×

சிம்ம ராசி குழந்தையும் தெய்வமும்

சிம்ம ராசிப் பண்புகள் என்பது ஆவணி மாதம் பிறந்தவர்களுக்கும் பொருந்தி வரும். சிம்ம ராசியில் அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு கூறப்பட்டு இருக்கும் கருத்துக்கள் பொருந்தி வரும். ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22க்குள் பிறந்தவர்களும் சிம்ம ராசிக் குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடம் மற்ற கிரக சேர்க்கை, பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இப்பண்புகள் கூடும் குறையும். ராசி அதிபதி சூரியன் வலுவாக இருக்கும் ஆடவர் முறுக்கு மீசை வைத்திருப்பர். தலைமுடி அடர்த்தியாக இருக்கும்.

ஆளுமை

இவர்களின் பொதுப்பண்பு எல்லோரிடமும் அன்பாகவும் நேர்மையாகவும் இருப்பது என்றாலும், அதைப் பலரும் அறியும் படி வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். ஆற்றல் மிகுந்த நெருப்பு ராசி என்பதனால்,
இவர்களுக்கு ஆளுமைப் பண்பு அதிகம்.

பணிவு

சிம்மராசிக்காரர், தான் மதிக்கின்ற தன் பெற்றோர், ஆசிரியர் மற்றும் வாழ்க்கைக்கு முன்னோடியாக திகழ்பவர்களிடம் மட்டுமே மிகமிகப் பணிவாக நடந்துகொள்வார்கள். மற்ற நேரங்களில் இவர்கள் கம்பீரமாகவே வலம் வருவர். பலர் தங்களைப் பார்க்க வேண்டும், தங்களைப் பின்பற்ற வேண்டும் தங்களுக்கு வணக்கம் சொல்லி வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற தோரணையில் நடந்து கொள்வார்கள்.

வசதி

ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், வசதிகளை எதிர்பார்ப்பார்கள். ஏழையாக இருப்பவர்கூட வெறும் பாயில் படுக்க மாட்டார். அதற்கு மேல் ஒரு போர்வையையோ பழைய சேலையையோ விரித்துத்தான் படுப்பார். பணக்காரனாக இருந்தால், பல லட்சம் செலவழித்து தன் படுக்கை அறையை அலங்கரித்து இருப்பார். ஆக, வசதி என்பது இவர்களின் அடிப்படைத் தேவையாகும்.

அகந்தை

சிம்ம ராசிக்காரரைப் பார்த்து திமிர் பிடித் தவர் என்று மற்றவர்கள் கருதுவர். பிடிவாதக் குணமும் அகம்பாவமும் உள்ளவர் என்று கருதுவர். ஆனால், குழந்தை உள்ளம் கொண்ட இவர்கள் தன்னுடைய கொள்கையில் கருத்தில் விருப்பத்தில் உறுதியாக இருப்பதால், இவர் காட்டும் உறுதியை மற்றவர்கள் பிடிவாதம், தலைக்கனம் என்று பெயர் சூட்டி ஏசுகின்றனர். விட்டுக்கொடுத்து செல்லும் பழக்கம் இவருக்கு கிடையாது, தான் சொன்னதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன்னுடைய கருத்தை தவிர உலகில் வேறு எவரும் சரியான கருத்தை கொண்டிருக்க இயலாது என்று கருதுவர். ஆனால், இவர்களுக்கு அறிவுக்கூர்மையும் ஆய்வுத் திறனும் அதிகம் இருப்பதால் இவர் களின் கருத்துக்கள் நூற்றுக்கு 90 சதவீதம் சரியாகவே இருக்கும். இவர்கள் பேச்சை கேட்டு மற்றவர்கள் நடக்கலாம். பொறுப்புணர்ச்சி மிக்கவர்கள். பொறுப்போடு நடந்துகொள்வர்.

பொருத்தம்

மேஷம் இவர்களுக்கு மிகவும் பொருந்தி வரும் ராசியாகும். இது தவிர மிதுனம், துலாம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் இவரோடு நட்பாகவும் இருக்கலாம், காதலிலும் இணையலாம். மேஷமும் தனுசும் நெருப்பு ராசி என்பதனால், சிம்மத்துக்கு கருத்தியல் ரீதியாக பொருந்தி வரும். காற்று ராசிகளான துலாமும் மிதுனமும் ஓரளவுக்கு இவர்களோடு ஒத்துப்போகும். இவர்களோடு சிறிதும் பொருந்தாத ராசிகள் என்றால், கன்னியும் மகரமும் ஆகும். மேலும், தண்ணீர் ராசியான விருச்சிகத்தையும்,
மீனத்தையும் குறிப்பிடலாம்.

சினம்

கோபப்படும்போது சிம்மராசிக்காரர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவது கிடையாது. எதையும் தூக்கி எறிவதோ, கீழே போட்டு உடைப்பதோ கிடையாது. ஒரே வார்த்தை ‘வெளியே போ’ என்பார்கள். கோபத்துக்கு காரணமானவர்கள் வெளியே போய்விட வேண்டும். இல்லையென்றால் அவர் அப்படியே உடுத்திய உடையோடு வெளியேறி விடுவார். மீண்டும் அந்த வாசல் படியை மிதிக்கமாட்டார்.

உள்முகச் சிந்தனையாளர் (introvert)

சிம்ம ராசிக்காரர், உள்முகச் சிந்தனை யாளர். தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. தன்னுடைய இன்ப துன்பங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. தன்னுடைய வெற்றிகளை மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், தமது துன்பத்தை, தன்னுடைய இயலாமையை, மன அழுத்தத்தை எவருக்கும் வெளிப்படுத்துவது கிடையாது. இவர்களைச் சுற்றி இருக்கும்
பிம்பமும் கோட்டையும் ஐஸ் கட்டியால் ஆனது. பார்க்க இறுக்கமாகத் தெரியும். அவரிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்தால் அந்த ஐஸ் கரைந்து போய், பிம்பம் உடைந்து போகும். இவர் ஒரு குழந்தை போல குதூகலமாக பேசுவார். இவர் அடக்கமாக எளிமையாக இருப்பதை பார்க்கலாம். ஆனால், பெரும்பாலும் சிம்ம ராசிக்காரரின் சுயரூபத்தை யாராலும் பார்க்க இயலாது.

பாசம்

சிம்ம ராசிக்காரர்கள், பொதுவாக தாய்ப் பாசம் அதிகம் உடையவர்கள் என்பதனால், இவர் டெல்லிக்கு ராஜா என்றாலும் தாய்க்கு பிள்ளைதான். சிம்ம ராசிக்காரரை எந்த ஒரு விஷயத்திற்கும் கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தும்போது கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து சில்லு சில்லாக உடைந்ததைப் போன்று அவர்கள் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப் போவார்கள்.

பதிலடி

சிம்ம ராசிக்காரர்களுக்கு, விருப்பமில்லாத எந்த வேலையையும் செய்ய அவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அதனுடைய விளைவு விபரீதமாக இருக்கும். அது உடனே நடக்கும் என்று சொல்ல முடியாது சில மாதங்கள், சில ஆண்டுகள்
கழித்துகூட நடக்கலாம். ஆனால், அடிக்கு அடி நிச்சயம். ஒவ்வொரு அடிக்கும் அவர் பதிலடி கொடுப்பார். தக்க தருணம் வரும்போது அது நடக்கும். ராட்சசன் போல் அடித்து துவம்சம் செய்வார். மொத்தத்தில் சிம்மராசிக்காரர் கொஞ்சும் குழந்தையாகவும், பாதுகாக்கும் தெய்வமாகவும் விளங்குவார்.

முனைவர்
செ.ராஜேஸ்வரி

The post சிம்ம ராசி குழந்தையும் தெய்வமும் appeared first on Dinakaran.

Tags : Avani ,Leo ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...