×

லண்டனில் நம் பாரம்பரிய வயர் கூடையின் விலை ரூ.9000!

நன்றி குங்குமம் தோழி

கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர். அது பல ஆயிரம், பல லட்சம் என்றாலும் அதற்காக அந்தப் பணத்தைக் கொடுப்பவர்களும் உள்ளனர். அதில் ஒன்றுதான் முன்பு நாம் கைப்பட பின்னி உபயோகித்த வயர் கூடை பைகள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க மட்டுமில்லை, பள்ளிக்கு உணவு எடுத்துச்செல்லவும் இந்த வயர் கூடைகளைதான் பயன்படுத்தி வந்தோம். அம்மாக்கள் வீட்டில் அவர்களின் பொழுது போக்கிற்காக அவர்களே கைப்பட இந்த வயர் கூடைகளை பின்னி அதனை பயன்படுத்தி வந்தார்கள்.

வீடுகளில் இரண்டு வயர் கூடைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் காலப்போக்கில் பல்வேறு வகையான பைகள் விற்பனைக்கு வரவும், மக்கள் அதை விரும்ப ஆரம்பித்தார்கள். அதனால் இந்த பைகளுக்கான மதிப்பும் குறைந்தது. நாம் வேண்டாம் என்று ஒதுக்கிய இந்த வயர் கூடைகளுக்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகரித்துள்ளது. காரணம், அதையே ஃபேஷன் கைப்பைகள் மற்றும் பைகளாக மாற்றி இந்தியா மற்றும் வெளிநாடுகள் முழுதும் விற்பனை செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த தனுஷியா. இவர் ‘Knots Bag’ என்ற பெயரில் இந்த வயர் கூடைகளை டிசைன் டிசைனாக வடிவமைத்து வருகிறார்.

‘‘இந்த காலத்திற்கேற்ப உபயோகப்படுத்தும் பொருட்களை மாற்றிக்கொள்ளும் மக்கள், இந்தக் கூடை பைகளை பயன்படுத்துவது அசௌகரியமாக உணர்ந்ததால்தான் அதை தவிர்க்க ஆரம்பித்தனர். ஆனால் இது தமிழர்களின் கண்டுபிடிப்பு. இதை தயாரிக்கவும், பயன்படுத்தவும் பெருமைப்பட வேண்டும்’’ என பேசத் துவங்கினார் தனுஷியா.

‘‘என் சொந்த ஊர் கோயமுத்தூர். படிச்சது பி.டெக் ஃபேஷன். அதன் பிறகு யூ.கே வில் ‘லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷன் யூனிவர்சிட்டியில்’ ஃபேஷன் மீடியா மற்றும் ஸ்டைலிங் குறித்து படிச்சேன். உலகில் உள்ள பலதரப்பட்ட கல்லூரிகளில் ஃபேஷனுக்கு என்று முதன்மையாக இருக்கும் பல்கலைக்கழகம் அது. அங்கு மாடலுக்காக கைவினைப் பொருட்கள், ஃபேஷன் ஆடைகள், நகைகள் என வைத்திருப்பார்கள்.

அதைப் பார்த்து எனக்கும் உலகின் பல இடங்களில் இது போன்ற பொருட்களை கண்டறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்தப் பொருட்களைத் தேடி அலைந்தேன். அப்போது ஹாங்காங்கில் என்னை ரொம்பவே ஈர்த்தது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைகளால் பின்னப்பட்ட நம்மூர் வயர் கூடைகள் தான். அங்கு ஒவ்வொரு பைகளும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் விலைக்கு ஏற்ப தரத்தில் அந்த பைகள் இல்லை. சாதாரணமாக பிடித்து இழுத்தாலே அறுந்து விடும் நிலையில்தான் இருந்தது அந்த வயர்கள். அப்படி இருக்கும் போது, தரம் குறைந்த பொருட்களை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்க காரணம் என்ன என்று எனக்குள் யோசனை எழுந்தது’’ என்றவர் அதற்கான பதிலை கண்டறிந்துள்ளார்.

‘‘அந்த பதில் தான் ‘Knots Bag’ துவங்க காரணம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சில பாரம்பரிய பொருட்கள் இருக்கும். அதாவது, அந்த ஊர் மக்கள் செய்யக்கூடிய பொருட்கள். அவை பெரும்பாலும் அந்த ஊரின் முக்கிய கைவினைப் பொருட்களாக இருக்கும். அப்படிப்பட்ட பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும், மதிப்பும் இருக்கும். அப்படித்தான் நம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் பைகளுக்கு வெளிநாடுகளில் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அந்தப் பொருட்களுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பும் எனக்கு புரிந்தது.

அப்போதுதான் நாம் ஏன் இந்தத் தொழிலை துவங்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. இந்த வயர் கூடைகளின் பிறப்பிடம் நம் தமிழ்நாடு. தமிழர்களின் ஒரு வகை கலைப் பொருள் என்றே சொல்லலாம். அந்தக் கலையை பல நாடுகளுக்கு கொண்டு சென்றால், நம் கலையும் வளரும். அதே சமயம் குறைந்த பணத்தில் தரமான பொருளையும் கொடுக்க முடியும். எல்லாவற்றையும் விட பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும்.

2016ல்தான் வயர் கூடைகள் சம்பந்தமான வேலைகளை துவங்கினேன். ஆனால் கொரோனா ஊரடங்கால் ஆரம்பித்த வேலை எல்லாம் பாதியிலேயே நின்று போனது. இருப்பினும் அந்த இடைப்பட்ட காலத்தில் செய்த பைகளை விற்பனை செய்ேதாம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் எங்க டிசைன் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கோவிட் காலம் முடித்த பிறகு மீண்டும் தொழிலை புது வேகத்துடன் ஆரம்பித்தோம். தற்போது எங்களின் பைகள் வெளிநாட்டிலும் நல்லா விற்பனையாகிறது.

பொதுவாக வயர் கூடைகளில் பெரிய காது வைத்து பல சைஸ்களில் பலவித வண்ணங்களில்தான் பைகள் வரும். நாங்க மாடர்ன் டிரெண்டிற்கு ஏற்ப அதன் டிசைன்களை மாற்றி அமைத்தோம். அந்த டிசைன்கள் மக்களுக்கு பிடித்திருந்தது. அதனால் அப்போது மார்க்கெட்டில் என்ன டிரெண்டிங்கோ அதற்கு ஏற்ப எங்களின் பைகளை வடிவமைக்க ஆரம்பித்தோம். என்னுடைய டிசைனிற்கு ஏற்ப நான் பெண்களுக்கு பயிற்சி அளித்து இருப்பதால், அவர்களும் வீட்டில் இருந்த படியே நான் சொல்லும் டிசைன்களில் பைகளை பின்னிக் கொடுப்பார்கள். தற்போது சென்னையில் ஐந்து பேர் எனக்காக வேலை பார்க்கிறார்கள்.

அவர்கள் இல்லத்தரசிகள் என்பதால் வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் பைகளை பின்னுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு சம்பளமும் கிடைப்பதால், இதனை மிகவும் ஆர்வமுடன் செய்து தருகிறார்கள்’’ என்றவரிடம் கூடை பை தயாரிப்பில் ஆர்வம் காட்டுவதற்கான காரணத்தை கேட்ட போது…

‘‘ஒரு வயர் பைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரணும் என்கிற கேள்விக்கு ஒரே பதில் இது தமிழர்களின் கலை. அதை உலகம் எங்கும் கொண்டு சேர்க்கணும். மேலும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, மற்ற பைகளை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த கூடை பைகள் 20 வருடங்கள் ஆனாலும் நிலைத்து நிற்கும். நாம் பள்ளிகளில் படிக்கும் போது இந்தக் கூடை பின்னுதலை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுப்பாங்க. காலப்போக்கில் இந்த பைகளின் பயன்பாடும் இல்லை, அதை பின்னுபவர்கள் குறைந்துவிட்டனர். நம்முடைய கலையை மீண்டும் மீட்டெடுக்க விரும்பினேன். இதை புது டிரெண்டில் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.

சாதா பைகள் இல்லாமல், லேப்டாப், மொபைல் வைக்க, பேக்பேக் (backbag), கிளட்ச், ஹாண்ட்பேக் என பல டிசைன்களில் இந்த பைகளை தயாரித்து வருகிறேன். அவ்வாறு தயாரிக்கப்படும் பைகளை சென்னையில் நடைபெறும் Pop up நிகழ்வில் காட்சிப்படுத்துவோம். அதில் நாங்க கொண்டு செல்லும் அனைத்து பைகளும் விற்பனையாகிடும். அதன் பிறகு இதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

அங்கு ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரம் வரைக்கும் எங்களின் பைகள் விற்பனையாகிறது. தற்போது புதுப்புது டிசைன்களை அறிமுகம் செய்து வருகிறோம். ஆனால் எங்களிடம் குறைந்த எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்கள் இருப்பதால், அதிக அளவில் பைகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால் முதலில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அதனைத் தொடர்ந்து பெரிய பெரிய ஆர்டர்கள் எடுக்க இருக்கிறோம். மேலும் இந்த ஆண்டு, ஐரோப்பாவில் நடக்கும் ஃபேஷன் ட்ரேடில் கலந்து கொண்டு நம் பாரம்பரியக் கலையின் ஒரு பகுதியான இந்த பைகளை சர்வதேச அளவில் கொண்டு போக வேண்டும்’’ என்ற தனுஷியா தென்னை நார்கள் கொண்டு பைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அதன் உற்பத்தியினை துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post லண்டனில் நம் பாரம்பரிய வயர் கூடையின் விலை ரூ.9000! appeared first on Dinakaran.

Tags : London ,Kumkum Doshi Handicrafts ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை