×

காலசம்ஹாரத் தலங்கள்

1- திருக்கடவூர்

சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக யமனை அழித்த தலங்களில் முதன்மை பெற்ற தலம் திருக்கடவூர். இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். காலசம்ஹாரமூர்த்திக் கென இங்கே பெரிய சபாமண்டபம் உள்ளது. இதில் வீரநடனம் புரிபவராகச் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவருடைய காலடியில் யமன் வீழ்ந்துகிடக்க ஒரு பூதம் அவனது காலில் கயிற்றைக் கட்டி இழுக்கின்றது. சுவாமியின் வலது பக்கம் சிறுவனாக மார்க்கண்டேயர் நிற்கின்றார். இடது பக்கம் தனிப்பீடத்தில் பாலாம்பிகை தோழியர்களுடன் நிற்கின்றாள். இவர்கள் வீற்றிருக்கும் பீடத்திற்கு மேற்கில் மார்க்கண்டேயர் பூசித்த லிங்கமும் மிருத்துஞ்ஜய சக்கரமும் உள்ளன.

இந்த சபாமண்டபத்திற்கு நேர் எதிரில் வடக்கு நோக்கியவாறு அமைந்த சிறுசந்நதியில் அனுக்கிரகம் பெற்ற யமதருமனும் அவனுடைய வாகனமான எருமையும் நிற்கின்றனர். இந்தச் சபை காலந்தகசபை எனப்படும். இது விசாலமான அழகிய சபா மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் வெள்ளி மஞ்சத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அவருக்குத் தங்கக் கவசமும் கலையழகுமிக்க ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன. பெரிய நிலைவிளக்குகளும், சரவிளக்குகளும் ஒளிவீசுகின்றன.

சித்திரைமாதப் பெருந்திருவிழாவின் ஆறாம் நாள் காலசம்ஹாரருக்குப் பெரிய அளவில் அபிஷேகமும், ‘‘காலசம்ஹாரத் தாண்டவமும்’’, யமனை அழிப்பதும், அருள்புரிவதும் ஐதீகக் காட்சிகளாக நடத்தப்படுகின்றன. அன்று காலசம்ஹாரர் பஞ்ச மூர்த்திகள் மார்க்கண்டேயருடன் பவனி வருகின்றார்.

கல்வெட்டுக்கள் காலசம்ஹாரரை திருவீரட்டமுடைய பரசுவாமி, காலகாலதேவர், கடவூர் நாயகர் கூத்தாடும் காலகாலர் என்று பலவாறு குறிக்கப்பட்டுள்ளார். இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் காலதேவர் மீது. கொழும்புமன்னன் ஒருவன் பாடல் இயற்றியது. பாண்டியநாட்டு வணிகனால் தங்க சிம்மாசனம் செய்தளிக்கப்பட்டது. பூசைக்கும் விழாவுக்கும் நிவந்தமளிக்கப்பட்டது முதலான செய்திகளை அறிய முடிகின்றது. இவருக்கு சித்திரைப் பெருவிழாவின் முதல் தேதி, ஐந்தாம் நாள், ஆறாம் நாள், தட்சணாயண, உத்ராயண தினங்கள், ஆனிஉத்திரம், புரட்டாசி (கன்யா) சதுர்த்தி, ஐப்பசி முதல் தேதி, மார்கழித் திருவாதிரை, மாசிமக சதுர்த்தசி ஆகிய நாட்களில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த தலத்தில் மார்க்கண்டேயர் காசியிலிருந்து கமண்டலத்தில் கொண்டு வந்த தீர்த்தம் அசுவதி தீர்த்தம் என்ற கிணறாக உள்ளது. மேலும், அவர் கொண்டு வந்து நட்ட பிஞ்சிலம் என்னும் மல்லிகைக் கொடி தலமரமாக உள்ளது. இந்தத் தலத்துத் தேவாரங்களில் மூவர் முதலிகளும் மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் யமனை அழித்ததைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இக்கோயில் மகா மண்டபத்தின் மீது கால சம்ஹாரக் காட்சி பெரிய சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இது கலையழகு மிக்கதாகும். இத்தலத்து இறைவர் அமிர்தகடேசுவரர். இறைவி அபிராமி சுந்தரி. தீர்த்தம் அமிர்ததீர்த்தம்.

2- திருவீழிமிழலை

சுவேதகேது என்ற அரசகுமாரனுக்காகச் சிவபெருமான் காலனைச் சம்காரம் செய்த தலம் திருவீழிமிழலையாகும். இங்குள்ள ஐந்து உலாத் திருமேனிகளில் ஒருவராகக் காலசம்கார மூர்த்தி எழுந்தருளியுள்ளார். அருகில் உமாதேவி எழுந்தருளியுள்ளாள்.

இங்கு யமசங்காரம் நடந்ததைக் கூறும் புராண வரலாறு குறித்து பார்ப்போமா!

வடதேசத்தில் சயந்தன் என்ற அரசன் புத்திரப் பேறின்மையால் அனேக தான தருமங்களைச் செய்து சிவபெருமானைப் பூசித்தான். இறைவன் அருளால் அவனுக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அரசன் அவனுக்குச் ‘‘சுவேதகேது’’ என்று பெயரிட்டு வளர்த்துவந்தான்.

அரண்மனை ஜோதிடர்கள், அரச குமாரனது ஜாதகத்தை ஆராய்ந்து, அவன் தனது பதினாறாவது வயதில் மரணமடைவான் என்று கூறினர். அதைக் கேட்ட அரசன் மிகவும் கலக்கமடைந்தான். தனக்குத் தெரிந்த அனைவரிடமும் மரணத்தை மாற்ற வல்ல வழியைக் கூறுமாறு வேண்டினான். முனிவர்கள் அரசனிடம், ‘‘மன்னனே அகால மரணத்தை மாற்ற வல்லது சிவபூசை மட்டுமே. உனது மகனைச் சோழ நாட்டிலுள்ள வீழிவனத்திற்குச் சென்று சிவபெருமானைப் பூசிக்கச் சொல்,’’ என்றனர். அரசனும், மகனுக்கு சிவதீட்சை செய்து உரிய பரிவாரங்களுடன் தென்னகம் நோக்கி அனுப்பிவைத்தான். அவன் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு இறுதியாக வீழிவனத்தை அடைந்தான். அங்கு வீற்றிருக்கும் வீழிநாதப் பெருமானை ஆராக்காதலுடன் அர்ச்சித்துப் போற்றி வந்தான். காலங்கள் கடந்தன. அவனுடைய இறுதிநாளும் வந்தது.

அரசகுமாரன் மிகுந்த பக்தியுடன் சிவனை பூசித்துக் கொண்டிருந்தான். கால தூதர்கள் அவன் உயிரைக் கவரப் பலவாறு முயன்று தோற்றனர். இறுதியில் யமதருமனிடம் சென்று முறையிட்டனர். இதென்ன அடாதசெயல். எனது ஆணையை மீறி இப்படி நடப்பதா? என்று கூறி கடுங்கோபத்துடன் அவன் திருவீழிமிழலையை அடைந்தான். அங்கு பூசித்துக் கொண்டிருந்த சிறுவன்மீது பாசத்தை வீசினான். அதைக் கண்ட அவன் சிவலிங்கத்தைத் தாவி அணைத்துக் கொண்டான். யமன் வீசிய கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது. இறைவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை உதைத்தார். சுவேதகேதுவைக் காத்து நீண்ட ஆயுளை அளித்தார்.

பின்னர், பூமிதேவியும் தேவர்களும் வேண்ட, யமனை உயிர்ப்பித்து அருள்பாலித்தார். சுவேதகேது, சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டபோது சிவபெருமானின் திருமேனி குழைந்ததாம். அதனால் அவன் அணிந்திருந்த ருத்திராட்சம் சிவலிங்க மேனியில் அழுந்தித் தழும்பாக்கியது அந்த சுவடை இந்நாளிலும் காண்கிறோம். இந்த தலத்தில் சிவபெருமான் யமனை அழித்துச் சுவேத கேதுவுக்கு அருள்புரிந்ததை அப்பரடிகள்.

‘‘பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச்சாடிய
அழகனே’’
– என்று பாடுகின்றார்.

சித்திரை மாதம் நடக்கும் பெருந்திரு விழாவின் நான்காம் நாளில் ஒரு அங்கமாகக் காலசம்கார நிகழ்ச்சி ஐதீகவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. எருமை வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவனாக யமதருமனின் உருவம் மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது முதலில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது முன்னிரவில் யமன் சுவேதகேதுவைத் தேடி ஆலயத்திற்கு வருதல், சுவேதகேது மூலவரை வழிபடுதல். மயன் பாசத்தை வீசுதல், லிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு அவனை உதைத்தல். உதைபட்ட யமன் எருமை மீது மல்லாந்து விழுதல் பூமிதேவியின் வேண்டுகோளுக்காக அவனை உயிர்ப்பித்தல் ஆகியன நாடகப் பாங்கில் நடத்தப்படுகின்றன. பிறகு, காலசம் ஹாரர் பவனி வருகின்றார். இந்த கோயிலில் சுவேத கேதுவின் திருவுருவமுள்ளது. யமனுக்கு அருள்புரிந்து சிவபெருமான் நடனமாடுவதும் நடத்தப்படுகின்றது. உயிர்பிழைத்த பின்னர், யமன் பூசித்துப் பேறு பெற்ற லிங்கம் இவ்வூருக்கு அருகிலுள்ள விஷ்ணுபுரத்தில் உள்ளது. அங்குள்ள தீர்த்தம் யமதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

3-திருவையாறு

சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை உதைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது போலவே, அவருடைய பரிவாரங்களான துவார பாலகர், சண்டேசுவரர், நந்திதேவர் ஆகியோரும் சிவ பக்தர்களைக் காக்க யமனைத் தண்டித்துள்ளனர். அத்தகைய தலங்களுள் முதன்மையானது திருவையாறு ஆகும். இங்குள்ள துவாரபாலகர் யமனைத் தண்டித்து அருள்பாலித்ததைத் தலபுராணம் கூறுகின்றது அதன்படி:

வடநாட்டில் கௌதமீ நதிக்கரையில் ஒரு திவ்யமான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகுந்த சிவபக்தியடையவர்களாகவும், தவம் உடையவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு நல்ல குணசாலியான மகன் ஒருவன் இருந்தான் அவனுடைய பெயர் சுசரிதன் என்பதாகும். அவனும் மிகுந்த சிவபக்தி கொண்டவன். அவன் பல தீர்த்தங்களில் மூழ்கிச் சிவாலயங்களைத் தரிசித்துத் தென்னாட்டிற்குப் பயணமாக வந்தான். அவன் பல தலங்களைத் தரிசித்த பின் காவிரிக் கரையிலுள்ள திருப்பழனம் என்ற தலத்தை அடைந்தான். அங்கு பெருமானை வழிபட்டுச் சில நாட்கள் தங்கியிருந்தான். ஒருநாள், இரவு அவனுடைய கனவில் யமதருமன் தோன்றி, ‘‘அன்பனே! இன்றிலிருந்து ஐந்தாம் நாள் இரவு நீ மரணமடைவாய், அதற்குள் மோட்ச சாதனங்களைத் தேடி அடைவாய்’’, என்றான். கண்விழித்து எழுந்த சுசரிதன், ‘‘பெருமானே! இன்னும் அனேக காலம் வாழ்ந்திருந்து சிவத்தலங்களை தரிசித்து மகிழ விரும்புகின்றேன்.

இதற்குள் நான் அகால மரணமடைய விரும்பவில்லை. அதனால் எனக்கு மரணத்தை வெல்லும் உபாயத்தை அருளுக என்று மனமுருகிப் பிரார்த்தித்தான். பிறகு, வசிட்டமுனிவரைத் துதித்து தனக்கு நீண்ட காலம் வாழவழிகாட்டி அருள்புரியுமாறு வேண்டினான். அவர் அவன் முன்தோன்றி ‘‘திருவையாறு ஜோதிலிங்கத்தை வழிபட்டால் மரணத்தை வெல்லலாம். நீ காவிரியில் மூழ்கி தட்சிணாமூர்த்தி சந்நதியிலுள்ள ஜெப மண்டபத்தில் இருந்து பஞ்சாட்சர ஜெபம் செய்க, நானும் உனக்காகத் தெற்கு வாயிலில் நின்று ஜெபம் செய்வேன்’’ என்று கூறினார்.

அதன்படியே அவர்கள் ஜெபம் செய்யத் தொடங்கினர். ஐந்தாம் நாளும் வந்தது பகல் கழிந்தது. மாலை வேளையில் யமதூதர்கள் சுசரிதனைப் பிடித்துச் செல்ல வந்தனர். எவ்வளவு முயன்றும் அவர்களால் அவனை நெருங்க முடியவில்லை. அவர்கள் திரும்பிச் சென்று யமனிடம் தமது இயலாமையைத் தெரிவித்தனர். இரவு கழிந்து கொண்டே வருவதாலும், விடிவதற்குள் அவனுடைய ஆயுள் முடிந்து விடுவதாலும் யம தருமன் தானே புறப்பட்டு வந்தான். அவன் வருவதை அறிந்து வசிட்ட முனிவர் சிவபெருமானைப் பணிந்து தமது சீடனைக் காக்குமாறு வேண்டினார்.

சிவபெருமான் தமது வாயிற்காவலர்களை அழைத்து எமனை அழித்துச் சுசரிதனை காக்குமாறு ஆணையிட்டார். யமதருமன் தனது படைகள் சூழ; திருஐயாற்றை அடைந்தான். தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் அவனை எளிதில் பிடிக்கலாம் என்று கருதி அந்தக் கோபுரவாயில் வழியாக உட்செல்ல முயன்றான். அங்கு வாயிற்காவலர்களாக இருந்த ஆட்கொண்டாரும், உய்யக் கொண்டாரும் அவனைத் தடுத்தனர். அவன் அவர்களிடம் தனது பணியை நிறைவேற்ற அனுமதிக்குமாறு வேண்டினான். அவர்கள் சிவனின் ஆணையைக் கூறி அவனை விலகிச் செல்லுமாறு கூறினார். அவனோ பிடிவாதமாகச் சிறுவனின் உயிரைப் பறித்தே தீருவேன் அது எனது கடமை என்று வாதித்தான். அதனால் கோபம் கொண்ட ஆட்கொண்டார் (துவாரபாலகர்) அவனை உதைத்து, உயிரைப் போக்கினார்.

பின்னர், யமனின் மனைவியும், பூமிதேவியும் வேண்டிக்கொண்டதற்கேற்ப அவனை உயிர்ப்பித்தார். சிவனருளால் உயிர்பெற்ற சுசரிதன் நெடுங்காலம் வாழ்ந்திருந்து சிவாலயங்களைத் தரிசனம் செய்து இறுதியில் சிவசாயுஜ்யம் பெற்றான். யமனை அழித்து; மீண்டும் உயிர்ப்பித்த ஆட்கொண்டார். காலசங்காரராகப் போற்றப்படுகின்றார். இவருடைய சந்நதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் அகாலமரணம், துர்மரணம் முதலியன நிகழாது என்று நம்பப்படுகிறது.

இவருடைய சந்நதிக்கு எதிரில் ஆழமான பள்ளம் உள்ளது. இதில் எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பில் மக்கள் குங்கலியத்தை இடுகின்றனர். இதில் இடப்படும் குங்கிலியம் எரிந்து புகைந்து ோபவதைப் போலவே நமது வினைகளும் நாசமாகி விடும் என பக்தர்கள் நம்புகின்றனர். இது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது. ஆட்கொண்டாரான காலசங்கரர் மீது திருவையாறு தியாகப் பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் இரண்டு கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். இவற்றில் ‘‘காலசம்ஹார கருணாகர’’ என்ற பாடல் சௌராஷ்டிர ராகத்திலும், க்ஷேத்ரபாலக க்ஷேமமு என்ற பாடல் பிலஹரி ராகத்திலும் அமைந்தவையாகும்.
திருவையாற்றில் கார்த்திகை மாத காளாஷ்டமியில் காலசம்ஹாரர் வீதிக்கு எழுந்தருள்கின்றார். அன்று தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது.

4-திருவெண்காடு

திருவீழிமிழலையில் சுவேதகேது என்ற அரசகுமாரனுக்காக யமனைக் சம்ஹரித்தது போலவே திருவெண்காட்டில் சுவேதகேது என்ற முனிகுமாரனுக்காக யமனை சம்ஹரித்தார்.

இந்த ‘சுவேதகேது’ உத்கால முனிவரின் குமாரன். இவன் ஐந்தாவது வயதில் இறப்பான் என்பதை அறிந்து கொண்ட உத்காலமுனிவர் அவனுக்குச் சிவதீட்சையும் மந்திர உபதேசமும் செய்து வைத்தார். அவன் பல தலங்களில் சிவனை வழிபட்ட பின் திருவெண்காட்டினை அடைந்தான். அங்கு சிவபெருமானை சிறப்புடன் வழிபட்டுச் சிவயோகத்தில் திளைத்திருந்தான்.

அவனுடைய விதிமுடிந்ததால் யமதருமன் அங்கே தோன்றினான். அதைக் கண்ட முனிகுமாரன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அவனை இழுத்துச் செல்ல யமதருமன் பாசக் கயிற்றை வீசினான். அது முனிகுமாரனுடன் சிவலிங்கத்தையும் பற்றி இழுத்தது. முனிகுமாரனின் உறுதியான பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். யமனை உதைத்து முனிகுமாரனுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்ச்சியைத் தேவாரத்தில் அப்பரடிகள்;

‘‘வேலைமலி தண்கானல் வெண்காட்டன் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடு நன்மறையவன்தன்
மேலடர் வெங்காலன் உயிர் உண்டபின் நமன்தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்றாட அஞ்சுவரே’’
– என்று அருளியுள்ளார்.

இதன் பொருள்: கடல் அலைகளால் தாலாட்டப்படும் குளிர்ச்சி மிகுந்த (கானல்) மணற்சோலைக்கு இடையிலுள்ளது திருவெண்காடு ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளை மாலைகளாலும், வாசனை மிகுந்த சந்தனத்தாலும் வழிபட்டவன் சுவேதகேது என்ற முனிகுமாரன். இவனுடைய விதிமுடிந்த காலத்தில் யமதருமன் இவனைப் பற்றியபோது சிவன்தோன்றி யமனின் உயிரைப் போக்கினான். அந்த செய்கைக்குப்பின் யமனுடைய தூதுவர்கள் ஆலம் உண்ட சிவபெருமான் அடியார்கள் என்று அறிந்ததால் அவர் மீது தமது பாசத்தை வீசிப்பற்ற அஞ்சுவார்கள் என்பதாகும். பதினெண்புராணங்களில் ஒன்றான லிங்கபுராணத்தில் முனிகுமாரனான சுவேதகேதுவுக்காக திருவெண்காட்டில் சிவபெருமான் யமதருமனைச் சங்கரித்து குறிக்கப்பட்டுள்ளது.

5-திருவைகாவூர்

சிவனடியாரைக் காக்க துவாரபாலகனான ‘ஆட்கொண்டார்’ திருவையாற்றில் காலசங் காரம் செய்ததைப் போல திருவைகாவூரில் நந்தியம் பெருமான் யமசம்காரம் செய்துள்ளார். குடந்தை – சுவாமிமலை வழியாகச் செல்லும் சாலையில் பயணம் செய்து திருவைகாவூரை அடையலாம். இறைவன் ஆதியில் இங்கு வில்வமரத்தடியில் வீற்றிருந்ததால் வில்வவன நாதர் என்று அழைக்கப்படுகின்றார். ஒருமுறை வேடன் ஒருவன் புலி ஒன்று, தன்னைத் துரத்தி வந்தபோது இங்குள்ள வில்வ மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டான். புலி அவனைவிட மனமின்றி அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டது. புலிக்குப் பயந்த வேடன், இரவு தூங்கினால் மரத்திலிருந்து விழுந்து விடுவோமோ என்று அஞ்சித் தூங்காதிருக்க அம்மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய தோல் பையிலிருந்து நீர்த்துளிகள் கீழே சிந்தின.

அந்த மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன்மீது கீழே சிந்திய நீரும், பறித்துப் போட்ட வில்வ இலைகளும் விழுந்தன. அன்று சிவராத்திரி தினம். சிவபெருமான், வேடன் தன்னையறியாது சிந்திய நீரை அபிஷேகமாவும், பறித்துப் போட்ட இலைகளை அர்ச்சனையாகவும் ஏற்று அவனுக்குச் சிவபுண்ணியத்தை அளித்தார்.

அதே சமயம், விடியும் வேளையில் அவன் ஆயுள் முடிந்துவிட்டதால் யமபடர்கள் அவனை யமலோகம் அழைத்துச் செல்ல அங்கே வந்தனர். அவனுடைய சிவ புண்ணியத்தால் அவனை நெருங்க முடியவில்லை. பிறகு யமனே அங்கு வந்தான். வேடன் உயிரைப் பற்றாதே என்று சொல்லியும் கேட்காததால், அவனை நந்தியம்பெருமான் அடித்து வீழ்த்தி உயிரைப் பறித்தார். பின்னர் பூமிதேவியின் வேண்டுகோளால் உயிர்ப்பித்தார். யமன் தமது தவறை உணர்ந்து அங்கு சிவனை வழிபட்டுப் பேறுபெற்றான்.

யமனை ஓட்டிச் சங்கரித்த.தை நினைவு கூரும் வகையில் நத்தியம் பெருமான் (இறைவனை நோக்காது) திருவாயிலை நோக்கிப்படுத்துள்ளார். இறைவன் ‘வில்வநாதர்’ என்றும் இறைவி ‘சர்வஜன ரட்சகி’ என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் மறை இவள் பெயரை வளைக்கை நாயகி என்று குறிப்பிடுகிறது. கோயிலுக்கு முன்பாக யமன் அமைத்த யமதீர்த்தம் உள்ளது. சிவராத்திரியன்று வேடனுக்கும் அவனுடைய மனைவியான வேட்டுவச்சிக்கும் இறைவன் அருள்புரிந்த ஐதீகம் விழாவாக நடத்தப்படுகிறது.

The post காலசம்ஹாரத் தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Kalasamharat ,Thirukkadavur ,Lord Shiva ,Yama ,Markandeya ,Kalasamharamurthy ,Kena ,
× RELATED காமதகனமூர்த்தி