×

வற்றாத வளங்கள் அருளும் வராஹர்

இரண்யாட்சன் எனும் அசுரன் தன் மாபெரும் படைகளோடு பூமியின் மையத்திற்கு வந்தான். அக்கூட்டம் ஓங்கி பூமியை உதைத்தது. சிறகாய் இருந்த பூமாதேவியின் சிரம் அழுந்தியது. அக்கூட்டம் யாகக் கூடங்களையும், யாகக் குண்டங்களையும் குவியல் குவியலாய் அழித்தது. மானிடர்களை மரம் அறுப்பது போல் அறுத்தெறிந்தது. வேதம் சொல்பவர்களை வேண்டுமென்றே வெட்டி வீழ்த்தியது. தர்மம் எனும் விஷயத்தை தலைகீழாய்ப் போட்டு காலின் கீழ் வைத்துத் தேய்த்தது. அந்த அசுரக் கூட்டம் குழுக்குழுவாய் பிரிந்து பேயாட்டம் ஆடியது. இரண்யாட்சன் தன் கோரைப் பற்களால் பெருஞ்சிரிப்பு சிரித்தான். பூமாதேவி பாரம் தாங்காது தவித்தாள்.

பாற்கடல் பரந்தாமன் சட்டென்று எழுந்து அமர்ந்தார். தன் அகக்கண்களால் அந்த அசுரக் கூட்டத்தைப் பார்த்தார். அவர்கள் அதற்குள் தேவலோகம் போய்விட்டிருந்தார்கள். இந்திரனும் தேவக்கூட்டமும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அட்டூழியம் தாங்காது அலறித் துடித்தார்கள். ‘எம்பெருமானே… எம்பெருமானே…’ என்று கைதொழுதார்கள். பிரம்மாவின் படைப்புத் தொழில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பிரம்மா படைக்கப் படைக்க அழித்துக்கொண்டே இருந்தார்கள். பிரம்மா கண்கள் மூடினார். கண்களில் நீர் வழிய வைகுண்டவாசனைத் தொழுதார்.

உலகெலாம் ஆளும், அகிலமனைத்திற்கும் அரசனான பாற்கடல் பெருஞ் சக்தி பிரம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தது. பிரம்மாவின் உடல் மெல்ல அதிர ஆரம்பித்தது. அவன் உடலுக்குள்ளே பெருஞ்சக்தி மையமிட்டிருப்பதை பிரம்மாவால் உணர முடிந்தது. அவன் நாசியில் மூச்சு முற்றிலும் வேறொரு தாளகதியில் இயங்கியது. ஒரு பெருமூச்சு புயல் போல பிரம்மாவின் நாசி வழியே வெளியேறியது. அது ஈரேழுலகங்களையும் சுழற்றியடித்தது. அந்த பாற்கடல் பரந்தாமன் வராஹம் எனும் பன்றிக் குட்டியாய் வெளியேறினார். அது கட்டை விரலளவு இருந்தது. வெளிப்பட்டவுடன் வளர்ந்து கொண்டேயிருந்தது.

சட்டென்று வானுயரமாய் விஸ்வரூபமெடுத்தது. அந்த திவ்ய சொரூபத்தை பார்த்தவர்கள் பிரமித்தார்கள். தங்களை மறந்தார்கள். தேவர்களும், முனிவர்களும் இதென்ன விசித்திரம் என்று வியந்தார்கள். எல்லா தேவர்களும், முனிவர்களும் அங்கு பிரசன்னமாயினர். அதன் பிரகாசம் அசுரர்களின் கண்களை கூசச் செய்தது. தேவர்கள் அதில் அழகாய் ஒளிர்ந்தார்கள். அதன் நாசியும், முகமும் நீண்டு பலமான முகவாயோடு இடதும், வலதும் அசைந்தது. அசையும்போது பிடரி சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பு மணியோசைபோல் எட்டுத் திக்குகளிலும் எதிரொலித்தது. எம்பெருமானின் கண்கள் அதிகூர்மையாய் எல்லையற்ற பார்வையாய்ப் படர்ந்தது. அதன் நாசியிலிருந்து வெளிப்பட்ட மூச்சு வேதசப்தங்களாக எதிரொலித்தன. ஓர் இனிய நாதம் மூவுலகையும் ஆட்கொண்டது. எம்பெருமான் வேதாந்த வராஹமாய் கர்ஜித்தார்.

அவர்கள் பார்த்திருக்கும் போதே பகவான் யக்ஞவராஹர் பூமியை விழுங்கிய மகாசமுத்திரத்தைப் பார்த்தார். அந்த கரைகளற்ற சமுத்திரத்தை தன் நீண்ட குளம்புகளால் பிளந்துகொண்டு பாதாளம் வரை சென்றார். இரண்யாட்சன் தன் அசுரக் கூட்டத்தோடு வந்தான். வராஹரின் வினோதம் பார்த்தான். வாய்விட்டுச் சிரித்தான். தன் கதையால் அவரைத் தொடர்ச்சியாய் தாக்கினான். வராஹர் வஜ்ரமாய் நின்றார். அதைக் கண்ட இரண்யாட்சன் இருண்டான். அந்த இருளான பாதாளத்தில் வராஹர் வைரமாய் ஜொலித்ததைப் பார்த்துப் பயந்தான். தன் பயம் மறைத்து, கோபமாய் அவரை தாக்க அந்தக் கூட்டத்தோடு பாய்ந்தான். வராஹர் கூட்டத்தை நசுக்கி நீரில் தூக்கிப் போட்டார். வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் கடுமையான போர் நடந்தது. வராஹர் இரண்யாட்சனை இரண்டாகப் பிளந்தார். அவன் அலறலால் மூவுலகமும் அதிர்ந்தது.

வராஹர் அஞ்ஞானம் எனும் சமுத்திரத்தில் வீழ்ந்த பூலோகத்தை தன் நாசியின் நுனியில் தாங்கினார். நாசியிலிருந்து வெளிப்பட்ட மூச்சுக் காற்றால் பூலோகமே மறைமணம் கமழ்ந்தது. யாகமெனும் தீப்பிழம்பு மென்மையாய் படர்ந்தது. வராஹரின் வலப்புறத்தே பூமா தேவியார் அமர்ந்திருக்க மெல்ல சமுத்திரத்திலிருந்து எம்பெருமான் மேலெழுந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும், மனுஷ்யர்களும், சகல உயிர்களும் அதைக் கண்டு தொழுதனர். எம் பெருமானின் இந்த திவ்ய அவதாரம் எல்லோர் இருதயங்களிலும் இன்றுவரை இளகுகிறது. அப்போது ஓர் மூலையில் எம்பெருமானைத் தொழுதவாறு மாபெரும் செல்வந்தனான குபேரனும் நின்றிருந்தான். இப்பெருமானை பூலோகத்தில் எங்கேனும் அமர்விக்கவேண்டும் என ஆசை கொண்டான். அதற்கான காலம் வரும் வரை காத்திருந்தான்.

அது தாமிரபரணி எனும் புண்ணிய நதி பாயும் அழகான சீமை. விஷ்ணு தர்மன் என்னும் அரசன் அந்த ராஜ்யத்தை பரிபாலித்தான். அதனாலேயே அந்தச்சீமை பொலிந்து விளங்கியது. விதம்விதமான யாகங்கள் செய்து யாகசொரூபியான நாராயணனை வசீகரித்தான். யாகங்களிலேயே சிறந்த அஸ்வமேத யாகம் செய்தான். இவன் பக்திக்கு கட்டுப்பட்டு பிரம்மா, இந்திரன், குபேரன் என்று எல்லா தேவர்களும் வந்திருந்தனர். தேவர்கள் யாகத்தின் முடிவில் வேண்டிய வரங்களை தந்தார்கள்.

குபேரன் அந்த அரசனைக் கூப்பிட்டு இந்த புண்ணிய தலத்தில் யாகசொரூபியான வராஹருக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும் என்று பணித்தார். மேலும், இப்பெருமானை தரிசிப்போர்களுக்கு எக்காலத்தும் வற்றாத செல்வம் அருளுமாறு பக்தர்களின் பொருட்டு தான் எம்பெருமானிடம் கேட்டுக்கொள்வதாய் கைபிடித்து உறுதியும் அளித்தார். உடனே, குபேரன் முன் நிற்க, அந்த அரசன் ஏராளமான பொருட் செலவில் கோயில் அமைத்தான். லட்சுமி வராஹரை பிரதிஷ்டை செய்தான். பிரதிஷ்டை செய்த அன்று யாகம் நடத்தினான். அப்போது யாகபாத்திரங்களெல்லாம் வராஹ சாந்நித்தியத்தால் கல்லாக மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிபுரம் என்றழைக்கப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட எல்லோரும் இங்கு யாகம் செய்ய ருசி (ஆசை) கொண்டதால் குருசி எனப்பட்டது. இவை இரண்டும் இணைந்து சிலாசாலிகுருசி அதாவது கல்லடகுருசி என்று அழைக்கப்பட்டது. அதுவும் திரிந்து கல்லிடைக்குறிச்சி என நிரந்தரமாகியது.

அழகான ஊர். கிழக்கே பார்த்த பெரிய கோயில். கொடிமரமும், பலிபீடமும் அடுத்தடுத்து உள்ளன. முகப்பு மண்டபம் தாண்டி ஊஞ்சல் மண்டபமும், கருட மண்டபமும் அருகருகே விரவியுள்ளன. பெரிய திருவடியான கருடாழ்வாரும், சிறிய திருவடியுமான ஆஞ்சநேய ஸ்வாமியும் வாகன மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். கருடருக்கு ஆடி சுவாதியில் உற்சவம் நடைபெறுகிறது.

இன்னும் உள்ளே நகர எம்பெருமான் லட்சுமி வராஹர் உற்சவ மூர்த்தியாய் பொலிந்து நிற்கிறார். அங்கு நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் ஆதிமூலம், ஆதிவராஹம் எனும் லட்சுமி வராஹர் கம்பீர புருஷராய் காட்சி தருகிறார். அருகே வருவோரை உற்றுப்பார்த்து என்ன வேண்டும் என்று வினயமாய் சற்று தலையை முன்னே தாழ்த்தி கேட்கும் ஒரு முக அமைப்பு நம்மை சிலிர்த்திட வைக்கிறது. பூலோகம் தாங்கிய புருஷரல்லவா இவர் எனும் பிரமிப்பு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அவர் பார்க்க நம் மனம் பூவாய் மலர்கிறது. யாகபாத்திரங்கள் கற்களாய் மாறியது எவ்வளவு சத்தியம் என்பது நாம் அந்த சந்நதியில் நம்மை மறந்து நிற்கும்போது புரிகிறது.

உட்பிராகாரத்தில் தாயார் சந்நதி தனியே உள்ளது. அருள் கொப்பளிக்கும் முகத்தோடு அழகாய் காட்சி தருகிறாள். அதற்கு அருகே தசாவதாரம் முழுவதும் கற்சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்போரை பரவசமூட்டும். வெளிப் பிராகாரத்தில் தெற்குப் பக்கமாய் சாஸ்தா மண்டபமும், வடகிழக்குப் பகுதியில் தர்மசாஸ்தாவும் அருளை மழையாய் பொழிகிறார்கள். சித்திரைத் திருநாள் அன்று பத்து நாட்கள் உற்சவம் நடக்கிறது. ஊரே களைகட்டும். திருவிழாக்கோலம் பூணும்.

குபேரன் மன்னனுக்கு சொன்ன சொல், அந்த வார்த்தை இன்றுவரை பிசகாது உள்ளது. இப்பெருமானை தரிசிப்போர் சகல செல்வச் செழிப்போடு திகழ்கிறார்கள். நம்பொருட்டு குபேரன் அருவமாய் வராஹரின் அருகே வழிபடுகிறான் என்று அவ்வூர் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலை வில் இத்தலம் அமைந்துள்ளது.லட்சுமி வராஹரை தரிசியுங்கள். வாழ்வின் ஆதாரம் பற்றிடுங்கள். வற்றாத செல்வத்தை பெற்றிடுங்கள்.

The post வற்றாத வளங்கள் அருளும் வராஹர் appeared first on Dinakaran.

Tags : Varaha ,Iranyadsa ,Bhumadevi ,Varahar ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்