×

சுடர் வடிவேல் சுந்தரி

வீ ரர்களுக்கு ஆயுதங்கள் மாபெரும் செல்வங்களாகும். அவை பகைவர்களிடமிருந்தும் கொடிய விலங்குகளிடமிருந்தும் நாட்டையும் வீட்டையும் காக்கின்றன. தென்னகத்து வீரர்கள் ஆயுதங்களை உயிருக்கும் மேலாகப் போற்றினர். அவற்றில் கொற்றவை உறைவதாக நம்பினர். அவள் வெற்றியைத் தருவதால் வெற்றிச் செல்வி எனப்பட்டாள். முருகனின் வேலாயுதத்துள்ளும் ஒரு பெருஞ்சக்தி உறைவதாகச் சித்தர்கள் குறித்தனர்.

இவளை ‘‘சுடர்வடிவேல் ஞானசுந்தரி’’ என்று போற்றினர். இவள் வழிபாடு வழிவழியாக உபதேச முறையில் வந்ததால் வெளியுலகில் அதிகம் பேருக்கு தெரியவில்லை.
சிவபெருமானால், அவருடைய பாசுபதாஸ்திரம், அகோராஸ்திரம் முதலான அனந்தகோடி அஸ்திரங்களுக்கும் மேலான சக்தியுடையதாகப் படைக்கப்பட்டு முருகனுக்கு அளிக்கப்பட்ட திவ்ய அஸ்திரம் ‘‘வேலாயுதம்’’ ஆகும். வேலாயுதத்திற்கு மேலும் மேலும் சக்தி அளித்து அதியுன்னத ஆயுதமாக ஆக்கியவள் அன்னை பராசக்தியாவாள். அவளுடைய அருளாற்றலும் வீரத்தின் விளைவும் இந்த வேலுக்குள் அனந்த கோடி மகாசக்தியாக திகழ்கிறது.

இந்த மகாசக்தி தேவி ‘‘சிவசக்தி’’யரின் கூட்டு வடிவமாக அழகிய மங்கையாக வெளிப்படுகிறாள். இவள் தனது அளவற்ற ஆற்றலால் மும்மூர்த்திகளுக்கும் மேலானவள். இவளை ‘‘ஜோதிசுடர்வடிவேல் சுந்தரி’’ என்று சித்தர்களும் முனிவர்களும் போற்றுகின்றனர்.

இவள் அனந்த கோடி முகங்களைக் கொண்டவள் என்றாலும், அன்பர்களுக்கு அருள்புரிய பத்து
திருமுகங்களுடன் காட்சியளிக்கிறாள். இந்தப் பத்து முகங்களும் நம்மைச் சுற்றியுள்ள எண்திசைகள் வானம், பாதாளம் ஆகிய பத்து திசைகளிலிருந்தும் நமக்கு ஆபத்துகள் வராமல் காப்பதைக் குறிக்கின்றது. மற்ற தெய்வங்கள் ஏந்தும் ஆயுதங்கள் பகைவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் தொழிலை மட்டுமே செய்கின்றன. முருகனின் இந்த திவ்ய வேலாயுதமோ சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழிலையும் செய்கின்றது. இதனால் இது சிவசக்தியரின் அம்சமாகக் கொள்ளப்படுகிறது. இந்த வேலாயுதத்துள் வீற்றிருக்கும் “வாலை ஞானசுந்தரியை’’ சிவகுமாரத்தி, ‘‘சிவ செல்வி’’, ‘‘சிவசுந்தரி’’, ‘‘சொரூப வேல் சுந்தரி’’ என்று பலவாறு போற்றுகின்றார்கள்.

இவளுடைய பத்துத் திருமுகங்களில் எட்டு திருமுகங்கள் நம்மைச் சுற்றியுள்ள எட்டு திசைகளையும் நோக்கியவாறு அமைந்துள்ளன. மற்ற இரு முகங்களில் ஒன்று ஆகாச வெளியைக் காக்க விண்ணை நோக்கிய வாறும், மற்றது பாதாளத்தைக் காக்க கீழ்நோக்கியவாறும் அமைந்துள்ளன. (சிற்பங்களில் முதலில் குறித்த எட்டு முகங்களே காட்டப்பட்டுள்ளன. மேல் நோக்கின ஊர்த்துவமுகமும், கீழ்நோக்கிய அதோமுகமும் நமக்குப் புலப்படுவதில்லை) எட்டு திருமுகங்களில் கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு ஆகிய ஐந்து திசைகளை நோக்கியவாறு அமைந்துள்ள ஐந்து முகங்கள் பெண்
முகங்களாகும்.

இவை முறையே பொன், செம்மை, பவளம், பச்சை, வெண்மை ஆகிய நிறங்களைக் கொண்டவை. தெற்கு நோக்கிய முகம்வராக முகமாக உள்ளது. இந்தப் பன்றிமுகம் அவள் எல்லையில்லாத வீரவனிதையாக நிலை பெற்றிருப்பதைக் குறிக்கின்றது. கருமையான நிறம் கொண்ட இம்முகத்தால் அவள் அஞ்ஞானத்தை விலக்கி உயிர்களுக்கு ஞானத்தை அருளும் ஞான மூர்த்தியாகத் திகழ்கின்றாள். மேற்குநோக்கிய முகம் அடர்த்தியான செந்நிறமான பிடரிமயிர்களுடன் கூடிய சிங்கமுகமாகத் திகழ்கிறது. வழக்கமாக (பெண் சிங்கத்திற்குப் பிடரிமயிர் இல்லையென்றாலும் இம்முகத்தில் அது திகழ்கிறது. விரிந்து படர்ந்துள்ள சிங்கக் கண்களிலிருந்து உக்கிரமான தீப்பிழம்புகள் தோன்றுகின்றன. இம்முகத்தால் இந்த வேல்சுந்தரி அளவற்ற வீரத்தை விளைக்கிறாள். பகைவர்களைச் சுட்டெரித்து அழிக்கிறாள். அனேக கோட்டைகள் அழித்துத் தூளாக்கிய மகிழ்ச்சியால் இம்முகம் வீரட்டகாசம் புரிகின்றது.

அடுத்ததான வடக்கு நோக்கிய முகம் யானைமுகமாகத் திகழ்கிறது. இது ஸ்படிக நிறத்துடன் ஓங்காரரூபமானது. இந்த முகத்தினால் அவள் அளவற்ற ஞானத்தை அன்பர்களுக்கு அருளுகின்றாள். இப்படி, பத்துமுகங்களுடன் திகழ்வதால் இவளைத் ‘‘தசவதனா’’ என்று அழைக்கின்றனர். இவளைக் கிழக்கிலிருந்து இந்திரனும், தென்கிழக்கிலிருந்து அக்னியும், தெற்கிலிருந்து யமனும் நிருதி திக்கிலிருந்து நிருதியும், வருண திசையான வடமேற்கிலிருந்து கடல் அரசனும் நதிப் பெண்களும். வாயு மூலையிலிருந்து தேவர்களும், வடக்கிலிருந்து குபேரன் முதலான யட்ச கணங்களும் கந்தர்வர்களும், ஈசானத் திசையிலிருந்து சதகோடி உருத்திரர்களும் போற்றிக் கொண்டிருக்கின்றனர். வானவெளியில் நிறைந்து நின்று எண்ணிலாத முனிவர்கள் வாழ்த்துக்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

நாம் எங்கிருந்து பார்த்தாலும் அவள் நம்மைப் பார்ப்பது போலவே இருக்கின்றது. இதையொட்டி. அவள் உருவத்தைக் கிழக்கிலிருந்து பார்க்கும்போது தோன்றுவதைப் போலவே மேற்கிலிருந்து பார்த்தாலும் தோன்றுகிறாள். ஆனால், அவள் மேற்கிலிருந்து பார்க்கும்போது அத்திசைக்குரிய சிங்கமுகத்துடன் காட்சியளிக்கிறாள். அதைப் போலவே, இவளை எங்கிருந்து பார்த்தபோதும் அங்கெல்லாம் பத்து கரங்களுடனேயே காட்சியளிக்கின்றாள். இது அவள் பத்து திசைகளிலிருந்தும் நம்மைக் காப்பதைக் குறிக்கிறது.

கிழக்கிலிருந்து பார்க்கும்போது நமக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு தென்கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளை நோக்கிய ஐந்து முகங்களும், பத்து கரங்களும் தோன்றுகின்றன. இந்த பத்து கரங்களில் அபய முத்திரை வரதம், தாமரை, வஜ்ஜிரம், குலிசம், மான், மழு, கமண்டலம், ஜெபமாலை, சேவல் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இதில் அபயம் அவள் உயிர்களுக்குக் காவலாக இருந்து அபயமளித்தலையும், வரதம் வேண்டிய வரங்களை அளிப்பதையும், தாமரை அறிவைப் பெருக்குவதையும் வஜ்ஜிரம், உயிர்களுக்குக் கோட்டை போல் காவலாக இருப்பதையும், குலிசம், உயிர்களுக்கு உணவூட்டி மகிழ்விப்பதையும், மான் ஏந்துதல் வேதங்களைக் காப்பதையும் கமண்டலம், நீர்வளத்தைப் பெருக்குவதையும், ஜெபமாலை யோகம் தவம் செய்வோரைக் காப்பதையும், சேவல் காலத்தை வென்றிருப்பதையும் குறிக்கின்றன.

வேலின் மையத்தில் இவளுடைய திருவுருவம் கடலிலிருந்து வெளிப்பட்டு வருவதுபோல் இடுப்புவரை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இது இவளுடைய பாதங்கள் பாதாளத்தை ஊடுருவியுள்ளன என்பதைக் குறிக்கிறது. பின்னாலிருந்து பார்க்கும் போது, இவளுடைய வடக்கு, வடமேற்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு ஆகிய ஐந்து திசைகளை நோக்கிய ஐந்து முகங்களைக் காண்கிறோம். இவ்வரிசையில் மையத்திலுள்ள சிங்கமுகமும், வடக்கில் யானை முகமும், தெற்கில் வராகமுகமும் இவைகளுக்கிடையில் அழகிய பெண்முகங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்பக்கத்திலிருந்து காணும்போது அவள் மிக உக்கிரமயமானவளாகக் காட்சியளிக்கின்றாள். சங்கு, சக்கரம், சூலம், உடுக்கை, தீயகல்,வில், அம்பு, தண்டம், நீலோற்பலம், ஆந்தை ஆகியவற்றைத் தாங்கிய பத்து கரங்களுடன் திகழ்கிறாள்.

இதில் சங்கு வெற்றி முழக்கத்தையும், சக்கரம் ஆயுதங்களால் வெற்றி பெறுவதையும், சூலம் மூன்று
உலகங்களை மூன்று காலங்களிலும் ஜெயித்துக் கொண்டே இருப்பதையும், உடுக்கை தனக்கு வேண்டிய யுத்த சேனைகளைத் தானே படைத்துக் கொள்ளும் ஆற்றலையும், தீய பகைவர்களைக் கொளுத்தி கூண்டோடு அழித்தலையும், வில் அம்புகள், ஓயாத வெற்றியையும், தண்டம் பகைவர்களைத் தண்டித்தலையும் நீலோற்பலம் கலங்காத மனத்தையும், ஆந்தை இரவில் விழித்திருப்பதுடன் அனைத்து திசைகளை நோக்குவதையும் குறிக்கின்றன. இவள் அரையில் நீண்டஞான வாளைக் கட்டியுள்ளாள். சர்ப்பங்களைக் கங்கணங்களாகவும், தீப்பிழம்புகளால் ஆன மாலையையும் அணிந்துள்ளாள். இதனையொட்டி ‘‘நாக வளையாள்’’, சர்ப்ப கங்கணா,’’ ‘‘ஜ்வா லாமாலினி’’ எனப் பலவாறு போற்றப்படுகின்றாள்.

இந்த ‘‘சுடர்வடிவேல் ஞானசுந்தரி’’ கடலுக்கு நடுவில் நிற்பது (பாற்கடலிலிருந்து மகாலட்சுமி வந்ததைப் போல் இருக்கின்றது) இதையொட்டி இவள் குகாஸ்திரநிதி, குகாஸ்திரலட்சுமி, அஸ்திரலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். கடலுக்கு நடுவில் கீழே மறைந்திருக்கும் உலகை அழிக்கவல்ல காலாக்னி எனப்படும் வடவாமுகாக்கினி அவளுடைய திருவடிகளைப் பூஜித்துக்கொண்டே இருக்கின்றது என்பர்.

இவள், இதுநாள்வரை தனது உருவத்தை மறைத்துக் கொண்டிருந்தாள். அகத்தியர் முதலான முனிவர்களும், தேவர்களும் இவளிடம், ‘‘அம்மா, கலியுகத்தில் எங்கும் போரும் குழப்பமும் கலகமும் மலிந்து வருகின்றன. இவற்றைத் தடுக்க நீயெழுந்து வரவேண்டும் என்று வேண்டினர்.

ஜெயசெல்வி

The post சுடர் வடிவேல் சுந்தரி appeared first on Dinakaran.

Tags : Sudar Vadivel Sundari ,Victory ,Murugan ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...