- விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள்
- திருவள்ளூர்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- விவசாயம் மற்றும்
- விவசாயிகள் நலத்துறை
- திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி
- டி. பிரபு சங்கர்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- ஏ ராஜ்குமார்
- தின மலர்
திருவள்ளூர், பிப். 29: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தி.சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜெ.மலர்விழி, வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகளிடம் 172 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 13 விவசாயிகளுக்கு ₹43 லட்சத்து 32 ஆயிரத்து 980 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நடப்பு சம்பா பருவ நெல் அறுவடைப்பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 62 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 4 இடங்களிலும் ஆக மொத்தம் 66 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டிடங்களில் மட்டுமே திறக்கப்பட்டு இதுவரை 7678 மெட்ரிக் டன் நெல் 1,102 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவ நெல் அறுவடை முடியும் தருவாயில் இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விடுபட்ட விவசாயிகள் அனைவரும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடம் கொடுக்காமல், இடிபிசி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் சன்னரக நெல் ₹2310க்கும், பொது ரக நெல் ₹2,265க்கும் விற்பனை செய்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-2024 கீழ் 2 விவசாயிகளுக்கு ₹3,980 மதிப்பிட்டில் தார்பாலின்களும், தோட்டக்கலைத்துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் பாரம்பரிய முறையில் காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கிய 2 விவசாயிக்கு விருதும் ஊக்கத் தொகையாக ₹25,000, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின மூலம் 4 விவசாயிக்கு ₹5 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனும், வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கலின் உப இயக்கம் திட்டத்தின் கீழ் ₹9 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் பவர் டில்லரும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 1 விவசாயிக்கு ₹28 லட்சம் மதிப்பில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியும் என மொத்தம் 13 விவசாயிகளுக்கு ₹43 லட்சத்து 32 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு அரவைப் பருவத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்கள் அரவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுநாள் வரையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1 லட்சத்து 40 ஆயித்து 170 மெட்ரிக் டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. ஆலையில் 24.11.2023 அன்று கரும்பு அரவை துவங்கப்பட்டு 15.02.2024 வரையில் சப்ளை செய்யப்பட்ட 1,19,473 மெ.டன்கள் கரும்பு சப்ளை செய்த 711 கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணையாக டன் ஒன்றுக்கு ₹2 ஆயிரம் ஆண்டுகளுக்கு வீதம் ₹23.89 கோடி கரும்புக் கிரையத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5 அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த அரைவைப் பருவத்தில் 9,290 டன்கள் கரும்பு அரைவை செய்யப்பட்டுள்ளன. என கலெக்டர் தெரிவித்தார்.
The post விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ₹43.32 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.