×

திருமோகூர் காளமேகப் பெருமாள்

ராகுவும், கேதுவும் ஒரு உத்தியைக் கையாண்டார்கள். திருப்பாற்கடலைக் கடைந்து அதன் பயனாக அமிர்தம் வெளிவந்திருக்கிறது. என்னதான் தேவர்களுக்குச் சமமாகக் கடலைக் கடைந்தாலும், அமிர்தம் என்னவோ முதலில் தேவர்களுக்குதான் பரிமாறப்படும்; அதன் பிறகுதான் அசுரர்களாகிய நம் இனத்தவர்களுக்கு. அமிர்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்து இந்தக் கடைதலுக்குக் காரணமானவர்கள் தேவர்கள்தான் என்று இந்த சலுகைக்கு ஒரு காரணமும் சொல்லப்படக்கூடும். ஆகவே யாருக்கு முதலில் என்ற கேள்வியை எழுப்புவதில் அர்த்தமேயில்லை. ஆகவே தம் வழக்கமான அசுர உத்தியால், கூடுதல் பலனைப் பெற்றிடவேண்டும் என்று அவர்கள்தீர்மானித்தார்கள்.

உடனே இருவரும் தேவர்கள் போல உருமாறினார்கள். தேவர்கள் வரிசையில் போய் நின்றுகொண்டார்கள். ஆனால் சூரிய – சந்திரர் பார்வைக்கு அவர்கள் இலக்காகிவிட்டார்கள். அசுரர் இருவர் தேவர்போல வேடமிட்டு வந்திருப்பதை அப்போது மோகினியாக அவதரித்திருந்த மஹாவிஷ்ணுவிடம் சொல்ல, அவர், அமிர்தம் பரிமாறுவதற்காக வைத்திருந்த கரண்டியால் அவ்விருவரையும் தட்டினார்.

அவ்வளவுதான், ராகு, மேற்பகுதி மனித உடலாகவும், கீழ்ப்பகுதி பாம்பாகவும்; கேது, மேற்பகுதி பாம்பாகவும், கீழ்ப்பகுதி மனித உடலாகவும் மாறி தம் சுய ரூபத்தையே இழந்தார்கள். அமிர்தம் கொஞ்சமும் கிடைக்காதது அதிக பட்ச தண்டனை! அதற்குப் பிறகுதான், தங்களைக் காட்டிக் கொடுத்த சூரிய – சந்திரரை, ராகுவும் கேதுவும், கிரகணமாக சிறிது நேரமாவது பிடித்து, மறைத்துப் பழி வாங்கிக் கொண்டார்கள்; கொண்டிருக்கிறார்கள்.

பெருமாள் மோகினி அவதாரம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கிய தலம் என்பதாலேயே, இந்தத் தலம் மோகன க்ஷேத்திரம், மோகினியூர், மோகியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, இப்போது மோகூர் என்று விளங்குகிறது.

“நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச்
சென்றடைந்தால்
காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான்
திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் எத்துமின் நமர்காள்’’

– என்று திருமோகூர் பெருமாளைப் போற்றிப் புகழ்கிறார் நம்மாழ்வார்.

‘நமக்கு நல்ல அரணாக அமைந்து நம்மைக் காப்பாற்றுகிறார் இந்தப் பெருமாள். அப்படியும் தீமையே உருவான அசுரரை அண்டினோமானால், காமரூபம் கொண்டு, அந்த அசுரரை நிர்மூலமாக்கி நம்மைக் காக்கவல்லவன் இந்தப் பெருமாள். இவனது திருநாமமே நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும்’ என்கிறார்.

கோயிலினுள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் நம்மை நெடிதுயர்ந்து வரவேற்கிறது. அதன் பீடத்தில் கம்பத்தடி பெருமாள்பளபளவென்று காட்சியளிக்க, அவருக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அருகே மண்டபத் தூணில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய்க் காப்பிட்டு, நெய்தீபம் ஏற்றுகிறார்கள். இந்த ஆஞ்சநேயருக்கு ஆதிசேஷன் குடைபிடித்திருப்பது கூடுதல் சிறப்பு. வெளிப் பிராகாரத்தில் இந்த ஆஞ்சநேயருக்கு இடப்புறமாக தனிசந்நதியும் உள்ளது. தொடர்ந்து வலம் வந்தால் கோயில் கருவறையின் தங்க விமான தரிசனம் காணலாம். அடுத்து, பெரிய கற்சிலை ஒன்று பூமியில் பதித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்பக்கம் சக்கரத்தாழ்வாரும், பின்பக்கம் நரசிம்மரும் காட்சி தருகிறார்கள். பக்தர்கள் இந்த அர்ச்சாவதாரத்துக்கும் வழிபாடு செய்கிறார்கள். தொடர்ந்து வலம் வந்தால் ரங்கநாதரை தரிசிக்கலாம்.

உள்பிராகாரத்தில் பக்தர்கள் துலாபார நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தராசு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், கூரத்தாழ்வார், பிள்ளை லோகாச்சார்யார், மணவாள முனிகள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவியாழ்வார் என்று ஆசார்யப் பெருமக்கள் வரிசையாக நின்று நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

க்ஷீராப்தி (பாற்கடல்) சயனராகப் பரிமளிக்கும் பெருமாளையும் தரிசிக்கலாம். உறங்குவதுபோல பாசாங்கு செய்யும் பெருமாளை, தாயார் எழுந்திருக்குமாறு பிரார்த்தனை செய்வதாக ஐதீகம். பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிக்கொணர உதவுமாறு அவள் வேண்டிக்கொள்கிறாளாம். அதனாலேயே, பாற்கடல் கடையப்படும்போது இழு வேகத்தால் மந்தாரமலை தடுமாற, அதை நிலை நிறுத்தும் எண்ணத்தில் கூர்ம அவதாரம் எடுத்து மலைக்கு அடியே சென்று, அதனைத் தாங்கிக் கொண்டார் பெருமாள். அதுமட்டுமல்ல; மோகினி உருவெடுத்து தேவ நோக்கத்தை நிறைவேற்றினார். ஆகவே இந்தக் கோலத்தை பிரார்த்தனா சயனக் கோலம் என்றும் வர்ணிக்கலாம். ஸ்ரீ தேவியும், பூதேவியும், பகவான் காலடியில் அமர்ந்திருந்தாலும், அவர் பாதங்களைத் தொடாமல், இருகரம் கூப்பி அமர்ந்திருப்பதிலிருந்து இந்த வர்ணனை பொருத்தமானதாகவே அமைகிறது. பகவானைத் தாங்கியிருக்கும் ஆதிசேஷனுக்குத் தங்கக் கவசங்கள் சாத்தப்பட்டுள்ளன.

அடுத்து மோகனவல்லித் தாயார் தரிசனமளிக்கிறார். இவருக்குத் தனியே உற்சவம் கிடையாது என்பதால், இவரைப் படி தாண்டா பத்தினி என்று சிறப்பிக்கிறார்கள். இதனாலேயே, பங்குனி உத்திரத்தன்று, திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது, பெருமாள் தாயார் சந்நதிக்கு எழுந்தருள்கிறார். பெருமாள் வீதி புறப்பாடு செல்லும்போது
ஆண்டாள் உடன் செல்கிறார்.

தாயார் சந்நதியை வலம் வந்தால், நரசிம்மர் மூலவரை தரிசிக்கலாம். அடுத்தடுத்து ஆண்டாள் நாச்சியாரும், நவநீத கிருஷ்ணனும் அழகுக் கோலம் காட்டுகிறார்கள். தாயார் சந்நதிக்குப் பின்னால் மூலவர் காளமேகப் பெருமாள் அருட்காட்சி நல்குகிறார். கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம்.பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரம் ஏந்த, முன் வலது கரம் வரத முத்திரையையும், இடது கரம் கதாயுதத்தையும் தாங்கியிருக்கின்றன. கனிந்து நிற்கும் கருமேகம். கருணை பொழியும் பாசக் கண்கள், தேவை அறிந்து ஓடோடி வந்து தாங்கும் ஆதரவுக் கரங்களுடன் திவ்ய தரிசனம் தருகிறார் பெருமாள்.

‘தாளடைந்தார் தங்கட்குத் தானே வழித்துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி’

– என்ற திரு வாய்மொழி திருவந் தாதி பாசுரப்படி, தன்னை வந்தடைந்தோர்க்கெல்லாம் இறுதிவரை வழித்துணையாக விளங்கும் பெருமாள் இவர். இறுதிவரை என்றால், இப்பூவுலகத்தை நீத்தும், ஆன்மா மோட்சத்தை அடையும்வரையிலும் துணையிருக்கும் பெருந் தகை இந்தப் பெருமாள். மோகினியாக உருமாறி, தேவர்களுக்கு இன்னமுது ஈந்த கருணைப் பெரு வள்ளலே, இங்கே காளமேகப் பெருமாளாகக் காட்சி தருகிறார்.

வழித்துணையாய் வரும்ஏந்தல் என்பதற்கு நம்மாழ்வார் வாழ்க்கையையே உதாரணமாகச் சொல்லலாம். தம்முடைய திவ்ய தேச உலா இந்தத் திருமோகூரில் நிறைவு பெறுமாறு அவர் மோட்சம் ஏக வேண்டிய காலகட்டம் அமைந்தது. வழித்துணையாய் பெருமாள் முன்னேக, நம்மாழ்வார் அவரைப் பின் தொடர்கிறார். இந்தக் காட்சி எப்படி இருக்கிறது?

‘ராஜாக்கள் போகும் போது முன்னே மேகர் நீர் விடுமாப்போலே முன்னால் காளமேகம் சௌந்தர்ய அமிர்தத்தை வர்ஷித்துக்கொண்டே போக…’ என்று மணவாள மாமுனிகள் வர்ணிக்கிறார். அதாவது அரசர்கள் தம் நகரில் எங்கேனும் செல்லும்போது, அவர் பாதையில் முன்னால் குளிர்ந்த நீரைத் தெளித்துக்கொண்டு போவதுபோல, பரமபதத்துக்கு நம்மாழ்வாரை அழைத்துச் செல்லும் காளமேகப் பெருமாள் தன் அமுதமாகியப் பேரழகைப் பொழிந்தபடி சென்றாராம்! அவ்வாறு தனக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லும் பேரருளை,

‘‘மணித் தடத்தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக்கொள் நால் தடந்தோள் தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்
திருமோகூர்
நணிந்து நம்முடை நல்லரண் நாமடைந்தனமே’’

– என்று சிலாகித்துப் பாடுகிறார், நம்மாழ்வார்.

பெருமாளின் திருவடி, முகஒளி, பவளம் போன்ற வாய், நான்கு தோள்கள் என்று ஆழ்வாரால் எப்படி வர்ணிக்க முடியும் என்று கேள்வி எழலாம். இங்குதான் பெருமாளின் பெருந்தன்மையான வழிநடத்தல் புரியவருகிறது. தான் முன்னே செல்ல, தன்னைப் பின்தொடர்ந்து வரும் நம்மாழ்வார், பத்திரமாக வருகிறாரா, அவரைப் பாதுகாப்பாக வைகுந்தம் அழைத்துச் செல்லவேண்டுமே என்ற பரிதவிப்பில், பெருமாள் அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துகொண்டே முன் செல்கிறாராம்! அப்படிப் பெருமாள் பார்க்கும்போது அந்த வடிவழகைக் கண்டு பேருவகை கொண்ட நம்மாழ்வார் அந்தப் பேரின்ப அனுபவத்தைப் பாடலாக வடிக்கிறாராம்! இந்தச் சம்பவத்தை, ‘அவன் முன்னே போகப் பின்னே போகா நின்றால் அவ்வடிவழகு தன்னை அனுபவித்துக்கொண்டு போம்,’ என்று அழகிய மணவாள மாமுனிகள் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலில் விவரிக்கிறார்.

வழித்துணை மட்டுமல்ல; வாழ்க்கைத் துணையாகவும் காளமேகப் பெருமாள் விளங்குகிறார்: புலஸ்தியர் என்ற முனிவர், துவாபரயுகத்தில் பெருமாளை நோக்கிக் கடுந்தவம் இயற்றினார். பாற்கடலைக் கடையும் சமயத்தில் திருமால் கொண்டிருந்த தோற்றத்தைத் தான் காண விரும்பினார். அதன்படியே திருமால் மோகினி அவதாரக் காட்சி தந்தார். அதுமட்டுமல்ல புலஸ்தியருக்கு, விச்வரூபர் என்ற வாரிசை அவர் பெறுவதற்காக வரமும் அளித்தார்.

திருமோகூர் என்ற இந்த திவ்ய தேசத்தில் இன்னொரு சிறப்பான அம்சம் – சக்கரத்தாழ்வார். தனி சந்நதியில் கொலுவிருக்கும் இவருக்கு சுதர்ஸன ஹோமம் செய்து தங்கள் விருப்பங்களை பக்தர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்னைகளுக்கு இந்த சக்கரத்தாழ்வார் ஆறுதலும், தீர்வும் அளிக்கிறார். இந்தப் பட்டியலை ஒரு போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். நம் வாழ்க்கைச் சக்கரத்தை நன்கு இயக்கவல்ல இப்பெருமாள் தன் இடது காலை முன் வைத்தாற்போலக் காட்சி தருகிறார். அதாவது, தன் பக்தனின் எந்தப் பிரச்னையையும் உடனே தீர்க்கப் புறப்படும் வேகக் கோலம்!

திருப்பாற்கடல் தீர்த்தம் என்று பொருள்படும் க்ஷீராப்தி புஷ்கரணி, பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தின் ஒரு துளி விழுந்ததால் உண்டானது என்கிறது புராணம். இது தவிர, பிரம்ம தீர்த்தமும் ஒன்று இருக்கிறது. தன்னுடைய வேத பொக்கிஷங்களை மது, கைடபர் என்ற அரக்கர்கள் கவர்ந்து சென்றிடவே, பிரம்மன் திருமாலைத் தஞ்சமடைந்து வேண்ட, அவர் மச்சாவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். அந்த நன்றிக்காக இந்தத் தலத்தில் பிரம்மன் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, நெடுந்தவம் மேற்கொண்டு, திருமாலில் திருவருளை பெற்றான். அந்தத் திருக்குளம்தான் இது.

எப்படிப் போவது: மதுரையிலிருந்து மேலூர் போகும் வழியில், ஒத்தக்கடை என்ற பகுதிக்கு அருகே திருமோகூர் திவ்ய தேசம் அமைந்துள்ளது. காலை 6.30 முதல் மதியம் 12 மணிவரை; மாலை 4 முதல் இரவு 8 மணிவரை; சனிக்கிழமைகளில் காலை 5 முதல் மதியம் 1.15வரை, மாலை 4 முதல் 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடை அஞ்சல், மேலூர் அருகே, மதுரை – 625107.

தியான ஸ்லோகம்

“மோஹூராக்ய புரே ரமாபதிரயம் காளமேகாஹ்வய:
தேவீ மேகலதா விமாநமபி வைதத் கேதகம் நாமத:
தீர்த்தம் க்ஷீரபயோநிதி: ச்ரித ஜநா நந்தாவஹஸ் ஸர்வதா
பாஸ்வத் பாஸ்கர திங்முகஸ் ஸுரகணாபீஷ்ட ப்ரதோ பாஸதே’’

 

The post திருமோகூர் காளமேகப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Tirumogur Kalameka ,Perumal ,Rahu ,Ketu ,Amrit ,Tirupalakadal ,Asuras ,Tirumogur Kalameka Perumal ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...