×

சிவராத்திரிக்கே உரிய சிறப்புமிக்க திருத்தலங்கள்

அனைத்து சிவாலயங்களிலும், சிவத் தலங்களிலும் சிவ பெருமானை சிவராத்திரியில் வழிபாடு செய்தால் இம்மை, மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்றாலும், சிவராத்திரிக் கதைகளோடு தொடர்புடையதாகவும், சிவராத்திரிக்கே உரியதாகவும் சில தலங்கள் சிறப்புடன் பேசப்படுகின்றன. அவற்றில், சிலவற்றை இங்கு காணலாம்.

திருஅண்ணாமலை: பிரம்மனும், திருமாலும் அடிமுடிதேட அழல்மலையாய் நின்ற பெருமான், மானிடர் உய்யும் பொருட்டு கல்மலையாக நின்ற இடமே திருஅண்ணாமலையாகும். அவர் அந்த நாளில் ஜோதி வடிவாய் நின்றதை விளக்கவே இந்த நாளில் மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்று “அருணாசலபுராணம்’’ கூறும். இங்கு சிவராத்திரி பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இது மாசிச் சிவராத்திரிக்கு உரியதலமாயினும், இந்நாளில் கார்த்திகை தீபத்தாலேயே மிகப் பெருமை அடைந்துள்ளது.

திருக்கடையூர்: இது மார்க்கண்டேயன், எமனை வெல்லும் பொருட்டுச் சிவபூசைசெய்த இடம். மூன்றாம் ஜாமத்தில் இங்குள்ள லிங்கத்திலிருந்து சிவப் பெருமான் வெளிப்பட்டு, அவனுக்காக எமனை உதைத்து வீழ்த்திய இடம். சிவபெருமான் காலசம்ஹாரராக பெரிய திருச்சபையில் எழுந்தருளியுள்ளார். உதைபட்ட எமன், காலடியில் கிடக்கும் நிலையிலும் பின்னர் அருள்பெற்று வணங்கும் நிலையிலுமாக இரண்டு உலாத் திருமேனிகளாக அமைந்துள்ளான்.

காஞ்சி: சிவப் பெருமானின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூட, அதனால் உலகத்தில் இருள் சூழ, பெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பத்தால் உலக உயிர்கள் வருந்தின. அப்பாவம் நீங்க சிவனை பார்வதிதேவி பூசித்த இடம் இதுவாகும். உலகம் இருண்ட அந்த காரமான இரவில், ருத்திரர்கள் இங்கு பூசித்தனர். அந்த ருத்திரர்கள் பூசித்த ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம் ருத்திர கோடீசம் முதலிய பல ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சிப் புராணத்தில் இவ்வூரின் ஒருபகுதி ருத்திரசோலை என வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சைலம்: சிவமகாபுராணத்தில் சொல்லப் பட்டுள்ள மான் வேடன் கதை நடந்த இடம் இது என்பர். ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும் இடம் இதுவாகும். மல்லிகை மலர்களைச் சூடுவதால் இப்பெருமான் மல்லிகார்ச்சுனர் என்றழைக்கப்படுகிறார்.ஓமமாம்புலியூர்: சிதம்பரத்தையடுத்து 24 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திலும், திருவைக்காவூர் புராணத்தையொட்டிய வேடன் புலிக்கதை கூறப்படுகிறது. சிவபெருமான் பிரணவப் பொருளைத் தேவிக்கு உரைத்த இடம்.

பிரணவ வியாக்ரபுரம் எனவும் அழைக்கப்பெறும்.திருக்கழுக்குன்றம்: கோடி ருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூசித்த இடம். இந்தத் தலம் ருத்திரகோடி என்றும் அழைக்கப்படும்.இவை தவிர, காளத்தி, திருக்கேதீச்சரம் திரிகோணமலை, மதுரை முதலியனவும் சிவராத்திரிக்கு உரிய தலங்களாகும்.

ஆட்சிலிங்கம்

The post சிவராத்திரிக்கே உரிய சிறப்புமிக்க திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Lord ,Shiva ,Shivratri ,
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!