×

பசுந்தாள் உர பயிர் பயிரிட ஏக்கருக்கு ரூ1000 மானியத்தில் விதை

திருவாரூர், ஜூன் 9: திருவாரூர் மாவட்டத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டுவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1000மானியத்தில் விதை பெறுவதற்கு உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாய பெருமக்கள் கோடை காலத்தில் பெறக்கூடிய மழையை பயன்படுத்தி, பசுந்தாள் உரப்பயிர்களை பயிர் இடுவதன் மூலம் அடுத்து வரும் காலங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்க இயலும். அதன்படி தற்பொழுது தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உர பயிர்களான சணப்பை தக்கைப்பூண்டு அல்லது பயிர் வகை பயிர்களான குறிப்பாக காராமணி பாசிப்பயிறு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து பூப்பூக்கும் பருவம் வரை வளர விட்டு அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் பொழுது மடக்கி உழுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்வளம் மேம்படுத்தப்படுகின்றது.

மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து பயிர் சாகுபடியில் பல்வேறு நன்மைகளையும் விளைவிக்கின்றது. மண்ணில் உள்ள அங்ககப் பொருட்களின் அளவே மண் வளத்தை நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் பசுந்தாள் உர பயிர்களை மண்ணில் மடக்கி உழும்போது அவை மண்ணில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு ஹீயுமெஸ் எனப்படும் மக்கு பொருள் மற்றும் இதர அங்ககப் பொருட்களை தருகின்றது. இது மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி, மண்ணின் நீர் பிடிப்பு தன்மையை அதிகரித்து பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றது. பசுந்தாள் உர பயிர்கள் ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியுடன் காற்றில் உள்ள தழைச்சத்தை வேர் மற்றும் தண்டு முடிச்சுகளில் சேமிக்கின்றன. அவற்றை மண்ணுக்குள் மடக்கி உழுவதால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 30 முதல் 75 கிலோ தழைச்சத்து கிடைக்கின்றது.

பசுந்தாள் உரப்பயிர்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் உதவியுடன் சிதைக்கப்படும் பொழுது அவற்றிலிருந்து பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகி அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்கள் நன்கு செழித்து வளர உதவுகின்றது. எனவே இதற்குரிய விதையானது ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ ரூ 2 ஆயிரம் என்ற நிலையில் அதில் 50 சதவீத மானியமாக ரூ.1000விலையில் வழங்கப்படவுள்ளதால் விவசாயிகள் உழவன் செயலில் பதிவு செய்து பயனடையலாம்.இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

The post பசுந்தாள் உர பயிர் பயிரிட ஏக்கருக்கு ரூ1000 மானியத்தில் விதை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Joint Director ,Agriculture ,Yehumalai ,Tiruvarur district ,
× RELATED 8 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு...