×

சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குப் பதிவு மையத்தில், அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர். இதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள், தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13ம்தேதி 3மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் (வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் நீங்கலாக) மற்றும் 15ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காவல்துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர்களும் தபால் வாக்களித்து வருகின்றனர்.

மேலும், கடந்த 13ம்தேதி வாக்களிக்க இயலாதவர்கள், சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்குகள் செலுத்துகின்றனர். இந்த மையத்தில் வாக்குப்பதிவு நிகழ்வுகளை, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி தாசில்தார் (தேர்தல்) வெங்கடேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Collector ,Collector ,Shanti ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் 84 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு