×

அதானி துறைமுகத்தில் சிக்கிய பல கோடி போதைப் பொருட்கள் மூடி மறைக்கப்பட்டது ஏன்? மதுரை எம்பி கேள்வி

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நடந்த தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: மதுரைக்கான எய்ம்ஸ் கட்டுமான பணிகள் மார்ச் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்தார்கள். ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மார்ச் என்று கூறுகிறார்கள். டிசம்பர் மாதம் தேர்தல் வந்தால் அக்டோபரில் துவங்கும் என்பார்கள். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துங்கள் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் கோரி வருகின்றனர்.

மோடியின் தொகுதியான வாரணாசியில் சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. அதைவிட இருமடங்கு பயணிகள் வந்துசெல்லும் மதுரைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தை பெறுகிறது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்கான மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த ஒன்றிய அரசு தமிழகத்துக்காக இயங்க மறுப்பதும், இது யாருக்கானது என்பதும் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது.

அதானியின் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப் பொருட்கள் சிக்கிய சம்பவம் மூடி மறைக்கப்பட்டது ஏன் என்று, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மோடி ஐந்து முறை தமிழகம் வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை திருப்பி அனுப்புவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post அதானி துறைமுகத்தில் சிக்கிய பல கோடி போதைப் பொருட்கள் மூடி மறைக்கப்பட்டது ஏன்? மதுரை எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Adani Port ,Madurai ,S. Venkatesan ,Thiruparangunram, Madurai ,AIIMS ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை