×

வணக்கம் நலந்தானே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆன்மிகப் போலிகள்!

ஆன்மிகவாதி என்று சொல்லி கொண்டு ஏன் இப்படி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்? இவர்கள் உண்மையில் எதை விற்கிறார்கள்? மக்கள் எது வேண்டுமென்று அவர்களிடம் ஓடுகிறார்கள்? உண்மையான ஆன்மிகம் எது? உண்மையில் யார்தான் உண்மையான ஆன்மிகவாதி? எனக்கொரு குரு வேண்டும். அவர் உண்மையானவராக இருக்க வேண்டும். நான் இவர்தான் என் குரு என்பவரை எப்படி அறிவேன்?

இதுபோன்று ஏராளமான கேள்விகள் எல்லோரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. முதலில் ஒரு குருவை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அதுவும் உண்மையான குருவை நீங்கள் அறியமுடியாது. ஆன்மிகத்தின் மிக உயர்ந்த தளத்தில் நீங்கள் இருந்தாலொழிய அவர்தான் உங்கள் குரு என்று உங்களால் அறிய இயலாது. அந்த உண்மையான குரு ஒருக்காலும் நான் உனக்குக் குரு. நீங்கள் என் சீடர்கள் என்று சொல்லவே மாட்டார். அப்படிச் சொன்னாலும் முற்றிலும் அது உணர்வுத் தளத்தில், அனுபவ மண்டலத்தில் மட்டுமே நிகழும்.

எனவே, நீங்கள் தேடலுள்ளவராக மட்டுமே இருக்கமுடியும். உங்கள் தேடல் என்பது தீயைப் போன்று இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கேள்விகளோடும் திருப்தியுறாத பதில்களோடும் குழப்பங்களைக் கண்டு அஞ்சாமல் எது உண்மை? வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தேடத் தேட ஞானியர் உபதேசங்களைப் படிக்கப் படிக்க அதிலும் ஐயங்கள் எழ மீண்டும் அதற்கான பதில்களை தேடித் தேடி அலைந்து சென்று கொண்டேயிருக்கும்போது உங்களின் உண்மையான தேடலே திரண்டு குருவருகே நகர்த்தும். அப்போதும்கூட அந்த குரு வெளியே ஒரு உருவத்தில்தான் வருவார் என்று சொல்லமுடியாது.

உண்மையில் குரு என்பவர் வெளியே உடல் தாங்கி வந்தாலும், உங்களுக்குள் இருக்கும் சத்திய வஸ்து என்கிற ஆத்மாவே ஆகும். உள்ளிருக்கும் உங்களை இயக்குகிற சக்தி வெளியே ஒரு ரூபத்தில் வந்து உங்களை அகமுகமாக தள்ளுமே தவிர லட்சக் கணக்கில் என் பாதத்தில் வைத்து வணங்கு என்று சொல்லாது. குருவின் சந்நதி என்பது பேரமதியைத் தரவல்லது. உங்களின் அகங்காரம் பதுங்கி விடும் அபாயம் நிறைந்தது அது. நீ யார் அறிந்துகொள். உன்னை அறியாது நீ எதை அறிந்தாலும் அது வீணே என்றுதான் ஒரு உண்மையான ஞானி கூறுவார். அதற்கான வழிமுறைகளைக் கோடிட்டுக் காட்டுவார். அந்த திசை நோக்கி நகரச் சொல்வார்.

சாதாரண ஜனங்களின் லௌகீக வாழ்வின் பேராசையை ஒரு போலியானவர் நன்கு உபயோகப்படுத்திக்கொள்வார். அவர்களை ஞானநிலைக்கு உயர்த்துவதாகச் சொல்லிச் சொல்லி தான் பெரிய செல்வந்தனாக மாற வேண்டுமென வெறியோடு திரிவார். அதற்காக எத்தனை விதமான தந்திரங்கள் உண்டோ அத்தனை தந்திர வித்தை களையும் மேற்கொள்வார். அங்கு நிச்சலமான அமைதிக்கு வழியே இல்லை. ஆன்மிகத்தில் ஞானத்தின் பாதை என்பது ஒற்றையடிப் பாதைதான். தனியே ஒருவன் தீரனாக இருந்து நடக்க வேண்டும். தன்னுள் மூழ்க வேண்டும். இதுவல்லாது எங்கு சென்றாலும் அவர்கள் ஏமாற்றத்திற்குள்ளாவார்கள்.

ஆன்மிகத்தில் உயர்தளத்தை அடைய விரும்புவோர், அதற்கான தேடலை மேற்கொள்வோர் நிச்சயம் ஆன்மிகப் போலிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பார்கள். பெரும் ஞானியரையே தமது வழிகாட்டிகளாக வைத்துக்கொள்வார்கள். போலிகளின் தந்திரத்தில் வீழ்ந்தோர்கள் நிச்சயம் இது போலி என்பதை அறிவார்கள்.

அவர்களுக்கு நிச்சயம் தங்களுக்குள் மூழ்கி அகமுகப்பட்டு மட்டுமே பயணிப்பார்கள். வெளியிலுள்ள எந்த ஆடம்பரத்திற்கும் மயங்க மாட்டார்கள். ஞானம் என்பது வேறு. அது உங்களுக்குள்ளேயே உங்களிலிருந்து வேறாக இல்லை. அதுவே நீங்கள். அதை உணர்வதற்கு ஒரே வழி அகமுகமே. இந்தத் தெளிவு வந்தபிறகு குரு உங்களைத் தனியே அனுப்பிவிடுவார்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post வணக்கம் நலந்தானே! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!