×

வரலாற்று சிறப்புமிக்க வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வானர அரசன் வாலி, இவ்வாலய சிவ பெருமானை வணங்கி எதிராளியின் பலத்தில் பாதி பல வரம் பெற்தாக நம்பப்படுகிறது. வாலியால் வணங்கப்பட்டதால் இறைவன் வாலீஸ்வரர் எனவும், இறைவி வாலாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர். வாலி, சிவலிங்கத்தை வணங்கும் புடைப்புச்சிற்பத்தை முன்மண்டப தூண் மற்றும் பல இடங் களில் காணலாம்.

பொ.யு.885-ல் ஆதித்த சோழன் காலத்தில் கற்றளியாக புனரமைக்கப்பட்டது. கோயிலின் ஏழு நிலை ராஜ கோபுரமும், இடது புறத்தில் உள்ள சிற்பங்கள் நிறைந்த மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப் பட்டது. ராஜகோபுரத்தினுள் நுழைந்தவுடன் வலப்புறம் அழகுற வடிவமைக்கப்பட்ட திருக்குளம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் பிள்ளையார், மகாவிஷ்ணு உள்ளனர். கருவறையின் இரு புறமும் அச்சுறுத்தும் தோற்றத்தில் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாலய திருச்சுற்றின் தென் திசையில், விஜயநகர ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சுமார் ஏழரை அடி உயர சரவணப்பெருமாள் (தண்டபாணி) சிலையை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் பாடியுள்ளார். மூலவரின் எதிரே அடுத்தடுத்து பால நந்தி, யௌவன நந்தி, விருத்த நந்தி என்றழைக்கப்படுகின்ற மூன்று நந்திகள் உள்ளது மற்றொரு சிறப்பாகும்.

கல்வெட்டுச் சிறப்புகள்

சேர பெருமாள் இளவரசி கோ கிழான் அடிகள் மற்றும் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) ஆகியோரின் மகனான இராஜாதித்தியனின் கல்வெட்டு வாலிகண்டபுரத்தில் உள்ளது. வாலீஸ்வரரை வணங்கி பிள்ளைப்பேறு பெற்ற சிற்றரசர் குறித்த கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழரின் ஆட்சிக்காலத்தில் (பொ.யு.1207) வெட்டப்பட்டுள்ளது.பின்னர், 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி போர்ப்பாசறையாக இருந்தது. அப்போது இவ்வாலயத்தின் சில சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: வாலீஸ்வரர் கோயில், வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம்.

காலம்: பொ.யு.885-ல் ஆதித்த சோழன் காலத்தில் கற்றளியாக புனரமைக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் பல சோழ மன்னர்களால் (10-12ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்டு, விஜயநகர ஆட்சிக்காலத்தில் (15-ஆம் நூற்றாண்டு) ஏழு நிலை ராஜகோபுரம், மண்டபங்களுடன் தற்போது நாம் காணும் வடிவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post வரலாற்று சிறப்புமிக்க வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Valikandhapuram ,Vali ,Lord ,Shiva ,Valiswarar ,Valambigai ,Valikandapuram Valeeswarar Temple ,
× RELATED சிறப்பு தொழுகை நடைபெற தயார்நிலையில்...