மும்பை: மும்பை மாநகராட்சி டெண்டரை பெறுவதற்காக கான்டிராக்டர் ஒருவர் பாஜவுக்கு ₹259 கோடி பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலமாக செலுத்தியதாக மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் குற்றம் சாட்டி உள்ளார். தனி நபரோ அல்லது நிறுவனங்களோ அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அண்மையில் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ மட்டுமே சுமார் ₹6000 கோடி நிதி பெற்றது அம்பலமானது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜ மட்டுமே ஆதாயம் அடைந்தது என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சியில் டெண்டரை பெற கான்டிராக்டர் ஒருவர் பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக ₹259 கோடி நிதி அளித்ததாக மும்பை காங்கிரஸ் தலைவரும் தாராவி எம்எல்ஏவுமான வர்ஷா கெய்க்வாட் குற்றம் சாட்டி உள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மும்பை மாநகராட்சி டெண்டர்கள் ஊழலில் வேரூன்றி இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு டெண்டர் வழங்குவதற்காக கோடிக் கணக்கில் பணம் பெறுகிறார்கள். டெண்டரை பெற கான்டிராக்டர் ஒருவர் ₹259 கோடி நிதியை தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு வழங்கி உள்ளார்.
மெகா டெண்டர்களை ஒரு குறிப்பிட்ட கான்டிராக்டர்களுக்கு வழங்குவதற்காக நிபந்தனைகள் மாற்றப்படுகின்றன. கான்டிராக்டர்களுக்கு டெண்டர்களுக்காக வாரி இறைக்கப்படும் பணம் மக்கள் வரி செலுத்தும் பணம். அது கட்சி நிதி அல்ல. குடிசைப் பகுதிகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க கான்டிராக்டர் மூலம் ஆட்களை நியமிக்கும் மும்பை மாநகராட்சியின் டெண்டரால், 15,000 தன்னார்வலர்கள் வேலை இழப்பார்கள். இதனை எதிர்த்து மும்பை மாநகராட்சி தலைமையகத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post மும்பை மாநகராட்சி டெண்டரை பெற பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ₹259 கோடி வழங்கிய கான்டிராக்டர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.