×

வானம் மேகமூட்டம், திடீர் மழையால் சேதுபாவாசத்திரம் , மல்லிப்பட்டினம் பகுதியில் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிப்பு

பேராவூரணி , ஜூன் 9: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், திடீர் மழை பெய்வதால் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிப்பு ஏற்ப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் , ஏரிப்புறக்கரை தொடங்கி கொள்ளுக்காடு மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட 36 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களிலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகுகளும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய மீன்பிடி துறைமுக பகுதிகளில் இருந்து 150 விசைப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை பாரம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக விசைப்படகுகளும் , இழுவை படகுகளும் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தில் விசைப்படகுகளை உரிமையாளர்கள் மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் நாட்டுப்படகுகளில் கிடைக்கக்கூடிய கழிவு மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.நாட்டுப்படகுகளில் அதிகமாக கிடைக்கும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் கோழித்தீவனத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. மொத்தமாக ஏலத்தில் எடுத்து காய வைத்து கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வகை சங்காய கருவாடுகள் நாமக்கல் உள்ளிட்ட கோழிப்பண்ணைகள் உள்ள பகுதிகளுக்கு தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் துறைமுக பகுதிகளில் கருவாடுகளை தரம் பிரிக்க, காயவைக்க, சாக்கு மூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என அன்றாடம் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதியில் திடீர் மழை பெய்வதாலும், வெயில் இன்றி மேக மூட்டமாக காணப்படுவதால் கருவாடு காய வைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

The post வானம் மேகமூட்டம், திடீர் மழையால் சேதுபாவாசத்திரம் , மல்லிப்பட்டினம் பகுதியில் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Karuvad ,Sethubavasatram ,Mallipatnam ,Peravoorani ,Thanjavur district ,Setupavasatram ,Athirampatnam ,Sethubavasthram ,Mallipattanam ,Dinakaran ,
× RELATED மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம்...