×

என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒருவருக்கு கிடைக்கும் கல்வி அவரை நல்ல மனிதராக உருவாக்குகிறதா அல்லது அது அவர் செய்யும் தவறினை மறைக்க உதவுகிறதா? இந்தக் கேள்வி சில காலமாக என் மனதில் எழுந்து கொண்டிருந்தது. அதற்கான பதில்களைதான் நான் என் ஓவியங்கள் மூலம் பிரதிபலித்தேன்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த அப்ஷானா ஷர்மீர் இஷாக். இவரின் ஓவியங்கள் UNESCO சார்பில் துபாயில் பெண்களுக்காக நடைபெற்ற ‘ஆர்ட் கனெக்ட்ஸ் வுமன்’ ஓவியப் போட்டியில் விருது பெற்றுள்ளது. 108 நாடுகள் பங்கு பெற்ற இந்த ஓவியப் போட்டியில் இந்தியா சார்பாக அப்ஷானாவின் ஓவியங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் தன் வீட்டில் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே பெயின்டிங் செய்ய பிடிக்கும். வீட்டில் நான் அம்மாவிடம் வரைந்து காண்பிப்பேன். அவரும் அப்பாவும் எனக்கு மேலும் ஊக்கமளித்தாங்க. அம்மா நல்லா வரைவாங்க. அதனால் சின்ன வயசில் அவங்கதான் அதற்கான அடிப்படை விஷயங்களை சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால் எனக்குள் இருந்த ஓவிய ஆர்வத்திற்கு அவர்களால் ஓரளவுதான் சொல்லிக் கொடுக்க முடிந்தது. இதனை நான் முறையாக பயில வேண்டும் என்றால் தனிப்பட்ட பயிற்சி அவசியம். அதனால் 12 வயது முதல் இளங்கோ என்பவரிடம் முறையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். இன்றுவரை அவர்தான் என்னுடைய குரு. நான் ஓவியத்தில் இவ்வளவு தூரம் சாதிக்க அவர்தான் முக்கிய காரணம்.

நான் படிச்சது பொறியியல் என்றாலும், ஓவியம் மேல் இருந்த ஆர்வத்தினால் என் முழு கவனமும் அதில் செலுத்தினேன். மேலும் எனக்கு மற்றவர்களுக்கு சொல்லித்தர பிடிக்கும். ஆசிரியர் துறை மேல் தனிப்பட்ட மரியாதையும் உண்டு. அதனால் படிப்பை முடிச்சிட்டு ஓவியக் கலை ஆசிரியரானேன். எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேற எந்த துறையிலும் கிடைக்காது. முதலில் நேரடியாகத்தான் பயிற்சி அளித்து வந்தேன். கோவிட் காரணத்தால் ஆன்லைனில் பயிற்சியினை துவங்கினேன். அதன் பிறகு தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் மாணவர்கள் என்னிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் கடந்த பத்து
வருடமாக பயிற்சி அளிக்கிறேன்’’ என்றவர் தன்னுடைய ஓவியப் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் சென்னையில்தான் பிறந்தேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் நான் சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பார்த்து வளர்ந்து இருக்கேன். அதாவது, ரிக் ஷாவில் சென்ற நான் இப்போது மெட்ரோ ரயிலை பயன்படுத்துகிறேன். இது சென்னையின் வளர்ச்சிக்கான அடையாளம். அந்த அடையாளங்களை என்னுடைய ஓவியங்கள் மூலமாக பதிவு செய்ய விரும்பினேன். நான் சென்னையில் பார்த்த விஷயங்கள் எல்லாம் என் நினைவுகளில் பசுமை மாறாமல் பதிந்து இருக்கு. அதை அப்படியே ‘சென்னை சீரிஸ்’ என்ற தலைப்பில் வரைந்தேன்.

காரணம், பழைய மெட்ராசின் தோற்றத்தை திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் ஓவியங்கள் மூலம் மீட்க முடியுமே. அதனால் மெட்ராசில் இருந்து சென்னை வரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள்… ரிக்‌ஷா, டீக்கடை, பீச், மவுன்ட்ரோட் சாலை முதல் இன்று நாம் பார்க்கும் மெட்ரோ ரயில் வரை அனைத்தையும் நான் பகுதி பகுதியாக வரைந்தேன். அதைப் பார்க்கும் போது, பலருக்கும் அவர்கள் சின்ன வயசில் பார்த்த மெட்ராஸை நினைவில் கொண்டு வர முடிந்தது. மேலும் இன்றுள்ள எதிர்கால தலைமுறையினருக்கு சென்னை முன்பு எப்படி இருந்ததுன்னு தெரியணும். அதனால் கடந்த பத்து வருஷமா நான் சென்னை நகரத்தைதான் மிகவும் ரசித்து வரைந்து வந்தேன்’’ என்றவர், பெண்கள் சந்திக்கும் வன்முறைகளை தன் ஓவியங்களில் வரைய ஆரம்பித்த காரணத்தை கூறினார்.

‘‘சில ஆண்டுகளாக அதிகப்படியாக வெளியாகும் செய்திகள் பெண்கள் சந்திக்கும் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை. இதில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். வயசு வித்தியாசம் இந்த விஷயத்திற்கு கிடையாதுன்னு தான் சொல்லணும். அந்த செய்திகள் என்னை மனதளவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. ஆதரவு அளிக்கவும் யாருமில்லை. சொல்லப்போனால் இது ஒரு சமுதாயப் பிரச்னை என்று பார்க்க தவறுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் ெவளியே சென்றாலும் அவர்களை சமூகம் பார்க்கும் பார்வை வித்தியாசமாக உள்ளது. சொல்லப்போனால் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை அந்த சமுதாயமே ஒதுக்கிதான் வைத்திருக்கிறது. அதனாலேயே அந்தப் பிரச்னைக்கான குரலை எழுப்ப முடியாமல் பெண்கள் தங்களுக்குள் முடங்கி போய்விடுகிறார்கள்.

கல்வி அறிவு இருந்தாலும் இந்தப் பிரச்னைக்கு மட்டும் ஒரு தீர்வு காண முடிவதில்லை. இதை என் ஓவியம் மூலமாக வெளிப்படுத்த விரும்பினேன். ஒரு ஓவியமாக நாம் முன் வைக்கும் போது சமூகத்தில் அதற்கான கேள்வி எழும். பெண்களும் அது குறித்து பேச முன்வருவார்கள். அவர்கள் மனம் திறந்தால் தான் அதற்கு ஒரு தீர்வும் கொடுக்க முடியும். பல பெண்களின் மனதில் உள்ள அந்த அழுத்தத்தைதான் நான் என் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தினேன். நான் இந்த ஓவியங்களை ஓவியப்போட்டிக்காக பிரத்யேகமாக வரையவில்லை. போட்டிக்கான அறிவிப்பு வரும் முன்பே நான் இதனை வரைந்து முடித்திருந்தேன்.

‘ஆர்ட் கனெக்ட்ஸ் வுமன்’ ஓவியப்போட்டி ஒவ்வொரு வருடமும் துபாயில் பெண் ஓவியர்களுக்காக நடத்தப்படுகிறது. வருடா வருடம் ஒரு தலைப்பில் இந்த போட்டி நடைபெறும். அதற்கு ஏற்ப ஓவியங்களை நாம் வரைந்து விண்ணப்பிக்கணும். அந்த தலைப்புக்கு ஏற்ப சிறந்த ஒரு ஓவியத்தை அந்த ஒரு நாட்டின் சார்பாக தேர்வு செய்து விருது வழங்குவார்கள். இந்த வருட தலைப்பு ‘Inspire and Inclusion’. அதாவது, யாரையும் ஒதுக்காமல் அனைவரையும் இணைத்து பார்க்க வேண்டும்.

நான் வரைந்த பெண்கள் சார்ந்த ஓவியம் இந்த தலைப்பிற்கு சரியாக இருக்கும் என்பதால் விண்ணப்பித்தேன். கிட்டத்தட்ட 108 நாடுகளில் இருந்து பலர் விண்ணப்பித்திருந்தார்கள். நான் விண்ணப்பிக்கும் போது கூட என் ஓவியம் தேர்வாகும் என்று நினைக்கவில்லை. தேர்வானதும் அதற்கான சந்தோஷத்திற்கு அளவே இல்லை’’ என்றவர் அவர் வரைந்த ஓவியத்தின் பின்னணி பற்றி கூறினார்.

‘‘நவரசங்கள் போல் பெண்களின் கண்களில் தென்படும் அந்த உணர்வுகளை ஒன்பது விதமாக நான் வரைந்திருக்கிறேன். ஒருவரின் உணர்வுகளின் வெளிப்பாடுதான் கண்கள். நாம் சந்ேதாஷமாக சிரிக்கும் போது நம் கண்களும் சிரிக்கும். அதே போல் துயரமாக இருந்தால் அதையும் நம் கண்களிடம் இருந்து மறைக்க முடியாது. வெளிச்சம் போட்டு காண்பித்துவிடும். அதனால்தான் நான் பல உணர்வுகளை தங்களுக்குள் மறைத்துக் கொண்டு வாழும் பல பெண்களின் உணர்வுகளை என் ஓவியக் கண்கள் மூலமாக வெளிப்படுத்தினேன். இதில் கோபம், சந்தோஷம், அடிமைத்தனம், பயம், தைரியம் என ஒன்பது உணர்வுகளை கண்கள் மூலம் எப்படி அறியலாம் என்பதை ஓவியமாக வரைந்திருந்தேன். அதற்குதான் எனக்கு விருது கிடைத்துள்ளது’’ என்றவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல ஓவியக் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளார்.

‘‘ஒரு முறை பாரிசில் Salon d Automne என்ற ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் நான் சென்னை சீரிஸ் ஓவியங்களைதான் காட்சிப்படுத்தி இருந்தேன். அந்தக் கண்காட்சியில் பிகாசோ போன்ற பிரபல ஓவியர்கள் பங்கு பெற்று இருக்காங்க. அதில் நம்ம சென்னை ஓவியங்கள் காட்சிப்படுத்திய போது எனக்கு ரொம்பவே பெருமையா இருந்தது. மேலும் அங்குள்ள சென்னைவாசிகள் அதைப்பார்த்து, தங்களின் மலரும் நினைவுகளை என் ஓவியம் மீட்டுக் கொடுத்ததாக கூறிச் சென்றார்கள்.

ஓவியம் வரைதல் சிறந்த கலை. அதற்கான வாய்ப்புகள் உலகளவில் நிறைய இருக்கு. நாம்தான் அந்த வாய்ப்புகளை தேடிப் போகணும். திறமை இருந்தால் கண்டிப்பாக அதற்கான அங்கீகாரம் நம்மை தேடி வரும். நான் என் முதல் ஓவியக் கண்காட்சியை 12 வயசில் வைத்தேன். அதே போல் சுனாமி குறித்து நான் வரைந்த ஓவியம் ரூ.250க்கு முதன் முதலில் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து 2015ல் சென்னை சீரிஸ் ஓவியக் கண்காட்சி வைத்தேன். அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் லண்டன் ஓவியக் கண்காட்சியில் முதல் முறையாக என் சென்னை சீரிஸ் ஓவியங்கள் இடம்பெற்றது.

ஓவியங்கள்தான் என் உலகம். இன்னும் நிறைய வரையணும். குறிப்பாக பெண்கள் சார்ந்து, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை என் ஓவியம் மூலமாக இந்த சமூதாயத்திற்கு வெளிப்படுத்தணும். அவர்கள் தனியாக இல்லை. ஆறுதலாக பலர் இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்து அவர்கள் மனதில் தைரியத்தை கொண்டு வரவேண்டும்’’ என்றார் அப்ஷானா ஷர்மீர் இஷாக்.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

The post என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!