×

சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்தவர் உட்பட புதுவையில் 6 பேரிடம் ₹2.81 லட்சம் மோசடி

புதுச்சேரி, பிப். 21: சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர் உட்பட புதுவையில் 6 பேரிடம் ரூ.2.81 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணிற்கு தெரியாத நபர் போன் செய்து கூரியர் சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, கூரியரை டெலிவரி செய்ய ஓடிபி எண்ணை பகிருமாறு வலியுறுத்தியுள்ளார். நம்பிக்கையின் பேரில் அவரும் ஓடிபி எண்ணை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அமுதா என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அதிலிருந்த லிங் வழியாக சென்று வங்கி விவரம் மற்றும் ஓடிபி எண் உள்ளிட்ட தகவலை பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1,999 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் முறையை பயன்படுத்தி குணசேகரன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் என்பவர் சுற்றுலா செல்வதற்காக ஆன்லைனில் ரூ.1,63,750 செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவரை சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியுள்ளனர். சசிகலா என்ற பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத நபர் கூறியுள்ளார்.

இதை நம்பி அவரும் ரூ.92,660ஐ முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார். அதன் பிறகு, சம்பாதிக்க பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணம் செலுத்துமாறு மோசடி நபர்கள் கூறியிருக்கிறது. அதன் பிறகு, அவர் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். ஜெகன் என்பவர் தவறுதலாக வேறு ஒருவருக்கு ஜிபே மூலம் ரூ.10,000 பணத்தை அனுப்பியுள்ளார். மொத்தமாக 6 பேரிடம் ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 409ஐ மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்தவர் உட்பட புதுவையில் 6 பேரிடம் ₹2.81 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Priyanka ,
× RELATED புதுவையில் 6 பேரிடம் ₹52.20 லட்சம் மோசடி