×

தனக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் உதயநிதி மனு: இபிஎஸ் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடநாடு வழக்கில் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, எதனடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இ.வி.சந்துரு, இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை. பொது வாழ்வில் இருக்கும் நபர் ஒருவர் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபர் பேசியதில் தவறில்லை. பொது வெளியில் நடந்ததை பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழமிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென்று கோரினார். இதனை ஏற்றுக் இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தனக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் உதயநிதி மனு: இபிஎஸ் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,EPS ,High Court ,Chennai ,Madras High Court ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Udayanidhi Stalin ,Tamil ,Nadu ,Sports ,Udhayanidhi Stalin ,Udhayanidhi ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...