×

முத்துக்கள் முப்பது-மகா பாவங்களையும் போக்கும் மாசி மகம்

1. முன்னுரை

காலங்கள் பருவங்களால் உண்டானது. ஒரு ஆண்டுக்கு 6 பருவங்கள் அதிலே வேனில் காலம் நான்கு மாதம். கார்காலம் இரண்டு மாதம். கூதிர் காலம் இரண்டு மாதம். பனிக்காலம் நான்கு மாதம். இந்தக் காலங்களை இரண்டு பிரிவாகப் பிரித்து வேனில் காலத்தை இளவேனில் முதுவேனில் என்று சொல்வது போல, பனிக்காலத்தை முன் பனிக்காலம், பின்பனிக் காலம் என்று அழைப்பார்கள். அதிலே பின் பனிக் காலம் மாசி மாதமும் பங்குனி மாதமும்.

இதை வடமொழியிலே சிசிர ருது என்று அழைப்பார்கள். மாசி மாதத்தில் மாசி மகம் விசேஷம். இது தவிர மற்ற திரு விழாக்களும் உற்சவாதிகளும் சிறப்பாக நடக்கும். மாசி மாதத்தின் சிறப்பையும், மாசி மகத்தின் சிறப்பையும் முப்பது முத்துக்களாகக் காண்போம்.

2. மாசி மாத பெயர்

மாசி என்பது கும்ப ராசியில் சூரியன் பிரவேசித்து நிற்கும் மாதம். கும்ப ராசி என்பது காற்று ராசி. காலச் சக்கரத்தின் 11-வது ராசி. சனிக்கு உரிய வீடு கும்பம். அங்கே சனியின் தந்தையான சூரிய பகவான் உள் நுழைந்து இருக்கும் காலம்தான் மாசி மாதம். முதலில் இந்த பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம். சாந்த்ரமான முறை என்பது சந்திரனை அடிப்படை யாகக் கொண்டது. மாதங்களின் பெயரை சாந்த்ரமான ரீதியில்தான் அமைத்திருக்கிறார்கள்.

அந்த மாத பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் நிகழ்கிறதோ அதை வைத்து மாதங்களின் பெயரை நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மக நட்சத்திரத்தில், சிம்ம ராசியில் சந்திரன் பிரவேசிக்க, அதன் நேர் ராசியில் அதாவது கும்ப ராசியில் சூரியன் இருக்க பௌர்ணமி ஏற்படும். இந்த பௌர்ணமி மக நட்சத்திரத்தில் ஏற்படுவதால் இதற்கு மாகம் என்று பெயர். அது பிறகு மாசி மாதமாக மாறியது.

3. புண்ணிய நீராடி

“ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’’.
– என்றாள்

இது கம்பராமாயணப் பாடல். ராமனை காட்டுக்குச் சென்று 14 வருடங்கள் தவம் செய்து வா என்கிறாள் கைகேயி. தவத்தின் அங்கமாக ஆங்காங்கே உள்ள புண்ணிய நதிகளில் நீராடி வா என்கிறாள். ஆக, நதிகளில் நீராடுவது புண்ணியம். அதிலும் மாசி மகத்தில் நீராடுவது பெரும் புண்ணியம். அன்றைய தினம் சகல தீர்த்தங்களிலும் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகின்றது. மாசி மகத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதும் புண்ணிய நதிகளில் நீராடுவதும் பெரும் புண்ணியமாகக்
கருதப்படுகிறது.

4. மாசி, மகம் பெருமையை வசிஷ்டரிடம் கேள்

மாசி மகத்தின் சிறப்பு குறித்து ஒரு கதை உண்டு. இதனை சூத புராணிகர் முனிவர்களுக்குக் கூறுகின்றார். ஒருமுறை திலீப மகாராஜன் வேட்டை யாடுவதற்கு காட்டுக்குச் சென்றான். அவன் நிறைய நேரம் அங்கு செலவழித்தான். களைத்துப் போய், விடியல் காலையிலே நகரத்திற்குத் திரும்பினான். அப்பொழுது வழியில் வ்ருத்த ஹாரித முனிவரை பார்த்தான். அவர், “இன்றைக்கு மாசி மகமாயிற்றே, புனித நதியில் நீராட வேண்டிய நேரம் ஆயிற்றே.. நீ அதை விட்டுவிட்டு என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டவுடனே திலீபன் சொன்னான்.

“எனக்கு மாசி மகத்தின் பெருமை தெரியாது. அதனால் நான் வேட்டையாடச் சென்றுவிட்டேன்’’ என்று சொல்ல அப்பொழுது முனிவர் “அரசே, உன்னுடைய குல குருவான வசிஷ்டரிடம் போய்க் கேள்; அவர் அந்தப் பெருமையைச் சொல்லுவார்’’ என்று மாசி மக ஸ்நானத்திற்குக் கிளம்பிவிட்டார்.

5. குரூரமான உருவத்தை அழகாக மாற்றிய மாசி மகம்

அழகாக மாற்றிய மாசி மகம்மகாராஜா திலீபன் புலம்பினான். நமக்கு ஏன் வசிஷ்டர் மாசி மகத்தின் பெருமையைச் சொல்லவில்லை என்று குழம்பி வசிஷ்டரிடம் போய்க் கேட்டான். அப்பொழுது அவர் மாசி மகத்தின் பெருமைகளை சாஸ்திர ரீதியாக எடுத்துரைத்தார். மாசி மகம் அன்று விடியற்காலையிலே பகவானை நினைத்து நீராடுவதன் மூலமாக அதுவரை செய்த அத்தனை பாவங்களும் போய்விடும் என்றார். அதோடு குரு தபஸ் என்ற மகாராஜாவின் கதையையும் சொன்னார்.

குரு தபஸ் பலவிதமான பாவங்களைச் செய்து கர்ம வினையால் குரூரமான உருவத்தை அடைந்தான். அவன் எத்தனையோ பிராயச்சித்தங்கள் செய்தும் அந்த தோஷத்தை போக்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் மாசி மகம் விரதமிருந்து, காலையில் சுவாமி தீர்த்தவாரியின் போது, ஸ்நானம் செய்து, நாராயணனை பூஜித்தான். பாவங்களைப் போக்கிக் கொண்டு அழகான உருவத்தை அடைந்தான் என்றார் வசிஷ்டர். இதைக் கேட்டவுடன் திலீப மகாராஜா மாசி மக உற்சவத்தை மிகப் பெரிதாக நடத்தியதோடு தானும் நீராடி, ஐஸ்வரியங்களையும் கீர்த்தியையும் பெற்றான்.

6. தத்தாத்ரேயர் சொன்ன மாசி மக மகிமை

ஒருமுறை அரிச்சந்திர மஹாராஜா தத்தாத்ரேயரைச் சந்தித்தான். ஒரு மனிதன் செய்ய வேண்டிய பல்வேறு கிரியைகளைப் பற்றி சாஸ்திர ரீதியாக எடுத்துரைத்தார் தத்தாத்ரேயர். அதிலே புனித நதிகளில் நீராடு வதன் மகத்துவத்தையும், புண்ணிய தினங்களில் நீராடுவதன் மகத் துவத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். அப்பொழுது குறுக்கிட்ட அரிச் சந்திரன், “புனித நீராடலில் தலை சிறந்தது எது?’’ என்று கேட்ட பொழுது, “மாசி மகம் விசேஷம்’’ என்று தத்தாத்ரேயர் சொன்னார். அதாவது மாசி மாதத்தில் மக நட்சத்திரமன்று, சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டிய ஸ்நானம் தலை சிறந்தது என்றார். அது குறைவில்லாத நிறைந்த செல்வத்தையும் உயர்ந்த வாழ்க்கையையும் தரும் என்பது தத்தாத்ரேயர் வாக்கு.

7. தேவ மாதர்களும் கொண்டாடும் மாசி மகம்

இப்படி பல புராணக் கதைகள் மாசி மகத்தின் மகத்துவத்தைப் பற்றி உண்டு. தேவ உலகத்தில் உள்ள ஒரு பெண் காஞ்சனமாலை. அவள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் அன்று பூலோகத்தில் இறங்கி பிரயாகையில் நீராடி விட்டுச் செல்வாள். ஒருமுறை அவள் மாசி மக நீராடிவிட்டு, கைலாய மலை சென்று, அங்கு ஒரு பூங்கொடிக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவள் அருகிலே ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருந்தான். காஞ்சன மாலை “நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டவுடன், அந்த இளைஞன் பேசினான்.

“அம்மா, நான் ஒரு ராட்சசன். நீ நீராடி விட்டு வரும் பொழுது உன்னுடைய ஆடையில் இருந்து ஒரு சொட்டு நீர் என் மீது விழுந்தது. என்னுடைய ராட்சச உருவம் மாறிவிட்டது’’ என்று சொன்னவுடன், “நீ சொல்வது உண்மைதான். நான் பல காலமாக மாசி மகம் அன்று பூமிக்கு வந்து பிரயாகையில் நீராடி வருகின்றேன். அதன் மகிமைதான் உனது ராட்சச உருவத்தைப் போக்கி நல்ல உருவத்தைத் தந்தது என்றாள். தன்னுடைய ஆடையை பிழிந்து அந்த நீரால் அரக்கனுக்கு புண்ணிய பலனைத் தர, அவன் உயர்ந்த பிறவியை அடைந்தான்.

8. எல்லா கோயில்களிலும் தீர்த்தவாரி

இப்படி மாசி மகத்தின் பெருமை பற்பல புராண இதிகாசங்களில் சொல்லப் பட்டிருக்கின்றது. அன்றைய தினம் எல்லா திருக்கோயில்களிலும் 10 நாள் இறைவனுக்கு பெருவிழா நடத்துவார்கள். விழா நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரி உற்சவம் என்பது பெருமாள் கோயில்களில் மட்டும் நடைபெறுவது அல்ல; சிவாலயங்களிலும் நடைபெறும். முருகன் ஆலயங்களிலும் நடைபெறும்.

அம்மன் ஆலயங்களிலும் நடைபெறும். காரணம் இறைவன் தீர்த்த வடிவாக இருக்கின்றான். மாசி மகம் திருநாளன்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய பன்னிரெண்டு சிவன் கோயில்களில் இருந்து உத்ஸவ மூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளுவார்கள். அப்போது கோயிலின் அஸ்திர தேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெறும். அஸ்திர தேவர்கள் மகாமகக் குளத்தில் நீராடிய பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்வார்கள்.

9. நீரும் இறைவனும்

மாசி மாதம் மகநட்சத்திர நன்னாளில் திருக்கோயில்களில் இறைவன் புனித நீர் நிலைகளில் நீராடல் செய்வதை திருமயிலாப்பூர் கபாலீச்சரத்தில் எழும்பைப் பெண்ணாக்கப் பாடிய பூம்பாவைப் பதிகத்தில்

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’’
என்று மாசி மாத மக நன்னாளில் கடலாட்டு விழா நடை பெறுவதைப் குறிப்பிடுகின்றார்.

இறைவன் இந்த உலகத்தைப் படைத்தான். காத்தான். கடைசியில் இந்த உலகத்தை லயம் செய்கின்றான். இந்த உலகத்தை படைக்கும் பொழுது முதன் முதலில் அவன் படைத்தது நீரைத் தான். அதனால்தான் விஞ்ஞானிகள் ஒரு உலகம் வாழத் தகுதியாக இருக்குமா இல்லையா என்று ஆராய்கின்ற பொழுது அங்கே நீர் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். நீரில் இருந்து தோன்றிய உலகம், நீரினால் வாழ்ந்து நீரிலேயே லயப்படுகிறது.

அதனால்தான் உலகத்தில் கடைசி காலத்தை பிரளய காலம் என்று சொன்னார்கள். இறைவன் மாறாதவன். நீர் அமைப்பும் மாறாதது. இறைவனின் குணங்களை அறிய முடியாது.தண்ணீரும் அப்படியே… ஒரு சொட்டு தண்ணீரில் பல கோடி மூலக்கூறுகள் உள்ளன. நியூ சயன்டிஸ்ட் (New Scientist) என்ற வார இதழ், “இந்தப் பூமியில் தண்ணீரைப் பற்றி தெரியாத மனிதரே இருக்க முடியாது. அதே தண்ணீரின் மர்மங்கள் எல்லாம் தெரிந்த மனிதரும் இருக்க முடியாது” என்று கூறியுள்ளது.

10. இறைவன் தீர்த்த ரூபி

பகவான் தீர்த்த ரூபியாக இருக்கின்றான் அவனை தீர்த்தன் என்றே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடுகின்றார்கள்.
“தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர்
சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும்
வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து
நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே’’.

தீர்த்தம் என்பதற்கு தூய்மை, கடவுள், குரு என்று பல பொருள்கள் உண்டு. இந்தப் பாசுரத்தில் பகவானை தீர்த்தன் என்றே போற்றுகிறார். தீர்த்தமாவது, தான் பரிசுத்தமாக இருப்பதோடு, தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராகும்படி செய்யும். அதைப் போலத்தான் பகவானும் என்பது பாசுரக் கருத்து.

11. நீர் நிலைகளுக்கு தெய்வ சம்பந்தம் தரும் நாள் மாசி மகம்

“புறத்தூய்மை நீரால் அமையும்; அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்” என்பது வள்ளுவம். தீர்த்தமானது நம்முடைய உடம்பின் அழுக்குகளைப் போக்குகின்றது. அதைப்போல தீர்த்தவாரி உற்சவம் என்பது மன அழுக்கை போக்கி, இறைவன் உள்ளத்தில் இருப்பதை உணர வைக்கின்றது. அதனால்தான் நம்முடைய சமய மரபில் நதியையும் நீரையும் இறை வனாகவே கருதினார்கள். ஆறு, குளம், கடல், ஏரி போன்ற நீர் நிலையை அசுத்தப்படுத்துவதை தோஷமாகக் கருதினார்கள். தண்ணீரை அசுத்தப் படுத்தினால் அது தீராத பாவத்தைத் தரும் என்று சொல்லி வைத்தார்கள். மாசி மகத்தன்று எல்லா தெய்வங்களும் நீர்நிலைக்கு வந்து தீர்த்தவாரி கொடுப்பதால் தீர்த்தங்களுக்கு தெய்வ சம்பந்தம் ஏற்பட்டு புனிதம் ஆகிறது.

12. இரண்டு கடல்கள்

வால்மீகி ராமாயணம், ராமனை கடல் எனப் போற்றுகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. கடல்கரை காண முடியாதது. “கங்கு கரை காணாத கடலே” என்று மகாதேவ மாலையில் வள்ளலார் பாடுகிறார். எல்லையற்ற கருணைக்கு கடல் உதாரணமாகிறது. நிறத்தாலும் இறைவன் கடலாகிறான். “கடல் நிறக் கடவுள் எந்தை’’ என்கிறார். தொண்டரடிபொடியாழ்வார். வால்மீகி ராமனை “சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேண ஹிமவாநிவ’’ என்கிறார்.

சமுத்திரம் போல் கம்பீரமானவன் என்று கூறுகிறார். ராமன் சேதுக்கரையில் (திருப்புல்லாணி) கடல் வழிவிட வேண்டும் இலங்கைக்குப் போக வேண்டும் என்பதற்காக கடலை நோக்கி தவம் செய்கின்றான். அப்பொழுது கம்பன் ராமனை வர்ணிக்கிறார். எப்படித் தெரியுமா? “ஒரு கடல் இன்னொரு கடலை நோக்கி தவம் செய்கிறது என்று பாடுகின்றார். கருணையங் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி என்று அவர் பாடுகின்றார்.

13. கங்காதரன்

அது மட்டும் இல்லை; மகாவிஷ்ணு கடலில் தானே பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, தீர்த்தத்தோடு பகவானுக்கு உள்ள சம்பந்தம் நமக்குப் புலப்படுகிறது. சிவபெருமான் பஞ்சபூதங்களில் தீர்த்தமாக இருக்கும் தலம் திருவானைக்கோயில். அது மட்டும் இல்லை கங்கை என்னும் பெரு நதியை அவன் தலை மீது சூடிக் கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு கங்காதரன் என்று பெயர்.

“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!’’
– என்று சம்பந்தர் பாடுகின்றார்.

இந்தப் பதிகம் நவகிரக தோஷம் நீக்கும் பதிகம். இதில் இறைவனோடு தொடர்பு கொண்ட கங்கை வருவதால் தோஷம் நீங்குகிறது என்று பொருள். சிவனுக்கும் கங்கை எனும் தீர்த்தத்துக்கும் உள்ள தொடர்பு புலனாகிறது அல்லவா?

14. நீர் நிலைகள் தூய்மை பெறுகின்றன

மனிதர்களுடைய பாவங்களை புண்ணிய நதிகளும் கடல்களும் தீர்க்கின்றன. ஆனால், இந்தப் பாவங்களை அந்த நீர்நிலைகள் சுமக்கின்றன. இதனால் சேரும் பாவங்களை எல்லாம் அந்த நதிகளும் நீர் நிலைகளும் போக்கிக் கொள்ள வேண்டும் அல்லவா. அது, அமலன் என்று எல்லா குற்றங்களையும் நீக்குகின்ற இறைவனால் மட்டுமே முடியும். அதற்காகவே ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகம் அன்று தீர்த்தவாரி நடக்கிறது. இறைவன் திருவடி விளக்கத்தாலும், திருமஞ்சனத்தாலும் நீர் நிலைகள் பாவங்கள் தீர்ந்து தூய்மை பெறுகின்றன. தீர்த்தவாரியால் கடல், ஆறுகள், என அனைத்து நீர் நிலைகளும் தூய்மை பெறுகின்றன.

15. எல்லாரும் பங்கு பெரும் சமூக விழா

மாசி மக தீர்த்தவாரி என்பது எல்லா சமூக மக்களும் பங்கு பெறுகின்ற ஒரு மகத்தான விழா. தென்னகத்தில் இந்த விழா மிகச் சிறப்பானதாக நடைபெறுகின்றது. சுவாமியோடு மக்களும் கலந்து கொண்டு கோலாகலமாக தீர்த்தவாரியை நடத்தி மகிழ்கிறார்கள். பயன் பெறுகிறார்கள். சில கிராமங்களில் இருந்து அருகாமையில் உள்ள கடற்கரைக்கு பல கிலோமீட்டர் தூரம் சுவாமியை அவர்கள் டிராக்டர் போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்று தீர்த்தவாரி நடத்தி வருகின்றார்கள். அப்பொழுது அந்த கிராமமே சுவாமியோடு புறப்பட்டுப் போய் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு திரும்பும்.

16. குழந்தை செல்வம், குடும்ப விருத்தி ஓங்க மாசிமகம்

மாசி மக தீர்த்தவாரி என்பது கிராமங்களைப் பொறுத்தவரை ஒரு ஊர்த் திருவிழாவாக நடைபெறுகின்றது. இதனால் சமூக அன்பும் பரஸ்பர நல்லெண்ணமும் ஒற்றுமையும் ஓங்குகிறது. புதிதாக கல்யாணமானவர்கள் ஆடி பதினெட்டாம் பெருக்கில் எப்படி நதிகளில் நீராடுவார்களோ, அதைப் போலவே மாசி மகத்தன்று கடலில் நீராடுவது சில குடும்பங்களில் ஒரு சடங்காகவே கருதப்படுகின்றது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு குடும்ப விருத்தி நல்ல முறையில் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மிக விரைவில் அவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

17.கடலாடும் மாதம்

மாசி மாதம் முழுவதும் `கடலாடும்மாதம்’ என்றும், `தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாத நாள்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டுவந்தால், எல்லாவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

18. மஹாலட்சுமியும் கடலும்

வைணவத்தில் மகாலட்சுமித் தாயார் கடல் அரசனின் பெண். காரணம், பாற்கடலைக் கடைந்த போது பல்வேறு பொருள்கள் கிடைத்தன அப்பொழுது அந்த கடலில் இருந்து தோன்றியவள் மகாலட்சுமித் தாயார் அதனால் மகாலட்சுமிக்கு சமுத்திர ராஜனின் பெண் என்கின்ற பெயர் உண்டு. “ஷீர சமுத்திர ராஜ தனயை’’ என்று அவளை அழைப்பார்கள். மகாலட்சுமி தாயார் மகாவிஷ்ணுவை மணாளனாக அடைந்தாள். மகாலட்சுமியை கன்னியாதானம் செய்து கொடுத்தவர் கடல் அரசன். எனவே கடன் அரசன் மகாவிஷ்ணுவுக்கு மாமனார் ஆகிறார். மகாவிஷ்ணு மாப்பிள்ளை சாமி ஆகிறார்.

19. மீனவ மக்களின் வரவேற்பு

திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் இது.
“வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.’’
இதில் கடல் கடைந்து கிடைத்த

அமுதம் மஹாலட்சுமி தாயார் என்று வருகிறது. கடல் தீர்த்தவாரியில் எம்பெருமானுக்கு தாயார் கிடைத்த நிகழ்வை சேவிப்பதால் நமக்கு இருவரின் பேரருளும் கிடைக்கும்.அதனை ஒட்டித்தான் மாசி மக தீர்த்தவாரி அன்று பெரும்பாலான மீனவ கிராம மக்கள் பெருமாளை தங்கள் குடும்ப மாப்பிள்ளையாக வரவழைத்து, மாசி மக தீர்த்தவாரியை மண்டகப்படியாகக் கொண்டாடி மிகச் சிறந்த வரவேற்பு அளிக்கின்றார்கள் பெரும்பாலான ஊர்களில் மீனவ குல மக்களே இன்றளவும் உபயதாரர்களாக இருந்து தீர்த்த உற்சவத்தை நடத்துவது கண் கூடு.

20. கோடி ஜன்ம தேஷங்களைப் போக்கும்

மகத்தில் தீர்த்தாமாடுபவர்கள் ஜகத்தில் பெருமை பெறுவர் என்று மூதுரையும் உண்டு. ஏனென்றால், ஒரு வருடத்தில் நாம் செய்யும் பாபங்களுக்குப் பரிகாரமாக மாசி மகத்தன்று கடலில் நீராடுவது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தெய்வங்களின் சந்நதியில் நாம் நீராடுவது கோடி ஜன்ம தோஷங்களைப் போக்குமாம்.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல, வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

21. திருவயிந்தை தேவநாதன் கண்டருளும் உற்சவம்

மாசி மகத்தன்று சைவ, விஷ்ணு ஆலயங்களில் புறப்பாடுகள் நடைபெறும். கடற்கரை கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். தேவநாதப் பெருமாள் திருவயிந்திரபுரத்திலிருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினத்திற்கு சமுத்திர ஸ்நானத்திற்கு வருகிறார். அவரோடு வெவ்வேறு திவ்யதேச பெருமாள்களும் வருகிறார்கள். இந்த உத்ஸவத்தை சேவித்த வேதாந்த தேசிகர் “மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவான்” என்று மங்களாசாஸனம் செய்கிறார்.

22. பிச்சுவா கத்திக்கு வழிபாடு

தெய்வ நாயகனான பெருமாளை பல அரசர்கள் அடிபணிந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் பாளையக்கார மரபில் வந்த ஒரு அரசன். சிறந்த பக்திமான். பெருமாள் புறப்பாடு கண்டருளும் சமயங்களிலெல்லாம், அவருக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக, இவ்வரசன் கையில் கத்தியுடன் வருவாராம். அவர் மறைந்த பிறகு அவரின் வழித்தோன்றல்கள் இக் கைங்கர்யத்தைச் செய்யவில்லை. இருந்தும் பெருமாள் அதை மறக்க வில்லை!! மாசிமகத்திற்குச் செல்லும் போதெல்லாம் முதலில் அந்த பாளையக்காரர் இருப்பிடத்திற்குச் சென்று, ஞாபகர்த்தமாக, அவரின் பிச்சுவா கத்திக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறார்.

23. முஷ்ணம் தைக்கால் மண்டகப்படி

கடலூர் மாவட்டம், முஷ்ணம் பூவராகப் பெருமாள் மாசிமகம் அன்று கிள்ளை என்ற ஊருக்கு தீர்த்தவாரி வைபவத்துக்காகச் செல்கிறார். செல்லும் வழியில் தைக்கால் என்ற ஊரில் முஸ்லிம் சமூகத்தினர் பெருமாளை வரவேற்று வழிபாடு செய்வதைக் காணலாம். பெருமாள் இங்கு தங்கி செல்ல ஒரு மண்டபம் உள்ளது. உப்பு வெங்கட்ராயர் என்பவர் அங்கு தாசில்தாராகப் பணியாற்றியபொழுது சையத்ஷா குலாம் மொஹதீன் அவர்களால் அந்நிலம் தானமாக அளிக்கப்பட்டது. இவ்வருவாயைக் கொண்டு முஷ்ணம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம், கிள்ளை தைக்கால் மண்டகப்படி போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் முஸ்லிம்கள் பலர் இறைவன் நினைவாக பூராசாயுபு (பூவராக சாயுபு) எனப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

24. எந்தெந்த கோயில்களில் எப்படி தீர்த்தவாரி?

ரங்கம் முதலிய திருத்தலங்களில், பெருமாள், நதிக்கு எழுந்தருளுவார். கும்பகோணத்தில் சிவாலய மூர்த்திகள் மாமாங்க குளத்தில் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறும். சார்ங்க பாணி பெருமாள் காவிரிக்கரையில் சக்கர படித்துறையில் எழுந்தருளுவார் தில்லை திருச்சித்ர கூடம், திருக்கண்ணபுரம், திருக்கோவலூர் ஆயனார், முஷ்ணம் பூவராஹப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மற்றும் மாமல்லை ஸ்தலசயனப் பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். அன்பில் சுந்தரராஜ பெருமாள் – ரங்கம் வட திருக்காவேரியில் (கொள்ளிடம்) மாசிமகம் தீர்த்தவாரி கண்டருளுவார்.

மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். திருமலைராயன் பட்டினத்திலுள்ள கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜ பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் நடைபெறும். நெற் கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும். பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜ பெருமாளை `மாப்பிள்ளை சாமி’ என்று அழைக்கின்றனர்.

25. சிவன் தந்த வரம்

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

26. பார்வதி பரமசிவன் திருவிளையாடல்

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் “தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்’’ என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால்தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான்தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார். இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார்.

27. அம்பிகை அவதரித்த மாசி மகம்

அப்பொழுது சிவபெருமான்தான் தக்கனுகுக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும்; அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார். ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான்.

அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேத வல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

28. ஞானம் பெறவும், முன்னோரை நினைக்கவும் மாசி மகம்

ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான், மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும். அன்று மாசிமக நீராடி, நவகிரக சந்நதியில் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். மகம் நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். குலதெய்வ வழிபாடு: மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபடுவதும், தரிசிப்பதும் மகத்தான பலன்களை அள்ளித் தரும்.

29. எப்படி நீராடுவது?

மாசி மகம் அன்று தீர்த்தவாரி முடிந்தவுடன் இறைவன் நீராடிய நீரில் நாமும் நீராடலாம். குறைந்த பட்சம் தலையில் தெளித்துக் கொள்ளவாவது செய்ய வேண்டும். புண்ணிய நதிகளில் நீராடுபவர்கள், ஒரே ஆடையை உடுத்தி நீராடக் கூடாது. இடுப்பில் மற்றொரு ஆடையை உடுத்திக்கொண்டு நீராட வேண்டும். அதற்கு முன்னர், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு நீரை உள்ளங்கையில் எடுத்து தலையின் மீது தெளித்துக்கொள்ள வேண்டும்.

இரவில் நீராடக் கூடாது. புண்ணிய நதியில் புனித நீராடுபவர்களுக்கு பகவான் பல்வேறு பலன்களை வழங்குவர். மூன்று முறை மூழ்கி நீராடுவது முறை. முதல் முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் நற்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்துக்கு ஈடே கிடையாது என்று சொல்லப்படுகிறது.

30. இதைவிட சிறந்த தினம் கிடையாது

தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம்தான். இதனால் முருகனை வழிபடுவதற்கு சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது. கடலுக்கடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகம்தான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் தெப்ப உற்சவம் மாசி பவுர்ணமியில் நடைபெறும்.

மாசி மகத்தன்று நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே
சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் “மறுபிறவி கிடையாது” என்று புராணங்கள் கூறுகின்றன. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். மாசிமகம் பெருமையைச் சொல்ல இன்னும் ஏராளம் உண்டு.இவ்வாண்டு மாசிமகம் மாசி 12, (24.2.2024) சனிக்கிழமை வருகிறது. கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனி இருக்கையில் வருவது அதிவிசேஷமானது.

எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-மகா பாவங்களையும் போக்கும் மாசி மகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…