×

ராமனுக்கு உடனடியாக மகுடம் சூட்ட வேண்டும் என்று தசரதன் ஏன் முடிவெடுத்தான்?

திருமணம் முடிந்து அயோத்திக்குத் திரும்புகின்றான் ராமன். அயோத்தி மக்களுக்கு ஏக மகிழ்ச்சி. பாசுரப்படி ராமாயணத்தைத் தொகுத்த பெரியவாச்சான் பிள்ளை, இந்த இடத்தில் ஆழ்வார்களின் அருள் செயலிலிருந்து ஒரு வரியை எடுத்து இணைக்கின்றார். “அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க” என்பதுதான் அந்த வரி. அதாவது, ராமனுக்கு மிக விரைவில் பட்டாபிஷேகம் நடக்க இருக்கின்றது என்பதைச் சொல்லுகின்ற அற்புதமான வரி. பத்து திசைகளையும் ஆண்ட தசரதன், ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு ஏன் வந்தான் என்கின்ற கேள்விக்கு விடை தருகிறது ஒரு அற்புதமான பாடல். வெறும் ராமாயணக் கதையாக மட்டும் இதனை எடுத்துக் கொள்ளாமல் நம்முடைய வாழ்வியலில் பின்பற்ற வேண்டிய பல அற்புதமான விஷயங்களையும் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு மறைமுகமாக எடுத்துச் சொல்லுகின்றது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் ராமாயணம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லா மக்களின் மனத்திலும் அரியணை போட்டு அமர்ந்திருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நான்கு நிலைகள் நம்முடைய சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அது, வாழ்க்கையை வகையாக வாழ்வதற்காக தொகுக்கப்பட்ட நெறி என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலே நான்கு பிரிவாக பிரித்து இருக்கிறார்கள். இதனை நான்கு ஆசிரமம் என்று சொல்லுகின்ற வழக்கம் உண்டு.

1. பிரம்மச்சார்யா (மாணவர்), 2. கிருஹஸ்தா (இல்லறம்), 3. வானபிரஸ்தா (மெல்ல பந்தங்களிலிருந்து விலகுதல்), மற்றும் 4. சந்நியாசம் (பந்தங்களிருந்து விடுபடுதல்). இதில் முதல் ஆசிரமம் என்பது பிரம்மச்சரியம் எனப்படும் நிலை. இது கல்வி கற்பதற்கும் உலகியல் அனுபவங்களைப் பெறுவதற்குமான ஒரு வாய்ப்பைத் தருகின்ற பகுதி. இதற்குப் பிறகு அவன் இல்லறத்தில் இறங்க வேண்டும். இல்லறம் என்றாலே அதிலே அறம் என்ற வார்த்தையும் இணைந்து இருக்கிறது அல்லவா! இல்லறமே நல்லறம். எல்லா அறங்களும் நிகழ்த்துவதற்கு துணை புரிகின்ற அறம் என்பதால் இதனை முதலிலேயே வைத்தார்கள்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்என்பான் துணை.

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும். இந்த இல்லறத்தில் தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் வாழ்கின்ற ஒரு நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். பிறகு, அவர்களுக்கு சந்ததி வளர்ச்சி ஏற்படுகின்றது. அடுத்தடுத்து மக்கள் பிறக்கின்றார்கள். அவர்களுக்கான கடமைகளைச் செய்து முடித்தவுடன், அடுத்த நிலைக்கு மனிதன் சென்றுவிட வேண்டும். பல பேர் இல்லறம் என்கிற நிலையிலேயே வாழ்வின் முடிவு வரை இருந்து விடுகிறார்கள் என்பது துரதிஷ்டவசமானது. மூன்றாவது நிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அந்த இல்லறத்தினுடைய கடமைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அந்தக் கடமையை அடுத்த சந்ததியினர் செய்வதற்கு வழிவிடுவது.

இனி, தன்னுடைய ஆன்மாவினுடைய முன்னேற்றத்திற்காகவும், தன்னுடைய ஆன்ம விடுதலைக்காகவும் வாழவேண்டும். இனியும் அவன் பாச பந்தங்களோடு இருந்தால், அது பள்ளத்திலே இருந்து மேலே ஏறுவதற்கு மறுக்கின்ற நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையைதான் வானப்பிரஸ்தம் என்றார்கள். இதற்குப் பிறகு தன்னை முற்றிலுமாக உலகியல் பந்தங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு தன்னுடைய ஆன்மாவை கடைத்தேற்றும் வழியைத் தேடுவது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வழியைத்தான் துறவறம் என்று சொன்னார்கள். துறவறம் என்பது முற்றிலும் துறப்பது மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்ந்தாலும்கூட இல்லறத்தின் பொறுப்புக்களில் இருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிடுவதுகூட துறவறம்தான்.

துறவறம் என்றால், காட்டுக்குச் சென்று தவம் செய்வது என்று நாம் எடுத்துக் கொள்கின்றோம். எதற்காக காட்டுக்குச் சென்று தவம் செய்கிறார்கள் என்று சொன்னால், குடும்பத்தில் இருந்து கொண்டு நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் கண்ணாரப் பார்த்துக் கொண்டு எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் தனித்து இருப்போம் என்று காட்டுக்குப் போகிறார்கள். இல்லறத்தில் இருந்து கொண்டே தன்னை விடுவித்துக் கொண்டு துறவற நிலையில் இருக்கும் பக்குவமும் அனுபவ முதிர்ச்சியும் வந்துவிட்டால், அவன் காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவன் அரசாட்சியிலும் இருக்கலாம். இல்லறத்திலும் இருக்கலாம். நிர்வாகத்திலும் இருக்கலாம்.

எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருந்தவர்கள் உண்டா என்று கூட நீங்கள் கேட்கலாம்? அப்படிப் பட்டவரைத் தான் ராமாயணம் காட்டுகின்றது. அவர்தான் ஜனக மகரிஷி. அந்த ஜனக மகரிஷியை ராஜரிஷி என்று சொல்லுகின்ற வழக்கம் இருக்கிறது. காரணம் அவர் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருந்தாலும்கூட எதிலும் பற்றற்றவராக, ஒரு சாட்சியாக, அதே சமயம் மக்களுக்கு எந்தவிதமான குறைவும் இல்லாமல் ராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் என்பதை நாம் ராமாயணத்திலிருந்து தெரிந்து கொள்கின்றோம்.

அப்படிப்பட்டவர்கள் இருக்கும் பொழுது உலகம் செழிப்பாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எப்படி மாறுவது? எந்த வயதில் மாறுவது? என்று ஒரு கேள்வி எழும். ஒரு குறிப்பிட்ட வயதை மட்டும் நாம் சொல்லி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம், ஒருவனுக்கு 20 வயதில் பிரம்மச்சரியம் முடிகிறது. அவன் இல்லறத்தில் நுழைகின்றான். இல்லறத்தில் நுழைந்து ஒரு குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தைக்கு பிரம்மச்சரிய நிலையிலிருந்து இல்லற நிலையை ஏற்க (திருமணம் செய்ய) அடுத்த 20,25 வருடங்கள் ஆகிறது. எனவே 45வது வருடத்தில்தான் சற்று குடும்ப பாரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்று ஒரு கணக்குச் சொல்ல முடியாது.

காரணம், சில பேருக்கு இல்லற வாழ்க்கையை ஏற்கவே 30 வயது 35 வயதுகூட ஆகிவிடலாம். ஆகையினால் இது அவரவர்களுடைய குடும்ப சூழலைப் பொறுத்த விஷயம். ஆனாலும்கூட, இயற்கை அதற்கான ஒரு அறிவிப்பை அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு இயற்கை செய்ததால்தான் தசரதன் உடனடியாக ஒரு முடிவுக்கு வருகின்றான். தான் இனி வானப்பிரஸ்த நிலையை எய்த வேண்டும், ராமனுக்கு உடனடியாக மகுடம் சூட்ட வேண்டும் என்று நினைக்கின்றான். இந்த அறிவிப்பு அவனுக்கு எப்படிப்பட்ட ஒரு மனநிலையை ஏற்படுத்தியது தெரியுமா?

தொகுப்பு: தேஜஸ்வி

The post ராமனுக்கு உடனடியாக மகுடம் சூட்ட வேண்டும் என்று தசரதன் ஏன் முடிவெடுத்தான்? appeared first on Dinakaran.

Tags : Dasaratha ,Rama ,Raman ,Ayodhya ,Periyavachan Pillai ,Basura ,Alvars ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்