×

திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்

தென்னகமெங்கும் அமைந்துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை. இவை சதுரம் அல்லது வட்டவடிவிலுள்ளன. திருக்குளங்கள் விசாலமாக இருப்பதால், அன்பர்கள் இவற்றில் இறங்கி நீராடி மகிழ நாற்புறமும் படிகள் அமைத்துள்ளனர். கிணறுகளிலிருந்து நீரைக் குடங்களில் முகந்து நீராடுவதே வழக்கமாகும். எனவே இவற்றிற்குப்படிகள் அமைக்கப் படுவதில்லை.

அபூர்வமாகச் சில இடங்களில் கிணற்றின் அடிவரை எளிதில் இறங்கிச் சென்று நீராடும் வகையில் படிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை நடைபாவிக் கிணறுகள் என்று அழைக்கப் படுகின்றன. இந்தப் படிகளின் தொடக்கத்தில் பெரிய அளவில் இடபம், யானை, சிங்கம், முதலிய உருவங்களை அமைத்துள்ளனர். இத்திருவுருவங்களின் மார்பில் அமைக்கப்பட்டிருக்கும் வாயிலில் நுழைந்து கீழ் நோக்கிச் செல்லும் படிகள் வழியாக தீர்த்தத்தின் அடிப்பகுதி வரைசெல்லலாம்.

சிம்ம தீர்த்தங்கள் எனும் பெயர் கொண்ட தீர்த்தங்களின் நுழைவாயில் பெரிய சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. விரிஞ்சிபுரம் மார்க்கசகாயர் ஆலயம், குடியாத்தம் கருப்புலீசுவரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் சோழீசர் ஆலயம் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி ஆலயம் முதலிய ஆலயங்களில் சிங்கவடிவுடன் கூடிய நடை பாவிக்கிணறுகள் இருக்கின்றன.

* திருவண்ணாமலையில் கிரி சுற்றும் பாதையிலுள்ள சிறிய குளத்தின் படிகளின்மீது பெரிய சிங்க உருவம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். திருமுருகன் பூண்டியில் இடபத்தின் உட்சென்று நீராடும் வகையில் தீர்த்தம் உள்ளது. திருக்குளங்களாக விளங்கும் தீர்த்தங்களின் கரையிலும் திருவுருவங்களை அமைக்கும் மரபும் உள்ளது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம்
முதலிய தலங்களில் நந்தி தீர்த்தம் என்பதைக் குறிக்கும் வகையில் குளக்கரையில் நந்தியின் திருவுருவம் பெரிய மேடையில்
அமைக்கப்பட்டுள்ளது.

* காஞ்சிபுரம் உலகாணி தீர்த்தத்தின் படித்துறையில் காவல் தெய்வங்களாகப் பெரிய அளவிலான பூதன் பூதகி வடிவங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.

* மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் காவிரிக்கு நடுவேயுள்ள மண்டபத்தில் நந்தியின் உருவம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

* மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூரில் ஏரியின் மதகில் காவல் தெய்வங்களாக புருஷா மிருகங்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

தீர்த்தக் குளங்களின் நாலாபுறமும் மதில் அமைக்கப்பட்டு அவற்றின் மீது வரிசையாக நந்தியின் உருவங்களும் நான்கு முனைகளில் பூதவடிவங்களும் வாயிலின்மீது அதிகாரநந்தி வடிவங்களும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஜி.ராகவேந்திரன்

The post திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…