×

ஆரோக்கியம்தான் அழகு!

நன்றி குங்குமம் தோழி

தான் மட்டும் முன்னேறினால் போதாது தன்னைப் போன்ற பெண் தொழில்முனைவோர்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய நோக்கிலும், அவர்களையும் தன் கைப்பிடித்துக் கூட்டி செல்லவேண்டும் என்கிற முனைப்பிலும் ‘நம்ம பஜார்’ என்கிற விற்பனை சந்தையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் சுதா நாராயணன். பனிரெண்டு விதமான பாரம்பரிய சுவைமிக்க பொடி வகைகளை தன் கைப்பட தயாரித்து சிறந்த முறையில் தனது ‘ஈவா ஹெல்த்’ நிறுவனம் மூலம் விற்பனையும் செய்து வருகிறார். அதில் இவரது முருங்கைப் பொடி மிகவும் பிரபலமான ஒன்று. இவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

* ஈவா ஹெல்த் குறித்து?

எங்களோட சொந்த ஊர் மயிலாடுதுறை. ரெண்டு வருஷம் முன்பு கணவரோட பணி மாற்றத்தினால் சென்னைக்கு வந்தோம். சென்னைக்கு வந்த பிறகு மகன் வெளிநாடு, மகள் ஹாஸ்டல், கணவர் அவருடைய வேலை என எல்லோரும் பிசியாக இருந்தாங்க. என்னுடைய வாழ்க்கை மட்டும் நான்கு சுவருக்குள் முடங்கிப் போனது போல் இருந்தது. காரணம், எனக்கு செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை. அதனால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டிய சூழ்நிலை. வெளியிலும் போக முடியாது.

ஆறு மாசம் வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. அப்பதான் என் தங்கை மூலம் ஒரு மகளிர் குழு எனக்கு அறிமுகம் ஆனது. அங்கே கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்தாங்க. அவங்களின் ஒரு குழு சந்திப்பில் கலந்து கொண்டேன். அதற்கு வந்திருந்த பெண்களில் அனைவரும் தொழில்முனைவோராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டாங்க. நான் அந்த சந்திப்பில் பேசிய போது, நானும் ஒரு தொழில் துவங்க இருப்பதாக தெரிவித்தேன்.

ஆனால் அப்போது என்ன தொழில் எப்படி செய்வதுன்னு எந்த ஒரு ஐடியாவும் இல்லை. ஆனால் நான் சொன்ன அந்த வார்த்தையை உண்மையாக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். அப்படித்தான் என்னுடைய தொழிலை ஒரு வருடத்துக்கு முன்பு துவங்கினேன். எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். என் மகன் வெளிநாட்டிலும், மகள் ஹாஸ்டலிலும் தங்கி இருப்பதால், அவர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பலவகையான பொடிகளை செய்து கொடுப்பேன். அதையே என் பிசினஸாக ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஈவா ஹெல்த் உருவானது.

* உங்களின் தயாரிப்புகள்?

முருங்கை இலை பொடி, கறிவேப்பிலை பொடி, புதினா பொடிதான் முதலில் செய்து வந்தேன். அதை என் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து அவர்களிடம் அதனைப் பற்றிய கருத்தினைக் கேட்டேன். அவர்களுக்கு அது பிடித்துப்போக அவர்கள் மட்டுமில்லாமல், அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிவிக்க, என்னுடைய வாடிக்கையாளர்கள் பட்டியல் அதிகமானது. அதன் பிறகு பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து தற்போது ஆன்லைன் முறையிலும் என்னுடைய தொழிலை செய்து வருகிறேன். சில கடைகளுக்கும் என்னுடைய உணவுப் பொருட்களை சப்ளை செய்து வருகிறேன். அங்கும் நல்லா விற்பனையாகிறது. தற்போது 12 வகை பொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறேன். இப்போது வீட்டில் இருந்தபடி சிறிய அளவில்தான் தயாரித்து வருகிறேன். கூடிய விரைவில் ஒரு பெரிய யூனிட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது.

* இதன் சிறப்பம்சம்?

என் உணவுப்பொருட்களை வாங்கும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனால்தான் என்னுடைய பொடி வகைகளில் நான் நல்ல தரமான பொருட்களை மட்டும் தான் பயன்படுத்தி வருகிறேன். மேலும் என் குழந்தைகளுக்கு இந்தப் பொடிகளை எவ்வாறு தயாரிக்கிறேனோ அதே போல் தான் என் வாடிக்கையாளர்களுக்கும் நான் தயாரித்து விற்பனை செய்கிறேன்.

உணவுப் பொருட்களில் தரம் மற்றும் சுத்தம் மிகவும் அவசியம். கீரைகளை பொடிகளா செய்யும் போது அதன் நிறம், சுவை, தரம் மாறாமல் இருக்க வேண்டும். அதனால் நிழலில் நன்கு உலரச் செய்து அதில் உள்ள முக்கிய சத்துக்கள் எல்லாம் மாறாமல் தயார் செய்கிறேன். சமையலை சுலபமாகவும் அதே நேரத்தில் சத்தான ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்ட திருப்தியை என் பொடி வகைகள் கொடுக்கும்.

சமூகவலைத்தளங்கள், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறேன். இணையத்திலும் என் பொடி வகைகள் கிடைக்கும். ஒரு தடவை என் பொடி வகைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் மறுபடியும் ஆர்டர் செய்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை வாங்க சொல்கிறார்கள். ஒரு முறை இன்ஸ்டாவில் நூறு நாளைக்கு 100 சமையல் குறிப்பு என ஒரு நிமிட வீடியோவாக பதிவு செய்து வந்தேன். அதற்கு நல்ல ரீச் கிடைத்தது.

அதன் மூலமாகவும் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. சில கடைகளுக்கு ஆர்டர்கள் மூலமாகவும் பொடிவகைகளை தயாரித்து தருகிறேன். தற்போது இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறேன். அடுத்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருக்கிறது. சொந்தமாக ஒரு யூனிட்டை அமைத்து தனியாக ஒரு கடை வைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்.

* நம்ம பஜார்..?

நிறைய பெண்கள் தங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது என்று தெரியாமல் சிரமப்படுவதை குறித்து கேள்விப்பட்டேன். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தபோது உதித்ததுதான் நம்ம பஜார். மகளிர் தொழில்முனைவோர்கள் வீட்டில் இருந்தபடியே தயாரிக்கும் பொருட்களை சுலபமாக விற்பதற்கான ஒரு நல்ல ஐடியாதான் இந்த திட்டம். அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான விற்பனை சந்தைகளை நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

நானும் என் தோழி நிர்மலாவும் சேர்ந்துதான் இந்த பிசினஸை துவங்கியிருக்கோம். குறைந்த விலையில் ஸ்டால்ஸ் போட்டு அவங்களின் பொருட்களை அதில் சந்தைப்படுத்தி வருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண் தொழில்முனைவோர் எங்களை அணுகி இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் பல இடங்களில் நம்ம பஜார் திட்டத்தை விரிவுப்படுத்தி சிறப்பாக நடைபெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’’ என்றார் சுதா நாராயணன்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post ஆரோக்கியம்தான் அழகு! appeared first on Dinakaran.

Tags : Namma Bazaar ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…