×

தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் 2024 – 25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் சிறப்பு மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்குளத்தூர் சேகர், கல்வி குழு தலைவர் கற்பகம் சுரேஷ், எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 2024 2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி குழு தலைவர் ரமணி ஆதிமூலம், சமர்ப்பித்தார். பின்னர், அவர் பேசியதாவது: 2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டிற்கான மொத்த வரவுகள் மற்றும் செலவுகள். வருவாய் மற்றும் மூலதன நிதி வரவு ரூ.596.90 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி வரவு ரூ.315.08 கோடி, ஆரம்பக் கல்வி நிதி வரவு ரூ.33.35 கோடி என மொத்தம் வரவு ரூ.945.33 கோடி. வருவாய் மற்றும் மூலதன நிதி செலவு ரூ.568.89 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி செலவு ரூ.314.70 கோடி, ஆரம்பக் கல்வி நிதி செலவு ரூ.21.60 கோடி என மொத்தம் செலவு ரூ.905.19 கோடி.

வருவாய் மற்றும் மூலதன நிதி உபரி ரூ.28.01 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி உபரி ரூ.38 லட்சம், ஆரம்பக் கல்வி நிதி உபரி ரூ.11.75 கோடி என மொத்தம் உபரி ரூ.40.14 கோடி. வருவாய் நீதி வரவு ரூ.359.06 கோடி, செலவு ரூ.305.03 கோடி. மூலதன நிதி வரவு ரூ.237.84 கோடி, செலவு ரூ.263.86 கோடி. குடிநீர் மற்றும் வடிகால் நிதி வரவு ரூ.91.13 கோடி, செலவு ரூ.71.47 கோடி. குடிநீர் மற்றும் வடிகால் மற்றும் மூலதன நிதி வரவு ரூ.223.95 கோடி, செலவு ரூ.243.23 கோடி. ஆரம்பக் கல்வி நிதி வரவு ரூ.33.35 கோடி, செலவு ரூ.21.60 கோடி என மொத்த வரவு ரூ.945.33 கோடி, மொத்த செலவு ரூ.905.19 கோடி.

மாநகராட்சியின் மொத்த வருவாய்: மாநகராட்சியின் மொத்த வருமானம் ரூ.945.33 கோடி, சொந்த வருவாய் ரூ.207.53 கோடி, பிற துறையிடமிருந்து பெறப்படும் வருவாய் ரூ.17 கோடி, அரசின் மானியம் மற்றும் கடன் ரூ.720.80 கோடி. மொத்த செலவீனம்: ஊதியம் மற்றும் இதரவை ரூ.98.91 கோடி, நிர்வாக செலவுகள் ரூ.13.45 கோடி, இயக்க செலவுகள் ரூ.212.48 கோடி, நிதி செலவுகள் ரூ.29.95 கோடி, மூலதன செலவுகள் ரூ.503.34 கோடி.  2023-24ம் ஆண்டில் மாநகராட்சியில் திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம்: கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.62 கோடியில் சாலை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 497 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள், 80.13 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.31.93 கோடியில் சாலை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மண்டலம் 1ல் அனகாபுத்தூர் பகுதியில் தினசரி அங்காடி ரூ.1 கோடியே 27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற சாலைகள் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 471 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள், 78.615 கிலோமீட்டர் நீளத்தில் சாலை சீரமைப்பு பணிகள் ரூ.31.51 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் வெள்ள தடுப்பு திட்டம் கீழ் 12.471 கிலோமீட்டர் நீளத்திற்கு 13 மழைநீர் வடிகால்வாய் ரூ.37.59 கோடியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்இடி மின்விளக்குகளாக மாற்றிடும் பணிக்கு ரூ.54.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 41,000 எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மண்டலம் 3 மற்றும் 5ல் அறிவுசார் மையங்கள் ரூ.4 கோடியில் கட்டப்பட்டுள்ளது. மண்டலம் 4ல் பெருங்களத்தூர் பகுதியில் வணிக வளாகம் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ளது. மாநகாட்சிக்கு சொந்தமான 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.2.73 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தில் 18 பணிகள் ரூ.3.41 கோடியில் மேற்கொள்ளப்பட்டு தற்போது 12 பணிகள் முடிக்கப்பட்டும் மீதமுள்ள 6 பணிகள் நடைபெற்றும் வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 3 பயோமைனிங் பணிகள் ரூ.6.95 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.  பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தேவையான வாகன கொள்முதல் ரூ.10.64 கோடி, எரிவாயு தகனமேடை புனரமைத்தல் ரூ.1.08 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை பெயர் பலகை அமைத்திடும் பணிக்கு ரூ.5.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நகர சுகாதார வளாகங்கள், துணை சுகாதார வாளகங்கள் மற்றும் ஆய்வகம் கட்டுதல் என மொத்த 17 கட்டிடங்கள் ரூ.6.67 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 6 நீர்நிலைகள் மேம்படுத்துதல், 8 பூங்கா பணிகள் ரூ.9.18 கோடியில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநில நிதிக்குழு மான்யத்தின் கீழ் 4 பள்ளி கட்டிடங்கள் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் ரூ.2.80 கோடியில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பான், ஆழ்துளை கிணறு, பேருந்து நிழற்குடை, பொது விநியோக கடை, அங்கன்வாடி கட்டிடம், கண்காணிப்பு கேமரா மற்றும் நூலகம் என மொத்தம் 35 பணிகள் ரூ.3.48 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அங்கன்வாடி கட்டிடம், நூலகம் மற்றும் உயர் கோபுரமின்விளக்குகள் என மொத்தம் 21 பணிகள் ரூ.1.14 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 2024 -25ம் ஆண்டு மாநகராட்சியில் திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளின் விவரம்: ரூ.43.40 கோடியில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு சமர்பிக்கப்பட்டு, இப்பணிக்கு மாநகராட்சியின் பொது நிதியின் கீழ் ரூ.14 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 156 சாலைகள் 35.58 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டிற்கு தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். மாநில நிதிக்குழு மான்யத்தின் கீழ் 18 சாலைகள் 1.51 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் சாலையினை தார் சாலையாக மாற்றுதல் பணி ரூ.1.02 கோடி மதிபீட்டில் மண் சாலையினை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். 15வது நிதிக்குழு மான்யம் கீழ் 21 சாலைகள் 3.65 கிலோமீட்டர் நீளத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி ரூ.1.75 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் கீழ் ஆப்பூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் பணி ரூ.35.99 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. 15வது நிதிக்குழுமான்ய நிதி கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தேவையான வாகன மற்றும் இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்தல் பணிக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய மேம்பாலங்கள், பிரதான சாலைகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகள், பசுமை செடிகள் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைத்தல் பணிமேற்கொள்ள ரூ.5.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த ரூ.1575 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கான 103 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.

*திடக்கழிவு மேலாண்மை
தாம்பரம் மாநகராட்சி பகுதியுடன் புதியதாக இணைக்கப்படவுள்ள ஊராட்சி பகுதிகளில் ரூ.3 கோடியில் 5 இடங்களில் பசுமை உரக்குடில் மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

* பாதாள சாக்கடை
ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.2010 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை புனரமைப்பு செய்திட ரூ.86.76 கோடி மதிப்பீட்டிற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

* நீர்நிலைகளை மேம்படுத்துதல்
வீரராகவன் ஏரி பகுதியில் 3.50 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.5.97 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

* கடல்நீர் குடிநீராக்கும் திட்டம்
சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கு 23 எம்எல்டி குடிநீர் பெறுவதற்கு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. குடிநீர் வாரியத்திடமிருந்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 24.2.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் நெம்மேலியில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திலிருந்து தாம்பரம் மாநகராட்சியின் மண்டலம் 2 மற்றும் 3ல் குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, அஸ்தினாபுரம், நேரு நகர், ராதா நகர் பகுதிகளுக்கு தினசரி 5 எம்எல்டி குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம், உரிய குடிநீர் கட்டமைப்பு பிரதான குழாய் அமைக்கப்பட்டு சிட்லபாக்கம் பகுதிக்கு விரைவில் விரிவு படுத்தப்பட உள்ளது. பல்லாவரம் பகுதியில் முதற்கட்டமாக 24×7 முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் ரூ.18.80 கோடியில் செயல்படுத்தப்படும்.

The post தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் 2024 – 25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram Corporation ,Mayor ,Vasantakumari Kamalakannan ,Deputy ,Ko Kamaraj ,Akummeena ,D. Kamaraj ,S. Indran ,E. Joseph Annadurai ,V. Karunanidhi ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!