `வசந்த மாளிகை’ திரைப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் பி. சுசீலா குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் பேசுகிறது.

தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டால் நரகம், அவற்றிலிருந்து விலகி நின்றால் சொர்க்கம் என்கிறது `கலைமகள் கைப்பொருளே’ எனத் தொடங்கும் அந்தப் பாடல்.

`கலைமகள் கைப் பொருளே உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ….

சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான்
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே.. இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே.’

இறுதியாகச் சொர்க்க நரகக் கோட்பாட்டை எளிதாய் இப்படி விளக்கலாம்: `வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் நெறிப்படி வாழ்ந்தால், இந்தப் பிறவியில் இங்கேயே சொர்க்கம். இல்லாவிட்டால் இப்பிறவியில் இங்கேயே நரகம்!’.

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post வாழ வழிகாட்டும் வள்ளுவம்! appeared first on Dinakaran.

Tags : Valluvam ,Hinduism ,Valluva Parundhak ,
× RELATED இந்திய சினிமாவில் அதிரடியாக...