×

அறவோன் சொல் கேள்!

பகுதி – 2

அவள் இங்கு உள்ள ஒவ்வொரு உயிரையும் மாய்த்து அவர்கள் உடலைப் பிய்த்துத் தின்று விடுவாள். ராமா! இதை நான் சொல்லும்போது நீ என்னைப் பார்ப்பதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது. எப்படி இத்தனை பெரிய ராட்சசி என்னை மட்டும் விட்டு வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறாயா? காரணம் நான் தவம் செய்து தவம் செய்து மெலிந்துவிட்டேன்.
என்னிடம் தின்பதற்கு கொஞ்சம் எலும்புதான் இருக்கிறது. மற்றபடி எந்த சதைப்பற்றும் என்னிடம் இல்லை. இதுகூட காரணமாக இருக்கலாம்.”

விஸ்வாமித்திரர் இப்படி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பெருத்த பூகம்பம் வந்தது போன்ற ஒரு அதிர்வு பூமியில் தோன்றியது. தாடகை பெருத்த சத்தத்துடன் அவர்கள் எதிரில் நின்றாள். விஸ்வாமித்திரர், ராமனிடம், “இவள் பெண்ணாக இருந்த போதும் இவளை நீ கொல்ல வேண்டும் என்று நான் சொல்கிறேன். ராமா! நீ கூட நினைக்கலாம், ஒரு அந்தணன் இதுபோன்ற ஒரு செயலைச் செய்யத் தூண்டலாமா? ஒருவேளை நான் முன்பு ஒரு காலத்தில் சத்ரியனாக இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்யும்பொழுது இதுபோன்று ஒருவரைக் கொல்வது என்பது போரின் இலக்கணமாக இருந்திருக்க கூடும். அதனால், இப்படி நான் சொல்கிறேனோ என்று நீ நினைக்காதே. இவளை நான் கொல்லச் சொல்வது என்னுடைய தனிப்பட்ட கோபத்தினாலோ அல்லது ஆத்திரத்தினாலோ அல்ல. இந்த உலகம் நன்மையுறுவதற்கு இதுதான் ஒரு அறம் சார்ந்த செயலாக இருக்கக்கூடும். அந்தணர் என்பவர் அறவோர். நான் ஒரு பிரம்மரிஷியாக இதைச் சொல்கிறேன்.”

“என்னுடைய மரியாதைக்குரிய பிரம்மரிஷியே! மீண்டும் உங்களை வணங்குகிறேன் நீங்கள் இவ்வளவு ஏன் எனக்கு விளக்க வேண்டும்? நீங்கள் சொல்வது வேதவாக்கைவிட மேன்மையானது என்பதை நான் அறியாதவனா? நீங்கள் எங்களின் ஆச்சாரியன்! நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதாதா? அதைக் கட்டளையாக ஏற்று அதைச் செய்து முடிக்க மாட்டேனா? இவ்வளவு விளக்கங்கள் தேவைதானா? நான்கு வேதங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி கூற, அதற்கு நேர் எதிர்மறையாக, என்னுடைய ஆச்சாரியரான நீங்கள் ஒன்று சொல்லக்கூடுமானால் எனக்கு நான்கு வேதங்களையும்விட மேன்மையானது உங்களின் ஒரு சொல் அல்லவா.

உங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செய்து முடிப்பது என்னுடைய பணி அல்லவா? எத்தனை சாத்திரங்களும் தர்மங்களும் எதைக் குறிப்பிட்டாலும் ஆச்சாரியன் ஒரு செயலைக் குறிப்பிட்டுச் சொல்லும் பொழுது அதை செய்யத்தான் வேண்டும் ஏனெனில், ஆச்சாரியன் சொல்வதைச் செய்வதுதான் அந்த ஆண்டவனுக்கே பிடித்த செயல்.இதோ உங்கள் கட்டளையை ஏற்று அந்த தாடகையை இப்பொழுதே கொல்கிறேன்.’’ராமன் வில்லெடுத்தான் விரல் அழுத்தினான் நாணிழுத்தான் அம்பானது அவனது வில்லிலிருந்து புறப்பட்டது அந்த அம்பானது ஒரு முனிவர் இட்ட சாபம் போன்று விரைந்து சென்றது. தாடகையின் மார்பைத் துளைத்தது. அவள் முதுகில் இருந்து வெளிப்பட்டது. அந்த அம்பு வெளிப்பட்ட விதம் நல்லவர்களால் கூறப்பட்ட அறிவுரை எப்படி தீயவர்களுக்கு பயன் அளிக்காமல் வெளிப்படுமோ அதுபோன்று வெளிப்பட்டது.

பெருத்த சத்தத்துடன் தாடகை நிலத்தில் வீழ்ந்தாள். தேவர்கள் வானில் இருந்து மலர்கள் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சற்று நேரத்திற்கு முன்பு வரை பாலைவனமாகத் தகித்த அந்த நிலம் இப்பொழுது குளிர்ந்து போய் ஒரு சோலைவனமாகத் திகழ ஆரம்பித்தது.தேவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்த விஸ்வாமித்திரரிடம் ராமனுக்கு அளிக்குமாறு படைக்கலன்களை அளித்தார்கள். ஒவ்வொரு அஸ்திரத்திற்கும் உரிய தேவர்கள் ராமன் அருகில் வந்து வணங்கி அதற்கு உண்டான மந்திரத்தைச் சொல்லி வாழ்த்தினார்கள். அப்பொழுது அவர்கள், “நாங்கள் என்றும் உன்னுடன் இருப்போம் உன்னுடைய இளவல் இலக்குவன் போல உன்னை விட்டு இமைப்பொழுதும் விலகாமல் உன்னுடைய கட்டளையை ஏற்று எங்கள் பணியைச் சிறப்புடன் செய்வோம்.” என்று உறுதி அளித்தார்கள்.

தாடகை வதம் முடிந்ததும் விஸ்வாமித்திரர் இருவரையும் அருகே உள்ள சித்தாஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த ஆசிரமத்தின் பெருமையைப் பற்றி விஸ்வாமித்திரர் குறிப்பிடுகையில் “இதோ இந்த வேள்வி நடக்கும் இடத்தில்தான் வாமனர் யாகம் புரிந்தார். காசியப முனிவரும் இங்குதான் அருந்தவம் புரிந்தார். ஒரு கற்புடைய பெண் எப்படி தன்னுடைய சிந்தனையில் தூய்மையாக இருப்பாளோ அது போன்றது தான் இந்த ஆசிரமம். இங்கே நாங்கள் நடத்த இருக்கும் வேள்விக்கு நீங்கள் இருவரும் துணையாக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

விஸ்வாமித்திரரும் மற்ற முனிவர்களும் வேள்வியைச் செய்ய துவங்கினார்கள். ஒவ்வொரு நாளும் அந்த வேள்வியை இரவும் பகலும் கண் அயராமல் ராமனும் இலக்குவனும் காத்து வந்தார்கள். ஒரு கண்ணை எப்படி இரண்டு இமைகள் காக்கின்றனவோ அது போன்று இருந்தது அவர்களது செயல். மேல் இமை ராமனை ஒத்து இருந்தது. கீழ் இமை இலக்குவனை ஒத்து இருந்தது. முதல் நாள் துவங்கி ஐந்து நாட்கள் எந்த ஒரு இடையூறும் இன்றி நடந்தேறியது. ஆறாம் நாள் விஸ்வாமித்திரர் வேள்வியின் இறுதிக் கட்டமான பூர்ணாஹுதியை நடத்தத் துவங்கிய தருணம் அது. வானத்திலிருந்து இரண்டு அசுரர்கள் சுபாகு மாரீசன் கை முழுவதும் மாமிசத்தையும் அமங்கலமான பொருட்களையும் ஏந்தி வந்து தீயில் எறிவதற்குத் தயாரானார்கள்.

இதைக் கண்ணுற்ற ராமன் தன்னுடைய வில்லிலிருந்து இடைவிடாது சரங்களை எய்தான். அவன் எய்த அம்புகள் அனைத்தும் அந்த சித்ராஸ்ரமம் முழுமையுமே ஒரு அரணாக ஒரு கூண்டுபோல காத்தது. அதோடு நின்று விடாமல் ராமன் தாடகையின் மைந்தர்களான அந்த இரண்டு அரக்கர்களையும் எதிர்க்கத் துவங்கினான். ராமன் விட்ட ஒரு அம்பு சுபாஹுவை யம பட்டணத்திலேயே கொண்டு தள்ளியது. அவன் மாண்டு விழுந்தான். ராமன் விட்ட மற்றொரு அம்பு மாரீசனை தொலைவில் உள்ள ஒரு கடலில் பொம்மையைப் போல வீசியது.

சித்தாஸ்ரமத்தில் கூடியிருந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டானது. விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி, “நீ செய்த இந்தச் செயல் மிகுந்த சந்தோஷத்தை எனக்கு அளிக்கிறது. இது உன்னைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண செயல்தான். ஏனென்றால் நீ இந்த உலகத்தையே காத்து ரட்சிக்கப் பிறந்தவன். நீ இன்னும் பல வீரச்செயல்கள் புரிய வேண்டி யிருக்கிறது. இதைவிட பெரிய செயல் ஒன்று இருக்கிறது. அச்செயல் ஒன்றும் அரிதானதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக அறவோன் சொல் கேட்டு நீ நடந்தது என்றுமே போற்றுதலுக்குரியது.”விஸ்வாமித்திரர் உடன் இருவரும் மிதிலையை நோக்கி பயணத்தைத் துவங்கினார்கள்.

கோதண்டராமன்

The post அறவோன் சொல் கேள்! appeared first on Dinakaran.

Tags : Aravon ,Rama ,
× RELATED பாலகிருஷ்ணா மகன் ஹீரோவாக அறிமுகம்