×

பள்ளி,மருத்துவமனை அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

ராமநாதபுரம், பிப்.23: திருஉத்தரகோசமங்கை அரசு பள்ளி, மருத்துவமனை அருகில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருஉத்தரகோசமங்கையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையிலுள்ள கீழசீத்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

பள்ளியில் திருஉத்தரகோசமங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இதுபோன்று பள்ளி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் சிகிச்சை, பரிசோதனைகள், மகப்பேறு கால பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கும் சுற்றுவட்டார கிராமமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பஸ் நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டது.

இதனை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள், கீழச்சீத்தை கிராமமக்கள், சுற்றுவட்டார கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டதால் கடந்த சில வருடங்களாக கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் பஸ்ஸிற்கு வரும் பயணிகள், மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்துவது கிடையாது. நிழற்குடை இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளி,மருத்துவமனை அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thiruuttarakosamangai Government School and ,Govt High School ,Geezeethi ,Thiruuttharakosamangai ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்...