ஊட்டி, மார்ச் 11: கோத்தகிரி அருகே கண்ணவரை சோலை பகுதியில் சாலையில் அடிப்பட்டு வனவிலங்குகள் உயிரிழந்து வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராம பகுதியில் உள்ள கண்ணவரை சோலை என்ற வனப்பகுதி பல வனவிலங்குகளின் வாழிடமாக உள்ளது. அப்பகுதி வழியாக செல்லும் சாலையில் கரடி, புலி, முள்ளம்பன்றி போன்ற பல வன விலங்குகள் உணவுக்காக கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. வாரத்திற்கு இரண்டு மூன்று விலங்குகளாவது சாலை விபத்தில் மரணம் அடைகின்றன. குறிப்பாக சிறு விலங்குகளான அணில், முயல் போன்றவை உயிரிழக்கின்றன. இந்நிலையில் அழிவின் விளிம்பில் உள்ள பிரவுன் பாம் சிவெட் என்ற அரிய விலங்கு வாகனத்தில் அடிபட்டு இறந்ததது. இந்தப் பகுதி முழுவதும் பல்லுயிர் சூழல் மிக்க பகுதியாக அமைந்துள்ளது வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இப்பகுதியை ஒரு சிறப்பு பல்லுயிர் சூழல் பகுதி என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்தப் பாதையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள வேலி வனவிலங்குகளின் பாதையை கடப்பதற்கு இயலாத வகையில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையில் செல்லும் வாகனங்களும் அதிக வேகத்தில் செல்லும் வகையில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அந்த சாலையில் விலங்குகள் நடமாடும் பகுதி என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட வேண்டும். வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post கண்ணவரை சோலை பகுதியில் சாலை விபத்தில் அடிபட்டு பலியாகும் வன விலங்குகள் appeared first on Dinakaran.