×

ரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து பயணிகள் திடீர் ரயில் மறியல்: காஞ்சியில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு, தொடர்ந்து ரயில் தாமதமாக வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரம், பட்டு நகரம், கோயில் நகரம் என்று பல்வேறு சிறப்புகளை பெற்று இருந்தாலும், ரயில் வசதிகள் என்பது மிகமிக குறைவாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருமால்பூர் – காஞ்சிபுரம் வழியாக சென்னை கடற்கரை, தாம்பரம் என ரயில்கள் இயக்கப்பட்டாலும், காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமமக்கள் இந்த ரயில் வசதியை நம்பியே உள்ளனர். இதனால், காலை 6:15 மணிக்கு இயக்கப்படும் ரயிலில், காஞ்சிபுரத்தில் இருந்து பயணிகள், வியாபாரிகள், கல்லூரி மாணவ – மாணவிகள் என ஏராளமானவர்கள் சென்னை வேலைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம், பழைய ரயில் நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தாமல் ஏனோதானோ என்று செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், காலையில் இயக்கப்படும் 6.15 ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதால், பயணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் முன் அமர்ந்தும், தண்டவாளத்தில் நின்றும் சுமார் ஒரு மணி நேரம் திடீர் மறியல் போராட்டத்தில் பயணிகள் ஈடுபட்டனர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், ரயில் பயணிகள் 6.15 ரயிலுக்கு முன்பு சரக்கு ரயிலுக்கு மட்டும் ரயில்வே நிர்வாகம் நேரம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், பயணிகள் ரயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும், ரயில்வே நிலைய அலுவலர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால், நிலைய அலுவலர் வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட ரயில் பயணிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதில் ரயில் நிர்வாகத்துடன் மன்னிப்பு கடிதம் வாங்கி தரப்படும். இனிமேல் ரயில் தாமதமாக வராது என்று உறுதியளித்ததினர். பின்னர், பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post ரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து பயணிகள் திடீர் ரயில் மறியல்: காஞ்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Pattu ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...