×
Saravana Stores

தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு நிதி அனுப்பிய விவகாரம் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு: சென்னை, கீழக்கரையில் 3 பேரை பிடித்து விசாரணை; லேப்டாப், பென் டிரைவ், 6 சிம்கார்டுகள் பறிமுதல்

சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு நிதி அனுப்பியது மற்றும் ஆட்கள் சேர்த்தது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் உட்பட 8 பேர் மீது கடந்த ஜனவரியில் என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த பலர் அல்கொய்தா அமைப்புகளுக்கு நேரடியாக நிதி அனுப்பியதும், வேலை இல்லாத இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்த்து தீவிரவாத செயல்களில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக நிதி அனுப்பியது மற்றும் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரு சிறையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி, நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை ஏழுகிணறு பிடாரியார் கோவில் தெருவில் தங்கி இருந்த ஹாசன் அலி(27) என்பவரின் வீட்டில் நேற்று காலை 6.30 மணி முதல் பிற்பகல் வரை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி ஹாசன் அலி உடன் தங்கி இருந்த 5 வாலிபர்களையும் என்ஐஏ அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பெங்களூரு சிறையில் உள்ள நசீர் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாய் ஏடிஎம் டெபாசிட் மிஷின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதைதொடர்ந்து ஹாசன் அலியை என்ஐஏ அதிகாரிகள் மண்ணடி மூர் தெருவில் உள்ள கட்டிடத்தின் 4 வது தளத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள பருத்திகாரன் தெருவில் உள்ள தமீமுல் ஆசில்(23) மற்றும் கீழக்கரை புதுத்தெரு பகுதியில் வசித்து வரும் அல் முபீத்(28) என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி அனுப்பிய ஆவணங்கள், அல்கொய்தா அமைப்பின் தளபதிகளுடன் பேசிய குறிப்புகள் மற்றும் லேப்டாப், பென் டிரைவ், 6 சிம்கார்டுகள், மெமரி கார்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது அல்முபீத் வீட்டில் இல்லாததால் அவரது சகோதரர்களான பாஹிம், முகம்மது நஃபுல், முஸ்தாக் அகமது ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். தமீமுல் ஆசில் சென்னையில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை செய்வதும், அல்முபீத் சென்னையில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு நிதி அனுப்பிய விவகாரம் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு: சென்னை, கீழக்கரையில் 3 பேரை பிடித்து விசாரணை; லேப்டாப், பென் டிரைவ், 6 சிம்கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,Al-Qaeda ,Keezhakarai, Chennai ,Chennai ,Naseer ,Kannur district ,Kerala ,India ,Dinakaran ,
× RELATED வழக்கு தொடரும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்