×

பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?

நன்றி குங்குமம் தோழி

“ப்ளூ ஸ்டார்” படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை வைத்து காதலை பதிவு செய்து வெற்றி பெற்றிருக்கிறார். கூடவே இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் பேசி அன்பையும் விதைத்திருக்கிறார். படத்தில் வருகிற பெண்கள் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்று வெகுவாக அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

“எல்லோரும் பீல்டிங் பண்ண… எனக்கு பேட்டிங் பண்ண ரொம்ப ஆசைடா…” என்று ஆனந்தி தனது தெத்துப்பல்லும், குட்டியான கோலிகுண்டு கண்களையும் உருட்டிக் கேட்கும் அந்தக் காட்சியும், மொத்த பார்வையாளனையும் அசைச்சுப் பார்க்கும். காரணம், பசங்களுக்கு கிரிக்கெட்டில் விருப்பம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு சூழலில் ஆள் இல்லாததால் வலுக்கட்டாயமாக பேட்டிங் பண்ணியிருப்பாங்க. ஆனால், பெண்களுக்கு? எவ்வளவு ஆசை இருந்தாலும் கிரவுண்டில் இறங்கி கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு கேள்விக்குறிதான்?

“எனக்கு பேட்ஸ்மேன், பவுலரைவிட இந்த ஆல்ரவுண்டர் தாண்டா ரொம்ப புடிக்கும்’’ என கிரிக்கெட் ரசிகையாக கதாநாயகியையும், பெண் கதாபாத்திரங்
களின் மொத்த நடிப்பையும் ரசனைக்குரியதாக காட்டியிருப்பது குறித்து இயக்குநரிடம் பேசியதில்…ஆனந்தி

கேரக்டருக்கு எப்படி கீர்த்தி பாண்டியனை யோசிச்சீங்க?

எனது நண்பர் மூலமாகவே கீர்த்தி எனக்கு அறிமுகம். நேரில் பார்த்ததுமே பக்கத்து வீடுகளில் நாம் பார்க்கும் சாதாரண பெண்ணைப் போலவே இயல்பாக இருந்தாங்க. நான்
கற்பனை செய்திருந்த ஆனந்தி கதாபாத்திரத்திற்கு கீர்த்தியின் முகம் அப்படியே பொருந்திப்போனது. எனது ஸ்கிரிப்டை கீர்த்தியிடம் கொடுத்து முதலில் படிக்கச் சொன்னேன். கதையும், கதையில் வருகிற ஆனந்தி கேரக்டரும் அவருக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. நானே இந்த கேரக்டரை பண்ணுகிறேன் என ஒத்துக்கொண்டார்.

அறிமுக இயக்குநராக அழுத்தமான நடிப்பை கீர்த்தியிடம் வாங்க முடியும் என நம்பினீர்களா?

இயல்பிலே கீர்த்தி தன்னம்பிக்கை நிறைந்த பொண்ணு. நடிப்பு தொடர்பான முறையான பயிற்சிகளை எடுத்தவர். திறமையான நடிகை. மேடை நாடகங்களிலும் நடிப்பவர். கீர்த்தியின் மேடை நாடகம் ஒன்றில் அவரது நடிப்பை பார்த்து அசந்துபோனேன். அந்த அளவுக்கு நடிப்புக்குள் சுலபமாகப் பொருந்திப் போகக்கூடியவர். பொலிடிக்கலாகவும் கீர்த்தி ஸ்ட்ராங்கான பொண்ணு. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர். படப்பிடிப்புத் தளத்திலும் புத்தகங்களைப் பற்றியும் நிறைய பேசுவார், விவாதிப்பார். அரக்கோணம் வட்டார மொழியை அழகாகப் பேசி சிறப்பாகவே நடித்துக் கொடுத்தார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு ஒத்திகை (rehearsal) வழங்கப்பட்டதால், நடிப்பை வாங்குவதில் பெரிதாக பிரச்னை எழவில்லை. ஆனந்தி-ரஞ்சித்தாகவே இருவரும் வாழ்ந்தார்கள்.

கீர்த்தி-அசோக் செல்வன் காதல் தெரிந்துதான் ஜோடியாக நடிக்க வைத்தீர்களா?

(சிரிக்கிறார்…) எனக்கு இவர்கள் காதல் சுத்தமாகத் தெரியாது. படப்பிடிப்புத் தளத்தில் ஆனந்தி-ரஞ்சித்தாகத்தான் இருவரையும் பார்த்தேன்.

ரஞ்சித் கேரக்டருக்கு முதலில் நடிகர் கவினையும், நடிகர் ஹரீஸ் கல்யாணையும்தான் யோசித்திருந்தேன். கீர்த்திதான் அசோக்செல்வனிடம் பேசிப்பார்க்கச் சொன்னார். எனக்கு அவரைப் பார்த்ததுமே பிடித்திருந்தது. காரணம், என் அண்ணன் ரஞ்சித் மாதிரியான தோற்றத்தில் அதே உயரத்தில் கேரக்டருக்கு பொருத்தமாய் இருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டிலும் அசோக் செல்வன் ஸ்டேட் லெவல் பிளேயர் என்பதால் அவரையே முடிவு செய்தேன். அவரும் ஸ்கிரிப்டை படித்துவிட்டு, ரஞ்சித் கேரக்டரில் நானே நடிக்கிறேன் என ஒத்துக்கொண்டார்.

கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டு திரைத்துறைக்குள் வந்தவர் அசோக் செல்வன். அதனால்தான் அந்தக் கேரக்டரில் ஒன்றிப்போனார் என நினைக்கிறேன்.

அரக்கோணம் கதை உண்மை சம்பவத்தின் தழுவலா?

இது முழுக்க முழுக்க என்னோட கனவு. இதில் வருகிற கதாபாத்திரங்கள் பலவும் எனது ஊரான அரக்கோணத்தில் இருப்பவர்களே. ஆனால் இதில் வருகிற பிரச்னைகள் எங்கள் ஊரில் கிடையாது. ஒரு கதை ஆசிரியராக கதையில் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறேன்.இதில் வரும் அம்மா கதாபாத்திரம் அப்படியே என் அம்மாதான். என் அம்மா பெயரும் சுசீலாதான். என் அம்மாவும் இப்படியேதான் பேசுவார். “படம் நல்லா ஓடீருச்சு, எல்லா ஊரு சர்ச்சுக்கும் காணிக்கை போடணும், வாடா”ன்னு போன் பண்ணி கூப்புடுறாங்க. என் அப்பாவும் பிள்ளைகள் விருப்பத்திற்கு தடை சொல்வதில்லை. நாங்கள் குடும்பமாக கிரிக்கெட் விளையாடுவோம். எங்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பா நிறையவே ஆதரவு தருவார்.

கதாநாயகியையும் கிரிக்கெட் விளையாட ஆசை இருப்பவராகக் காட்டியிருப்பது குறித்து..?

ஐந்து பெண்கள் சேர்ந்து நமது ஏரியா கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி நாம பார்க்குறோமா என்கிற கேள்விக்கான பதில்தான் ஆனந்தி கேரக்டர். பெண்களுக்கும் கிரிக்கெட் தெரியும். அவர்களும் பார்ப்பார்கள், ரசிப்பார்கள். ஆனால் இளைஞர்களைப்போல ஊரில் உள்ள கிரவுண்டில் இறங்கி சுதந்திரமாக அவர்களால் கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியாது.

இதில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை. ஏதோ ஒன்று அவர்களை தடுத்து வைக்குது.அதனால்தான் ஒரு பெண் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பவராக…
கிரிக்கெட்டின் நுணுக்கங்களை பேசுபவராக… கிரவுண்டில் இறங்கி விளையாட ஆசைப்படுபவராக… கூடவே கதாநாயகனையும் விளையாட்டில் ஊக்கப்படுத்துபவராக இருந்தால் எப்படி இருக்கும் என்கிற எனது ஆசைதான் ஆனந்தி கதாபாத்திரம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை? appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,Jayakumar ,Dinakaran ,
× RELATED புளிய மரங்கள் சொல்லும் கதை!