×

விளாம்பழ நிவேதனம்

பாரததேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது. இதன் காய்கள் நடுத்தரப் பந்து அளவிலும் கனத்த ஓட்டுடன் கூடியதாக இருக்கும். பழத்துள் விதைகளுடன் புளிப்புச் சுவையும் இனிப்பும் கலந்த சதைப்பற்றும் இருக்கும். விநாயகருக்குப் படைக்கப்படும் பழ வரிசைகளில் விளாம்பழமும் ஒன்றாகும். முல்லை நிலமரமான இதனை ஆயர்கள் பெரிதும் போற்றுவர். தயிரானது கெடாமல் விரைவில் அதிகம் புளிப்பு ஏறாமல் இருக்க அதில் விளாம் பழங்களை இட்டு வைப்பர்.அந்தப் பழங்கள் தயிரில் உள்ள புளிப்புச் சுவையை ஏற்றுப் புதிய சுவையை உடையதாகி விடும். ஆயர்களின் அன்றாடவாழ்வில் விளாம்பழம் இடம் பெற்றிருந்தது. ஆயர்குலப் பிள்ளைகளின் விளாம்பழ ஆசையை வைத்து கம்சன் கண்ணனைக் கொல்ல முயன்றது ஸ்ரீமத்பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை பின் வந்த இலக்கியங்களும் குறித்துள்ளன. தேவாரம், திவ்யப் பிரபந்தங் களிலும் விளாமரம் தொடர்பான இந்த வரலாறு உள்ளது.கம்சன் கண்ணன் பிறந்தது முதலே அவனைக் கொல்ல அடுத்தடுத்து பேய்ச்சி, சகடாசுரன், காக்காசுரன் போன்றவர்களை அனுப்பினான். அவர்கள் அனைவரையும் கண்ணன் விளையாட்டாகவே கொன்றான்.

இவ்வகையில் கபித்தன், வத்சன் என்னும் இருவரை அனுப்பினான். கபித்தன், பெரிய காய்த்துப் பழுத்து குலுங்கும் விளாமரமாக நிற்பதென்றும் வத்சன் அழகியகன்றுக் குட்டியாகச் சென்று துள்ளியபடி கண்ணனையும் அவனது நண்பர்களையும் விளாமரத்திற்கு அடியில் அழைத்து வருதல் அப்படி வருபவர்கள் மீது மரமாக நிற்பவன் வீழ்ந்து அழுத்திக் கூட்டமாகக் கொல்வது என்றும் திட்டமிட்டனர்.அதன்படியே கபித்தன் பழுத்துக் குலுங்கும் ஏராளமாகப் காய்களுடன் கூடிய விளாமரமாக மாறி காட்டில் நின்றான். வத்சன் அழகிய கன்றுக்குட்டியாக மாறி துள்ளித் திரிந்தான்.புதிய அழகிய கன்றுக்குட்டியைக் கண்ட கோபாலச் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு பிடித்தனர். அது அங்குமிங்கம் துள்ளிக் குதித்தது. அதன் அழகும் துள்ளல் ஆட்டமும் எல்லோரையும் கவர்ந்தது. மேலும் பழுத்துக் குலுங்கும் விளாமரத்தைக் கண்டு வியந்தனர். கண்ணனிடம் ‘‘கண்ணா அந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்துத் தருக’’ என்று வேண்டினர். கண்ணன், பலராமனிடம் ‘‘அண்ணா இந்த விளாமரமும் கன்றுக்குட்டியும் புதியதாக இருக்கின்றன. இதில் ஏதோ சூட்சியிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது’’ என்றான். பலராமனும் ‘‘அப்படியே இருக்கலாம்’’ என்றார்.

கண்ணன் தன் ஞானத்தால் அரக்கர்களின் மாயத்தை உணர்ந்து கொண்டான் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.கன்றுக் குட்டியான வத்சன் கண்ணன் முன்னே வந்து துள்ளிக் குதித்தான். கண்ணன் அந்தக் கன்றைப் பிடிக்கச் சென்றான். அவன் கண்ணன் பிடிக்கு அகப்படாமல் துள்ளிக் குதித்தவாறே விளாமரத்தை நோக்கி ஓடினான். கண்ணன் தொடர்ந்தான். மரத்தை நெருங்கும் சமயத்தில் கண்ணன் கன்றின் பின்னங்கால்களைப் பிடித்தான். பின்னர் தலைக்கு மேல்தூக்கி கரகரவென்று சுழற்றினான். பின்னர் மரத்தை நெருங்கி அந்தக் குட்டியால் விளாமரத்தை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஐந்தாறு அடிகள் அடித்திருப்பான். அரக்கர் இருவரும் ரத்தம் கக்கியவாறே சுய உருவத்துடன் வெளிப்பட்டு மாண்டனர். அதைக் கண்டு எல்லோரும் திகைத்தனர். வியந்து ஆரவாரம் செய்தனர்.இந்தக் கதையின் மூலம் யாதவச் சிறுவர்களுக்கு விளாம்பழத்தின் மீதுள்ள விருப்பத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி கன்று வடிவான அசுரனைக் கொண்டு விளாமரம் வடிவுடன் நின்ற அசுரனைக் கொன்றதை அனேக இலக்கியங்கள் தனிச்சிறப்புடன் போற்றி மகிழ்கின்றன. திவ்யப் பிரபந்தத்தில் அனேக இடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.தேவாரத்தில் விளவார்பட நூறிய வேதக்கண்ணன் என்று திருஞானசம்பந்தரும் வில்லி பாரதத்தில் கன்று கொடுவிளா எறிந்த கண்ணன் என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.

நாகலட்சுமி

 

The post விளாம்பழ நிவேதனம் appeared first on Dinakaran.

Tags : India ,Vinayakar ,
× RELATED விநாயகருக்கு சொர்ணக் கொம்பு காணிக்கை!