×

ஜோதிட ரகசியங்கள் பரிகாரங்கள் எப்போது பலனளிக்கும்?

ஜாதக தோஷங்களுக்குத் தீர்வாக சில பரிகாரங்களைச் சொல்லுகின்றார்கள். பரிகாரங்களைத் தீர்மானிக்கும் பொழுது, நம்முடைய ஆலயங்களின் தன்மைகளையும், அங்கே நடைபெற்ற புராணக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் பரிகாரங்களை சொல்லுகின்றார்கள். உதாரணமாக, நளதமயந்தி கதையில் வரக்கூடிய நளனின் சனிதோஷம், திருநள்ளாரில் தீர்த்தமாடி விலகியதைக் கொண்டு, சனிதோஷ நிவர்த்திக்கு திருநள்ளாறு சிறந்த தலம் என்று முடிவுக்கு வருகின்றார்கள். அதைப் போலவே, கிரகங்கள் வழிபட்டத் தலங்கள் அல்லது கிரகத் தோஷங்களால் தேவதைகள் வழிபட்டுப் பலனடைந்தத் தலங்கள் என்று பல தலங்கள், நம்முடைய தேசத்தில் இருக்கின்றன. இத்தகைய திருக்கோயில்களைப் பற்றிய ஞானம் இருந்தால் மட்டுமே ஜாதக தோஷப் பரிகாரத்தைச் சிறப்பாகச் சொல்ல முடியும். எது எப்படி இருந்தாலும், ஜாதகத் தோஷம் தீரவேண்டும் என்று சொன்னால், பரிகாரங்கள் செய்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கு பிறகு, நம்முடைய வாழ்க்கையை இறைவனுக்கு பயந்து, ஒழுக்கத்துடனும், தர்ம நியாயத்துடனும் வாழ்வதில்தான் பரிகாரத்தின் பலன் இருக்கிறது.

கணவன் – மனைவி உறவு கெடாமல் இருக்க

பொதுவாகவே, ஒரு ஜாதகத்தின் சப்தம ராசியான ஏழாம் இடத்து ராசியின் அமைப்புதான், களத்திர அமைப்பை தீர்மானிக்கிறது. அதற்கு துணை நிற்பது, இரண்டாம் இடம், எட்டாம் இடம், 12-ஆம் இடம் போன்ற மற்ற இடங்கள். கணவன் அமைவதெல்லாம் அல்லது மனைவி அமைவதெல்லாம் என்பது பெரும்பாலும் ஏழாம் இடத்தைச் சார்ந்திருக்கிறது. இதில் சூரியன் – சனி இணைப்பு இருந்தால், அவர்கள் வாழ்வில் குழப்பங்களும் கருத்து வேற்றுமைகளும் இருக்கவேச் செய்யும். கைப்பொருள் கரையும். சரியான திட்டமிடுதல் மற்றும் ஒருவருக் கொருவர் விட்டு தருதல் என வாழ்வதின் மூலம்தான், இந்த தோஷத்தை நாம் மிகச் சரியாகக் கையாள முடியும். எல்லோருடைய ஜாதகத்திலும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்யும். அந்த தோஷத்தை நம்மால் நீக்கிக் கொள்ள முடியாது. ஆனால், அதை தெரிந்துக் கொண்டு, கையாளுவதன் மூலம், நாம் எந்த தோஷத்தையும் எதிர்கொள்ள முடியும். ஜாதகத்தின் மூலம், ஏதாவது ஒரு நன்மை இருக்கிறது என்றால், ஒரு விஷயத்தைத் தெரிந்துக் கொண்டு, அதை எப்படிக் கையாள்வது என்பதுதான்.

இல்லறம் நல்லறமாக இனிக்க

இல்லறம் நல்லறமாக இனிக்க, சுக்கிரபலம் அவசியம். அமைதியான ஆனந்தமான வாழ்வைத் தருவது சுக்கிரன். அதோடு, ஆடம்பரத்தையும் அனுபவிக்கச் செய்பவர். சுக்கிரன் பலமாக இருந்தால், கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகம். நல்ல மனைவி அல்லது கணவன், நடனம், நாட்டியம், பாடல், என அனைத்து வகை கலைகள், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், காதல், இன்பம், கவர்ச்சியான தோற்றம், கேளிக்கை விடுதி, திருமணம், இவையெல்லாம் சுக்கிரனின் காரகங்கள். புதிய வாகனங்கள் கிடைப் பதற்கும், புதிய வஸ்திரங்கள் கிடைப்பதற்கும் இவரே காரணம்.

ஒருவருடைய இரண்டாம் இடம் பலமாக இருந்தாலும், சுக்கிரன் பலமாக இல்லை என்று சொன்னால், அவர் பணக்காரனாக இருந்தாலும்கூட, பழையச் சோறு சாப்பிடுவார். ஆடம்பரம் இல்லாத சாதாரண துணிமணிகளை அணிவார். ஆடம்பரத்தில் அவருக்கு விருப்பமே இருக்காது. வீட்டில் கார் இருந்தாலும் பெரும்பாலும் நடந்துதான் போவார். சுக்கிரனை பலப்படுத்தினால், சுக்கிரதோஷங்கள் விலகி, சுக்கிரனால் கிடைக்கக் கூடிய நன்மையான பலன்கள் அதிகரிக்கும்.

நவகிரக தோஷங்கள் விலகவும் நல்வாழ்வு கிடைக்கவும் என்ன பரிகாரங்கள்?

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு சந்தனக் காப்பு செய்யுங்கள். அபிஷேகத்திற்கு உதவுங்கள். அபிஷேகப் பொருட்களைத் தரலாம். பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் பிறதோஷங்கள் எதுவும் அணுகாது.

பேச்சுத்திறன்

சில பேர், அற்புதமாகப் பேசுவார்கள். இனிமையாகப் பேசுவார்கள். சிலர் நன்றாகப் பேசுவார்கள். ஆனால், ரசிக்காது. இன்னும் சிலர், எப்பொழுதும் கெட்ட வார்த்தைகளையும் சண்டைக்கு வித்திடும் வார்த்தைகளையும் பேசுவார்கள். இன்னும் சிலர், பேசினால் எப்பொழுதும் பேச்சில் அனல் பறக்கும். பிறரை புண்படுத்துகின்ற கடினமான சொற்களைப் பயன்படுத்துவார்கள். இதற்கெல்லாம் இரண்டு காரணங்கள் உண்டு.

*வாக்குக் காரகன் கெட்டு இருப்பதும்,

*வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் பலவீனமாக இருப்பதும் காரணமாகும். 6,8,12க்கு உரிய கோள்களால் இந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் காரணமாகும். இந்த இடங்களுக்கு, சுபதிருஷ்டி கிடைக்காவிட்டால் வாக்கு கெட்டுவிடும்.

*வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தால், இனிமையாகப் பேசுவார்கள்.

*சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால், சற்று கொடூரமாக பேசுவார்கள்.

*செவ்வாய், சூரியன் இருந்தால் எதற்கெடுத்தாலும் முன்கோபம் வந்துவிடும்.

*புதன் இருந்தால், அறிவுப் பூர்வமாகப் பேசுவார்கள். யோசித்து பேசுவார்கள்.

*குரு இருந்தால், உயர்ந்த வார்த்தைகளைப் பேசுவார்கள். வாக்கு ஸ்தானம் கெட்டிருந்தால் ஹயக்ரீவரை உபாசிக்கலாம்.

யாருக்கு மனவியாதி வரும்?

புத்தி காரகன் புதன். மனோகாரகன் சந்திரன். சந்திரன் கெட்டால் மனம்கெடும். புதன் கெட்டால் புத்திகெடும். சந்திரனும் புதனும் கேந்திரத்தில் இருக்கப் பெற்று, அவர்கள் இருக்கும் வீட்டுக்குரிய கிரகத்தினால் பார்க்கப்படாமலோ அல்லது சேராமலோ இருந்து, வேறு எந்த கிரகத்துடனும் கூடாமல் இருந்தால், அவருக்கு மனோவியாதி வரும் என்கிறது சாத்திரம். இந்த கிரகங்களுக்கு சுபகிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இருந்தால், அவர்களுக்கு மனவியாதி வராது. இம்மாதிரி தோஷம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி அர்ச்சனை செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை பௌர்ணமி பூஜை செய்வது நல்லது. தொடர்ந்து சில வாரங்கள் திருவண்ணாமலை கிரிவலம் வருவது இம்மாதிரியான தோஷங்களைக் குறைக்கும்.

The post ஜோதிட ரகசியங்கள் பரிகாரங்கள் எப்போது பலனளிக்கும்? appeared first on Dinakaran.

Tags : Nala ,Naladamayanti ,Theerthamadi ,
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...