×

1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டம் முழுவதும், 984 முகாம்களில் 1.33 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை, கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். சொட்டு மருந்து வழங்கும் பணியில் 4,083 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 984 முகாம்களில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணிக்காக கிராமப் பகுதியில் 964 முகாம்கள், நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,083 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான தர்மபுரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தர்மபுரி நகரில் புறநகர், நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் சிறப்பு முகாம்கள் நடந்தது. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில், 17 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தர்மபுரி கலெக்டர் சாந்தி, தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகர செயலாளர் நாட்டான் மாது, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, வட்டாட்சியர் ஜெயசெல்வம் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் சாந்தி கூறுகையில், ‘போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க, அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து, தர்மபுரி மாவட்டம் போலியோ நோய் இல்லாத மாவட்டமாக இருக்க, தீவிர பல்ஸ் போலியோ முகாம் சிறப்பாக நடந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் 984 முகாம்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது, என்றார்.

The post 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Collector ,Shanti ,Dharmapuri district ,
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்