×

மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்

1. சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி

நாம் எதிர்பார்த்த சிவராத்திரி வந்துவிட்டது. சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி. அவன் தேவிக்கு இசைந்தது நவராத்திரி என்று சொல்வார்கள். சிவபெருமான் விரும்புகின்ற ஒரு உற்சவம் தான் சிவராத்திரி என்பது சைவத்தின் தேர்ந்தமுடிவு. அந்த சிவராத்திரி இந்த முறை அற்புதமான மங்களங்கள் தருகின்ற வெள்ளிக்கிழமை வருவது இன்னும் சிறப்பு. சோபகிருது வருடமான இந்த வருடம், மாசி மாதம் 25ம் நாள், மிகச் சிறப்பான கிரக நிலைகளோடு சிவராத்திரித் திருநாள் அமைந்திருக்கிறது.

காலையில் திருவோணம். பிறகு செவ்வாய்க்குரிய அவிட்டம். தோராயமாக இரவு 8 மணி வரை திரயோதசி திதி இருப்பதால் மகா பிரதோஷம். தொடர்ந்து இரவில் சதுர்த்தசி வந்து விடுகிறது. இம்முறை சிவராத்திரி தத்துவங்களோடு சிவாலயதரிசனமும் (பஞ்ச பூத தலங்கள்) பெறும் வகையில் முப்பது முத்துக்கள் தொகுத்திருக்கிறோம்.

2. இறைவன் இலிங்கமாகத் தோன்றிய நாள்

இறைவன் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் இருக்கிறான். இதில் அருவுருவ நிலை இலிங்க நிலை. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி பதினாலாம் நாள்) இரவு பதினான்கு நாழிகை இறைவன் இலிங்கமாகத் தோன்றிய காலம். இதுவே மகா சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்தநாளில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்கு உடம்பாகவும், சதுர்த்தசி சக்தியாகவும் சிவாகமம் கூறும். சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஆன்மார்த்த பூஜையும் பரார்த்த பூஜையும் நிகழ்த்தல் வேண்டும். இவற்றை அன்புடன் நிகழ்த்துவோர் இம்மை மறுமை யின்பங்களையும், முடிவில் முக்தியின்பத்தையும் பெறுவர்.

3. விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம்

மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ, அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ராத்திரி என்பது இருட்டு, அஞ்ஞானம், அச்சம், கலி, கருப்பு, மயக்கம், தாமசம் என்று பல பொருள்கள் உண்டு. மயக்கமோ, தாமசமோ இருக்கின்ற பொழுது உலகியலிலும் சரி, ஆன்மிகத்திலும் சரி, ஒருவன் முன்னேறவே முடியாது. இந்தக் குணங்கள் பின்னடைவைத் தரும். எனவே இந்த குணங்களைப் போக்கிக் கொண்டு ஞானமான ஒளியை பெறுகின்ற நன்னாள் தான் சிவராத்திரி நாள்.

4. ஜோதியைக் காணும் ராத்திரி

சிவன் ஞானத்தை தருபவன். சிவன் என்றாலே மங்களம் என்று பொருள். சிவன் தேஜோமயமானவன். என்றெல்லாம் வேதமும் புகழ்கிறது. நாயன் மார்களும் புகழ்
கிறார்கள். ஆறாம்திருமுறையில் வள்ளலார் ஜோதி மயமான இறைவனை போற்றுகிறார்.

1. சிவசிவ சிவசிவ ஜோதி – சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.

2. சிற்பர மாம்பரஞ் ஜோதி – அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி – என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.
சிவசிவ

3. சித்துரு வாம்சுயஞ் ஜோதி – எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி – என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி.

5. சிவராத்திரி – விளக்கம்

இராத்திரி என்பது இருட்காலம் எனப் பொருள்படும். தினசரி இரவு வருகிறது.ஆனால் ஊழி முடிவில் எங்கும் இருள் நிறைந்திருக்கும். உயிர்கள் ஒடுங்கும் காலம். உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனை சர்வ சங்கார காலம் அல்லது பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது அமைதி நிலவுவது போல பஞ்ச பூதங்களும் தன கரண புவண போகங் களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பதனால் அமைதி நிலவும். அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே அது ‘சிவராத்திரி’ எனக் கொள்ளப்படுகிறது.

6. சிவனை பூஜிக்கத் தகுந்த இரவு

இருள் என்பது மாயையையும் அஞ்ஞானத்தையும் குறிக்கும். அஞ்ஞானம் ஆகிய இருட்டை விலக்கி, ஞானமாகிய சுடரை பிரகாசிக்கச் செய்யும் நாள் தான் சிவராத்திரி நாள். அதை அடைகின்ற விரதம் தான் சிவராத்திரி விரதம். சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் வரும். தேய்பிறையில் ஒரு சிவராத்திரியும் வளர்பிறையில் ஒரு சிவராத்திரியுமாக வருடத்திற்கு 24 சிவராத்திரிகள் வரும். ஆனால் மாசி மாதம் தேய் பிறையில் வருகின்ற சிவராத்திரி தான் சிறப்புமிக்க சிவராத்திரி என்பதால் அதையே மகா சிவராத்திரித் திருநாள் என்று உலக மெல்லாம் கொண்டாடுகின்றது. மேலும் ராத்திரி என்பதற்குப் ‘பூஜித்தல்’ எனும் பொருளும் உண்டு. இதன்படி “சிவனை பூஜிக்க தகுந்த இரவே “சிவராத்திரி” என பொருள்படும்.

7. ஏன் தூங்குவதில்லை?

பொதுவாக நாம் இரவில் தூங்குகின்றோம். பகலில் விழித்திருக் கின்றோம். பகலில் விழித்திருந்தாலும் அது புறவிழிப்பு என்று நாம் சொல்லுகின்றோம். நம்மைச் சுற்றி உலகத்தில் நடக்கக்கூடிய புற நிகழ்ச்சிகள் எல்லாம் தெரிந்து கொள்ளும் வகையிலே நாம் விழிப்புடன் இருக்கின்றோம். ஆனால் இந்த விழிப்பு நிலை நமக்கு பெரிய அளவில் உதவாது. நாம் புற உலகில் விழித்திருந்தாலும் கூட, அக இருளோடு விழிப்பில்லாத மாயையில் தான் மயங்கிக் கிடக்கின்றோம்.

இந்த மாயையை நீக்கி அகவிழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட நாள் சிவராத்திரி நாள். பகலில் தூங்கிக் கிடக்கும் ஆன்மா இரவிலும் தூங்குகிறது. சிவராத்திரி நாளில் நாம் ஸ்தூல உடம்போடு கண்விழித்து,(உடலை உறக்கமில்லாமல் வைத்து) சூட்சும மனமாகிய ஆன்மாவையும் விழிப்புணர்வு செய்வதற்காகத்தான் சிவராத்திரி நாளில் தூங்காமல் இருக்கின்றோம்.

8. மகா சிவராத்திரி,

மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது மகாசிவராத்திரி இரவு மாதத்தின் 14 வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. மாதத்திலேயே மிகவும் இருளான நாள். மகா சிவராத்திரி தினத்தன்று பத்மாசனத்தில் அமர்ந்து கண்கள் மூடிய நிலையில் நமசிவாய மந்திரத்தை தைல தாரை போல் ஜெபிக்கும் சிவயோக நிலை கூடினால் அதைவிட ஆனந்தம் வேறு இல்லை. சிவராத்திரியில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர் சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.

அதனால் சிவராத்திரி முழுவதும், விழிப்புடன் இருந்து முதுகுத் தண்டை நேர் நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் உள்ள யோக சக்தி மேல்நோக்கி நகர்ந் திடும். பல யோகிகள், முனிவர்கள் சிவராத்திரி யோகத்தில் முக்தி அடைந்திருக்கிறார்கள். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது.

9. அம்பிகை கேட்ட வரம்

பார்வதி தேவி கேட்ட வரத்தால் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருநாள் கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருந்தனர். அப்பொழுது பார்வதி தேவி, “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?” என்று ஈசனிடம் கேட்டாள். அதற்கு சிவபெருமான், “தேவி! எந்த இரவு வேளையில் நான்கு ஜாம வேளை யிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் நீ என்னை பூஜித்து வழிபட்டாயோ இரவு அதாவது, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே எனக்கு மிகவும் பிரியமானது.

”அம்பிகை இதை கேட்டு மகிழ்ந்தாள். அடுத்து அவள் ஒரு வரம் கேட்டாள்.” பிரபோ! இந்நாளில் நான் எவ்வாறு வழி பட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு, இப்பிறவியில் செல்வமும், மறு பிறவியில் சொர்க்கமும், இறுதியில் நற்கதியும் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் பாலித்தார்.

10. சிவராத்திரி காலத்தில் யார் யாரெல்லாம் சிவ பூஜை செய்தார்கள்.?

1. பிரமகற்பத்திலே நான்கு யாமங்களிலும் பார்வதிதேவி சிவ பெருமானைப் பூஜித்தார்.

2. ஒருமுறை உமையம்மையார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்ணை மூட உலகங்கள் இருண்டன. நிலையற்று நின்றது. உயிரிகள் தவித்தன. துன்பம் சொல்லொணாதாகியது. அக்காலத்தில் அந்த துன்பத்திலிருந்து மீள தேவர்கள் சிவபெருமானை வணங்கினர். சிவன் அருள் புரிந்தார்.

3. ஒருமுறை அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது உலகெலாம் அழிக்கும் வேகத்துடன் ஆலகால விஷம் வந்தது.உலகம் திகைத்து மயங்கியது. எங்கும் கரும்புகை சூழ்ந்தது. அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டு தன் கண்டத்தில் அடக்கியருளினான். அந்நஞ்சு இறைவனைப் பீடிக்காமல் இரவு முழுவதும் தேவர்கள் இறைவனைப் பூஜித்தகாலம் இச்சிவராத்திரியேயாகும்.

11. தெரியாமல் வணங்கினாலும் பலன் உண்டு

வியாதன் என்ற வேடன் இருந்தான்.அவன் ஒருமுறை காட்டிற்கு வேட்டை யாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. அன் றென்னவோ வேட்டைக்கு ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. பசியும் அலைச்சலினால் ஏற்பட்ட களைப்பும் தாகமும் தவிக்க விட்டது. இரவுப் பொழுதும் வந்துவிட்டது. விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி இருந்தான். தூக்கம் கண்களைச் சுழற்றியது. மரத்தில் இருந்து விழுந்து விடுவோம் என அஞ்சிய அவன் தூக்கம் வராது விழிப்புடன் இருக்க மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கீழே போட்டான். இவ்வாறு விடியும்வரை உணவும் உறக்கமும் இன்றி இலையை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

வேடன் இருந்த மரம் வில்வ மரம். இந்த காரியத்தைச் செய்த நாள் சிவராத்திரி. அவன் அமர்ந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது. வேடன் பிடுங்கி எறிந்த வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீதே விழுந்து அர்ச்சனை ஆகியது. சிவராத்திரி தினத்தன்று உணவும் உறக்கமும் இன்றி சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூஜித்ததால் சிவன் அருள் கிட்டியது. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் ‘வியாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றது.

12. வில்வ அர்ச்சனை அவசியம்

உலகில் உள்ள உயிர்களின் பாவங்களைப் போக்க வல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள்.

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

என்ற படி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங் களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம் பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

13. நால்வகை நெறியால் வணங்க நலம் பல கிடைக்கும்

சைவ நெறி காட்டும் முறையில் சிவனை வணங்க வேண்டும். அதற்கு நால் வகை நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன உண்டு.

1. சரியை – இறைவனை வழிபடுவோர் திருக்கோயிலை அலகிடல், மெழுகிடல், பூமாலை தொடுத்தல் முதலாகச் செய்யும் புறத்தொழில்கள்.

2. கிரியை – சிவபெருமானை நீராட்டி மலர் தூவி வழி படுதலாகிய அகத்தொழில்.

3. யோகம் – அருவத்திருமேனியை நோக்கிய நிலையில் மனத்தை ஒரு வழிப்பட நிறுத்தி அகத்தே செய்யும் வழிபாடு.

4. ஞானம் – அகத்தும் புறத்தும் ஆக எங்கும் நிறைந்த உண்மை அறிவு இன்பவுருவாகிய இறைவனை அறிவுத் தொழிலால் செய்யும் வழிபாடு.

மேலே சொன்ன நால்வகையும் நம சிவாய மந்திரமும் முழுமையான சிவராத்திரி வழிபாட்டில் முக்கியம்.

14. சிவராத்திரி சிவாலய வழிபாடு

சிவராத்திரி அன்று அருகில் உள்ள சிவாலயத்திற்கோ, பிரசித்தி பெற்ற சிவாலயத்திற்கோ சென்று வழிபாடு செய்வது அவசியம். ஆலய வழிபாடு முறையாகச் செய்ய வேண்டும்.

1. ஆலயம் நெருங்கியவுடன் திருக் கோபுரத்தைக் கண்டு, சிவ நாமங்களை உச்சரித்த வண்ணம் உட்புகுந்து பலிபீடத்துக்கு முன் நிலமிசை வீழ்ந்து வணங்குதல் வேண்டும். நம் பதவி, பட்டம், பணம், பற்றிய சிந்தனைகள் விட்டுவிட வேண்டும்.

2. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும் மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும் வடக்கே தலைவைத்து வீழ்ந்துவணங்குதல் வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும் கிழக்கே தலை வைத்து வணங்குதல் வேண்டும்.

15. அஷ்டாங்க நமஸ்காரமும் பஞ்சாங்க நமஸ்காரமும்

தலை, இரண்டு கைகள், இரண்டு செவிகள், மோவாய், இரண்டு புயங்கள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வீழ்ந்து வணங்குதல் அட்டாங்க நமஸ்காரம் ஆகும். இது ஆண்கள் செய்ய வேண்டியது. தலை, இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள் என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்துமாறு வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும். இது மகளிர்க்கு உரியது.

4.பின் திருக்கோயிலை(பிரகாரத்தை ) வலம் வருதல் வேண்டும். அவ் வாறு வலம் வரும் போது சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டு (தேவா ரம் திருவாசகம் சொல்லலாம்) மெல்ல அடிமேல் அடிவைத்து வலம் வருதல் வேண்டும்.

5. மூன்று முறை ஐந்து முறை,, ஏழு முறை, ஒன்பது முறை எண்ணிக் கையில் வலம் வருதல் நலமாகும்.

16. திருநாவுக்கரசர் கற்பிக்கிறார்

நம் ஒவ்வொரு உறுப்பும் சிவாலயத்தில் வேறு சிந்தனை இல்லாது பூஜையில் ஈடுபட வேண்டும். அதை தெரிவிப்பது கீழ்வரும் பாடல். திருநாவுக்கரசர் நான்காம்-திருமுறை திரு அங்கமாலையில் எப்படி நம் அங்கங்களைக் கொண்டு ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கற்பிக்கிறார்.

தலையே நீவணங்காய் – தலைமாலை
தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

1 கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

2 செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ.

3 மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.

4 வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.

17. விநாயகர் முதல் சண்டேசர் வரை

முதலில் விநாயகப்பெருமானை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கும்போது இரண்டு கைகளாலும் நெற்றியில் மும்முறைகுட்டி, வலக்காதை. இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும். பிறகு சிவபெருமானையும், அம்பாளையும் தரிசனம் செய்து திருநீறு பெற்று அணிந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பிறகு நடராசர், ஆலமர் செல்வர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் குமரப் பெருமான் முதலிய – மூர்த்திகளை வணங்குதல் வேண்டும்.

அபிஷேகம், நிவேதனம் ஆகியவை நிகழும்போது தரிசனம் செய்தல் ஆகாது. தரிசனம் முடிந்தவுடன் சண்டேசுவரர் சந்நதியை அடைந்து வணங்கி மூன்று முறை கைகொட்டி சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டு வேண்டுதல் வேண்டும். சண்டேசுவரர் வழிபாடு நிறைவு பெற்றவுடன் சிவ சந்நிதானத்தை அடைந்து வணங்கிப் பின் ஓரிடத்தில் அமைதியாக இருந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை இயன்றவரை உச்சரித்தல் வேண்டும். சிவாலயத்தில் வேறு குடும்ப அரசியல் சினிமா, தொலைக்காட்சித் தொடர் பேச்சுக்கள் கூடாது. வம்பு பேசுதல், சண்டையிடுதல், பிறர் வழிபாட்டுக்கு குந்தகம் செய்தல் அறவே கூடாது.

18. என்ன பாராயணம் செய்ய வேண்டும்?

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் திருக்கோயிலுக்கு நீராடி, தூய உடை உடுத்தி திருநீறு அணிந்து செல்லுதல் வேண்டும். மிக முக்கியமாக படிக்க வேண்டியது தேவாரமும் திருவாசகமும். ருத்ரம் பாராயணம் செய்யலாம். சிவன் குறித்த கீர்த்தனைகளைப் குழுவாக அமர்ந்து பாடலாம். அவசியம் சொல்ல வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம்
வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, லிங்கபுராணம், பாடவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனை வரும் ஒன்றுகூடி “சிவாய நம” என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

19. எமன் அஞ்சுவான் ;

நரக வாசம் வராது
சிவராத்திரியில் சிவ புராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும். எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட மகா சிவராத்திரி விரதம்
விசேஷமானது என்றும் மகாசிவராத்திரி விரத மிருக்கும் சிவனடியார்களைக் கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவ புராணம் கூறுகிறது.இதை இந்தப் பாடலும் விளக்குகிறது.

மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே
லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

20. சம்பகன் கதை தரும் செய்தி

மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர் மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து பதுங்கிக் கொண்டான். அன்று மகா சிவராத்திரி. ஆலயத்தில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன.

கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல் உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். பசி வாட்டியது.ஆனால் வேறு வழியின்றி அங்கேயே (சிவாலயத்தில்)இருந்தான். மக்கள் அனை வரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். பொழுது விடிந்தது. விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறினான். காவிரி நதியில் நீராடினான். உணவு வேண்டுமே…சிவராத்திரி முடிந்து பாரணை என்பதால் அங்கங்கே அன்ன தானம் நடந்து கொண்டிருந்தது. எதோ ஒரு சிவனடியார் வீட்டில் சிவாய நம சொல்லி உண்டான்.

21. திருந்திய திருடன்

இந்த உணவு அவனுக்கு நல்ல அறிவைக்கொடுத்தது. அதன் பிறகு திருட்டுத்தொழிலை விட்டான். காலப்போக்கில் உயிர் துறந்தான்அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் சித்ரகுப்தரை நோக்கி சம்பகன் செய்தபாவ புண்ணியம் பற்றிக் பற்றி கேட்க, அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில் இவன் மகா சிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் சிவனடியார் வீட்டில் உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே, சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

22. எல்லோரும் சிவராத்திரி விரதம் இருக்கலாமா?

சிவன் மீது உண்மை உள்ளன்பு பூண்டொழுகும் எவரும் சிவராத்திரி விரதம் இருந்து பலன் பெறலாம். சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவனை வணங்க தொல் வினைகள் தொலையும்.

அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய

பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை
தீர்தல்எளி தாமே.
இனி சிவதரிசனம் செய்வோம்.
எந்தெந்த தலங்களில் சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது என்று காண்போம்.

23. தில்லையில் சிவராத்திரி

இதோ முதல் ஆலயமாக சிதம்பரம் சென்று தரிசிப்போம்.தில்லை என்றாலே சகல பாபங்களும் போய்விடும். கோயில் என்று பொதுவாகச் சொன் னாலே சிதம்பரத்தைத்தான் குறிக்கும். ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். சிவபெருமான், நடராஜராக, சிவகாமியம்மையுடன் வீற்றிருக்கும் ஆலயம். ஏனைய ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார். இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், சிதம்பரம் ஆலயத்தில் வழிபடப்படுகிறது.

24. நடராஜருக்கு 4 கால பூஜை

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் நடராஜருக்கு 4 கால பூஜை நடைபெறும். சிவ பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் சிவகங்கை குளத்தில் நீராடி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை வழிபடுவது வழக்கம். இரவு ஏக கால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறும். பக்தர்கள் நெய் விளக்கேற்றி நேர்த்திக்கடனை செலுத்துவர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆடல் வல்லான் நடராஜருக்கு நடனக் கலைஞர்கள் நாட்டிய அஞ்சலியைச் செலுத்தும் வகையில், நாட்டியாஞ்சலி விழா 1980 முதல் நடக்கிறது. இந்த ஆண்டு 43 வது ஆண்டு. சிதம்பரம் தெற்குக் கோபுர வாயில் அருகில் உள்ள தனியார் அறக்கட்டளை இடத்தில், 43- வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிவராத்திரியன்று தொடங்கும்.

25. அண்ணாமலையை மறந்து எப்படி வாழ்வேன்?

மலையை சிவனாக வணங்கப்படும் தலம் திருவண்ணாமலை . நெருப்பு (அக்னி) ஸ்தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரி வலம் வருவது விசேஷம். திருவண்ணாமலை கிரிவலம் என்பது 14 கி.மீ., தூரம் கொண்டது. கிரிவலப் பாதையில் 90 க்கும் அதிகமான கோவில்கள், தீர்த்தங்கள், சித்தர்கள் மற்றும் மகான்களின் ஜீவ சமாதிகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

தேய்பிறை சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. இத்தலத்தை மறந்து நான் எப்படி வாழ்வேன் என்கிறார் திருநாவுக்கரசர்.

வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடியேன்மறந் துய்வனோ?

26. நோயற்ற வாழ்வு தரும் சிவராத்திரி

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையில் திருக் கார்த்திகை தீப நாளைப் போன்று மகா சிவராத்திரி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படும். இந்த லட்ச தீப ஒளியில் அண்ணாமலையாரை தரிசிப்பது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். இங்கு லிங்கோத்பவருக்கு இரண்டு கால பூஜைகள் நடத்தப்படும். நெய்யினால் அபிஷேகம் செய்து, வெந்நீரில் நனைத்த கம்பளியும், தாழம்பூவும் சாத்தி வழிபாடு நடத்தப்படும்.

இந்த பூஜையை கண்டு தரிசித்த பிறகு திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் நோயற்ற வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.மகா சிவராத்திரி நாளில் முதல் இரண்டு கால பூஜைகள் முடிந்த பிறகு, மூன்றாவது கால பூஜையின் போது, அதாவது பார்வதி தேவி சிவனை பூஜை செய்த காலமாக கருதப்படும் நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலத்தை துவக்க வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தம், அதாவது நான்கு கால பூஜைகளும் நிறைவடைவதற்குள் கிரிவலத்தை நிறைவு செய்து, அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.

27. திருவானைக்காவலில் சிவராத்திரி

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம், அதாவது நீர்த் தலம் ஆகும். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப் பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது. மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இங்கு இருக்கும் ஜம்புலிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது.

ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது. மகா சிவராத் திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு மேல் முதல் ஜாமம் பூஜையும், இரவு 1 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், 3-மணிக்கு மேல் 3-ம் ஜாம பூஜையும், அபிஷேக அலங்காரங்களும் நடைபெறும்.

3-ம் கால பூஜை நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் மூன்றாம் பிராகாரத்தில் வலம் வருவர். 4-ம் கால பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் .முதல்கால பூஜை முடிந்த பின்பு கோயில் நவராத்திரி மண்டபத்தில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் கோயில் கொடிமர மண்டபம், மூன்றாம் பிராகார மண்டப பகுதிகளில் இரவு முழுவதும் தாங்கள் கொண்டுவந்த சிவலிங்கத்திற்கு பால், தயிர், திரவியம், சந்தனம் என பூஜைப்பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடத்தி தீப ஆரத்திகளை மேற்கொள்ளுவர்.

28. ஏகாம்பரநாதர் கோயில் சிவராத்திரி

பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம். பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள். கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள்.

அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். சிவராத்திரி இங்கு சிறப்பு. ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்வர். மூலவருக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறும்.

29. காளத்தி சிவராத்திரி

திருக்காளத்தி-காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது.இக்கோவில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் காளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப்பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார் மகா சிவராத்திரி இங்கு 10 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களின் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதில் முக்கிய நாட்களாக மகாசிவராத்திரியை முன்னிட்டு காலை நந்தி வாகன சேவையும், இரவு சிம்ம வாகன சேவையும் நடைபெறும். இதனை தொடர்ந்து நள்ளிரவு லிங்கோத்பவ தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறும். அடுத்த நாள் காலையில் திருத்தேரோட்டமும் இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறும். அடுத்தநாள் அதிகாலை 3.30 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கயிலாய கிரிவலமும் மாலையில் பல்லக்கு சேவையும் நடைபெறும்.

30. நிறைவுரை

இம்முறை முப்பது முத்துக்கள் பகுதியில் சிவராத்திரி தத்துவமும் பஞ்சபூத தலங்களில் சிவராத்திரி கொண்டாடப்படும் விதமும் அனுபவித் தோம். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் சிந்தையில் அமைதி யுடன் சிவபுராணத்தை பாடிக்கொண்டிருக்க வேண்டும். அன்று மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இத்தனை சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்து சிவனருள் பெறுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

The post மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும் appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Shivratri ,Shiva ,Shivaratri ,Navratri ,Lord Shiva ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...