திருவொற்றியூர், பிப். 22: சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் க்யூஆர் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்துதல் மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை க்யூஆர் பயணச்சீட்டு பெறும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று அறிமுகம் ெசய்து வைத்தார். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் க்யூஆர் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை க்யூஆர் பயணச்சீட்டு பெறும் வசதியை நேற்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், மெட்ரோஸ், நந்தனம், அண்ணா சாலையில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கணினி மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் மகேஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), அர்ச்சுனன் (திட்டங்கள்), பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் சூரஜ் குமார் சின்ஹா, போர்டு மொபிலிட்டியின் பொறியியல் இயக்குனர் விஜய் சீனிவாசன், பாரத ஸ்டேட் வங்கி, கணினி மேம்பாட்டு மையம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பார்க்கிங் கட்டணத்தில் இரண்டு புதுமையான முறைகளை ஒருங்கிணைத்துள்ளது. மேலும், மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை க்யூஆர் பயணச்சீட்டை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தை நேற்று முதல் சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் ஸ்டோர் வேல்யூ பாஸ் க்யூஆர் மூலம் செலுத்தலாம்.
சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை) மூலம் பார்க்கிங் கட்டணத்தை செயல்படுத்தும் முதல் மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கணினி மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோவில் ஒன்றாக பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக, ஒற்றை க்யூஆர் குடும்ப பயணிச்சீட்டு பெறும் வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட க்யூஆர் பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு பதிலாக, இப்போது பல பயணிகளுக்கு ஒரு க்யூஆர் பயணச்சீட்டை வழங்குகிறது. Ford Mobility உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வசதி, 5 பயணிகள் வரையிலான குழுக்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் அமைப்பு வழியாக தடையின்றி பயணிக்க அனுமதிக்கிறது. பயணச்சீட்டு வழங்கும் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் பயணிகளின் வசதியை அதிகரிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த புதிய முறை மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும், டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கவும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மெட்ரோ ரயிலில் செல்ல ஒற்றை க்யூஆர் குடும்ப பயணச்சீட்டு பெறும் வசதி: இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்தார் appeared first on Dinakaran.