×

சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் சோகம் அலையில் சிக்கிய நண்பனை காப்பாற்ற சென்ற பெங்களூர் வாலிபர் உயிரிழப்பு

தவளக்குப்பம், பிப். 27: புதுவையில் சுற்றுலாவுக்கு வந்தபோது அலையில் சிக்கிய நண்பனை காப்பாற்ற சென்ற பெங்களூர் வாலிபர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூர் ராமபுரத்தைச் சேர்ந்த வாசுதேவ் மகன் விக்னேஷ் (25). அவரது தம்பி சஞ்சய் (20) மற்றும் நண்பர்கள் 7 பேர் கடந்த 23ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணமாக புறப்பட்டு மறுநாள் 24ம் தேதி காலை புதுச்சேரி வந்தனர். பிறகு தனியார் ஓட்டலில் தங்கி புதுச்சேரியை சுற்றி பார்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் மது குடித்துவிட்டு கடற்கரையில் குளித்தனர். மாலை 4 மணியளவில் சற்று தொலைவில் 3 நபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் காப்பாற்றுங்கள் என்று அலறியபடி கத்தினார்.

சஞ்சய், கோபி, கிஷோர் ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர். அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்து பார்த்தபோது சஞ்சயை காணவில்லை. சிறிது நேரத்தில் கடலின் தூரத்தில் கையை தூக்கி காட்டியபடி சஞ்சய் உயிருக்கு போராடி தத்தளித்தார். அங்கிருந்த உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று கடல் நீரில் மூழ்கிய அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். அப்போது சுயநினைவின்றி இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது அண்ணன் விக்னேஷ் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் சோகம் அலையில் சிக்கிய நண்பனை காப்பாற்ற சென்ற பெங்களூர் வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : wave ,Davalkuppam ,Puduwai ,Vasudev ,Vignesh ,Bangalore Ramapuram, Karnataka ,Sanjay ,
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு