×

தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகள் உற்சாகம்

சென்னை: தினகரன் – சென்னை விஐடி இணைந்து நடத்திய 2வது நாள் கல்வி கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் விருப்பமான கல்லூரிகள், பாடங்களை தேர்வு செய்து உற்சாகம் அடைந்தனர். பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களது விருப்ப படிப்பை தேர்வு செய்வது என்பது பெரும் சவாலாக உள்ளது என்றே சொல்லலாம். அந்த சவாலை எதிர்கொள்வதற்கு மட்டுமல்லாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எந்த பாடப் பிரிவில் சேர்க்கலாம் என்பதற்கும் தினகரன் நாளிதழ் நடத்தக்கூடிய கல்விக் கண்காட்சி பெரும் பங்கு வகிக்கிறது.

ஆண்டுதோறும் தினகரன் நாளிதழ் நடத்தக்கூடிய கல்விக் கண்காட்சி இந்த ஆண்டும் தொடங்கியது. தினகரன் – விஐடி கல்லூரி இணைந்து இந்த ஏற்பாட்டை செய்தது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான தினகரன் கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய கல்வி கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கண்காட்சியை தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் முன்னிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் தியாகராஜன், ரெமோ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையியிட்டனர். காலை முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து அவர்களின் வசதிக்கேற்ற படிப்புகளை தேர்வு செய்தனர்.

இந்நிலையில் 2வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் தங்களது தோழிகள், நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து வந்து ஒவ்வொரு ஸ்டாலிலும் அமைக்கப்பட்ட கல்லூரி அரங்குகளை பார்வையிட்டு அங்குள்ள கல்வியாளர்களிடம் தங்களுக்கு விருப்பமான பாட பிரிவுகளை கேட்டு தேர்வு செய்தனர்.

இந்த கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், மீடியா கல்வி, அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிடக் கலை, புகைப்படக் கல்வி, வர்த்தகக் கல்வி, கடல்சார் கல்வி, அழகுக் கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் கேட்டறிந்தனர். அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பணியமர்த்தப்பட்டு மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தனர். நேற்று மாலையுடன் கண்காட்சி நிறைவு பெற்றது.

* தெளிவு கிடைத்துள்ளது…
ஹர்ஷினி (ரெட்ஹில்ஸ்): கண்காட்சிக்கு வந்த பிறகு நிறைய இன்ஸ்டிடியூட் பற்றியும், கோர்ஸ் பற்றியும் நான் தெரிஞ்சிகிட்டேன். எந்த மாதிரியான படிப்பு படித்தால் பியூச்சர் நல்லா இருக்கும் என்றும் பீஸ் விவரங்களையும் தெரிஞ்சிக்கிட்டேன். மேலும் தனித்தனியாக ஒங்வொரு காலேஜாக செல்வதை விட ஒரே இடத்தில் எல்லா காலேஜைப் பற்றியும் தெரிஞ்சிக்கிறது ஈசியாக இருந்தது. நான் மெடிக்கல் ரிலேட்டடா பி.பார்ம் படிக்க முடிவெடுத்துள்ளேன்.

தமிழ் இலக்கியா (வாலாஜாபாத்): தினகரன் கல்வி கண்காட்சி பற்றி டிவி மற்றும் நியூஸ் பேப்பர் மூலம் தெரிஞ்சி பெற்றோருடன் வந்தேன். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்னு வந்தேன். இங்கு வந்த பிறகு பல கல்லூரியில் உள்ளவர்கள் பலவிதமாக விளக்கம் அளித்தனர். இதில் டேட்டா சயின்ஸ் பற்றி விளக்கி கூறியது எனக்கு பெட்டராக இருந்தது. அதனால் அதை செலக்ட் செஞ்சிட்டேன். ஆக நான் டேட்டா சயின்ஸ் படிப்பு படிக்க போறேன்.

மாயாவதி (சூளை): செய்தித்தாளை பார்த்து இங்கு வந்தேன். இந்த தினகரன் கண்காட்சிக்கு வந்த பிறகு ஒரு கிளாரிபிகேஷன் கெடச்சிருக்கு. எந்த படிப்பு படிச்சா என்ன மாதிரி ஆகலாம் என்பதை தெரிஞ்சிக்கிட்டேன். பிகாம் ஜெனரல் படிக்க முடிவு செஞ்சிருக்கேன். எந்த காலேஜ் என்பதை பெற்றோர் முடிவெடுப்பார்கள்.

புவன் (ஆதம்பாக்கம்): தினகரன் கல்வி கண்காட்சி சூப்பராக இருந்தது. ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினரும் படிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறியது நல்ல எக்ஸ்பிரியன்ஸ்சா இருந்தது. நான் என்ன படிப்பது என குழப்பத்தில் இருந்தேன். இப்போது இங்க வந்து தெளிவாகி பி.இ.சி.எஸ்.இ படிப்பு முடிவெடுத்துள்ளேன்.

The post தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Dhinakaran ,Daily ,Chennai VIT ,Education Fair ,CHENNAI ,2nd ,fair ,Dinakaran Daily – Chennai VIT ,Dinakaran ,
× RELATED தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து...