×

ஆதி அந்தமில்லானின் ஆயிரம் லிங்க தரிசனம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண்ணிக்கையில் அடங்காத அளவு சிவலிங்கங்களை ஓரிடத்தில் எழுந்தருளச்செய்து வழிபடும் குறியீடே ஆயிரம் லிங்க வழிபாடு. தொடக்கத்தில் ஆயிரம் லிங்கங்களை தனித்தனியே வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் இடவசதி, பொருட்செலவு, பூஜைக்கான நேரம், பூஜைப் பொருட்களின் எண்ணிக்கை போன்ற தேவைகளும் செயல்பாடுகளும் அதிகமாக இருந்ததால் அந்த வழிபாடு சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. எளிய வழியாக ஆயிரம் லிங்கங்களின் சிவபாகமாகிய ஆயிரம் பாணங்களையும் ஒரு பெரிய லிங்கத்தில் செதுக்கி அதையே ஆயிரம் லிங்கமாக போற்றி வழிபடும் வழக்கம் வந்துவிட்டது. இந்த லிங்கத்திற்கு ஸஹஸ்ரலிங்கம் என்பது பெயராகும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளையார்கோவில் முதலிய தலங்களில் 1008 லிங்கங்களுக்கென பெரிய சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்க சந்நதி தனிச்சிறப்பு மிக்கதாகும். ஆயிரம் லிங்கத்தை வழிபடுவதால் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ லிங்கங்களை பல்வேறு எண்ணிக்கையில் ஒரே இடத்தில் வைத்து வழிபடும் வழக்கம் அன்பர்களிடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இரட்டைலிங்கம், மூன்று லிங்கம், சதுர்லிங்கம், பஞ்சலிங்கம், சப்தலிங்கம், நவலிங்கம், ஏகாதசலிங்கம், துவாதச லிங்கம், சதலிங்கம், ஸஹஸ்ர லிங்கம் என்று பல்வேறு எண்ணிக்கையில் லிங்கங்களை வழிபடுகின்றனர்.

ஆயிரம் லிங்க வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த லிங்கங்களைச் சிவ வழிபாட்டால் மேன்மை பெற்ற தேவர்கள், முனிவர்கள், ராட்சசர்கள், தேவதைகள், நவகிரகங்கள், வசுக்கள் முதலியோர் பெயரால் போற்றி வழிபடுகின்றனர். ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களைச் செதுக்கி ஸஹஸ்ரலிங்கம் வழிபடப்படுகிறது என்றாலும் பல தலங்களில் 1008 தனித்தனி லிங்கங்களை கொண்ட ஸஹஸ்ர லிங்கத்தையும் நிலைப்படுத்தி வணங்கி வருகின்றனர். ஸஹஸ்ரலிங்க வழிபாடு சகல பாவங்களையும் போக்கவல்லது என்பதால் மக்கள் இல்லங்களில் பிரார்த்தனையாகவும் பிராயச்சித்த வழிபாடாகவும் ஸஹஸ்ரலிங்க வழிபாட்டைச் செய்து பயன் பெறுகின்றனர்.

கம்போடியாவில் ஸஹஸ்ரலிங்கம்கம்

போடியா, கடல் கடந்த நாடுகளில் சைவ சமயம் பரவியிருந்ததை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நாடு. இங்குள்ள அங்கோர் வாட் என்னும் ஊரில் ஏராளமான இந்து சமயக் கோயில்கள் உள்ளன. இவை யாவும் கவனிப்பாரற்று அழிந்துள்ளன. இப்போது அரசாங்கம் அதனை புதுப்பித்து பாதுகாத்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறிய நாடான கம்போடியா, தாய்லாந்திற்குக் கிழக்கிலும், வியட்நாமிற்கு மேற்கிலுமாக அமைந்துள்ளது.

இங்கு முற்காலத்தில் இந்து மதம் செழிப்புடன் இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் பெரிய சிவாலயங்கள் உள்ளன. கி.பி. 8ம் நூற்றாண்டில் இந்நாட்டை ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் மிகச் சிறந்த சிவபக்தர். கம்போடியாவின் தலைநகரான சியாம்ரீப் நகரிலிருந்து 35 கிலோ மீட்டரில் ஃபெனாம்கூலேன் என்னும் மலை உள்ளது.

இது இமயமலைபோல் புனித மலையாக போற்றப்படுகிறது. மலையில் உற்பத்தியாகும் சியாம்ரீப் என்னும் நதியைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். இந்த இடத்தை அடைவது கடினமாக இருந்தாலும், அங்கு சென்ற பிறகு எல்லையற்ற இன்பம் உண்டாகிறது. காரணம், ஆறு தவழ்ந்தோடும் பாறைப்படுகையில் கூட்டம் கூட்டமாக லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள 1008 லிங்கங்கள் மனதைக் கவரும்.

இங்குள்ள லிங்கங்கள் அனைத்திற்கும் சதுரமான ஆவுடையார் உள்ளது. கண்ணாடி போன்ற நீர் லிங்கங்களைத் தழுவி ஓடுகிறது. வெள்ளம் வரும்போது லிங்கங்கள் தண்ணீருக்குள் மூழ்கிவிடுகின்றன என்றாலும், தெளிவான நீரோட்டத்தில் காணும் போது அவை கற்பனைக்கெட்டாத அழகுடன் உள்ளன. லிங்கங்களோடு தேவர்கள், பிரம்மன், நந்தி முதலிய உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாம்பணையில் துயிலும் அனந்தசயன ரங்கநாதரின் வடிவம் அற்புதமானதாக உள்ளது.

கன்னடத்து ஸஹஸ்ரலிங்கம்

வடகன்னட மாவட்டத்தில் சிர்சி என்னும் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஸஹஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. சிர்சியில் இருந்து எலாப்பூர் செல்லும் வழியில் ஹல்கோல் என்னும் இடத்தில் இறங்கி 2 கி.மீ. பின்னோக்கி நடந்தால் ஸஹஸ்ரலிங்கத்தை அடையலாம். காட்டுப்பகுதியில் ஓடும் ஷால்மலா ஆற்றின் படுகையில் ஸஹஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. இங்கு பரவிக்கிடக்கும் பாறைகளில் வட்டமான ஆவுடையாருடன் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான லிங்கங்களின் முன்புறம் அதே பாறையில் நந்தியின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன. ஆற்றில் மிதமான நீர் ஓடும் காலங்களில் அனைத்துச் சிவலிங்கங்களையும் தரிசிக்க முடியும். சிவலிங்கங்களோடு வீரபத்திரர் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஸஹஸ்ரலிங்கம் என்று இந்த ஆற்றுப்படுகை அழைக்கப்பட்டாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்களை இயற்கையே அமைத்திருப்பதை பார்க்க ஆயிரம் கண்கள் போதாது.

ஹம்பி ஸஹஸ்ரலிங்கம்

பாரத தேசத்தின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களில் ஹம்பி ஒன்றாகும். கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனிச்சிறப்புப் பெற்று மூன்று நூற்றாண்டுகள் செங்கோலோச்சிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராகத் திகழ்ந்த நகரம். இந்நாளில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டாலும் கலையரசியின் எழிற்பீடமாகவே திகழ்கிறது. இந்தியத் தொல்லியல் துறை இதனை பாதுகாத்துப் போற்றி வருகிறது. ஹம்பி நகரமானது புராணச் சிறப்புகளைப் பெற்ற துங்கபத்திரை புனிதநதிக் கரையில் அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. ஹம்பியில் துங்கபத்திரை ஆற்றின் நடுவே பெரும்பாறையில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் குறைந்த காலங்களில் பாறையைச் சுற்றி வந்து லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிவராத்திரியில் திரளாக வந்து வழிபடுகின்றனர். சிவராத்திரி நாளில் ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

தொகுப்பு: மகி

The post ஆதி அந்தமில்லானின் ஆயிரம் லிங்க தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Adi Andamillan ,Shiva ,Adi Andhamillan ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...